Pages

Saturday, 15 February 2014

பாவம், தோஷம் போக்கும் மாசிமகம்.

மாசி மாத மகநட்சத்திரத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே மாசி மகம். மாசி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வரும் தலம் குடந்தை.
 இங்கு ஆண்டு தோறும் மாசிமக விழா நடைபெற்றாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமக விழா மிகவும் சிறப்பு. 

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, மகாநதி, பயோஷ்ணி, என்ற நவநதிகளின் தேவதைகள் பரமசிவனை வழிபட்டு எங்கள் புனித நீரில் உலக மக்கள் மூழ்கி எழுவதால் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் நாங்கள் சுமக்கிறோம். 

அதனால் நாங்கள் மாசுபட்டுள்ளோம். எங்களுக்கு விமோசனம் வேண்டும் உதவுங்கள் என வேண்டினர். அதற்கு சிவபிரான், நீங்கள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மூழ்கி எழுந்து கும்பேஸ்வரனாகிய எம்மை வழிபட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் எனக் கூறினார். 

நதி தேவதைகளும் அப்படியே செய்து விமோசனம் பெற்றனர். ஆண்டு தோறும் அவர்கள் அப்படி வரும் நாளே மாசிமகம். அன்று சகல புண்ணிய நதிகளிலும் நீராடும் பாக்கியம் பெறவே இந்த விழா நடக்கிறது.  இக்குளத்தை வணங்கினால் சிவபிரானோடு சேர்ந்து எல்லா தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். 

இக்குள நீரை சிறிதளவு உட்கொண்டாலே சகலவித பாவங்களும் தீரும். இங்கு நீராட வேண்டுமென மனதால் நினைத்தாலே கூட புண்ணியம் தான். மகாமகக் குளத்தில் 66 கோடி தீர்த்தங்கள் கலந்துள்ளன. 9 நதிகளும் மாசியில் வந்து கூடும். 

இக்குளத்திற்குள் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இக்குளத்தில் அமிர்தம் கலந்துள்ளதால் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் மகாமகத்தன்று நீராட ஏராளமான புண்ணிய பலன் கிடைக்கும். தொடர்ந்து 5 வருடங்கள் மாசி மகத்தன்று மகாமகக் குளத்தில் மூழ்கி எழுவதால் புத்திரபாக்கியம் கிட்டும். 

மாசி மகத்தன்று நீராடினால் வாரிசுகளின் ஆயுள் அதிகரிக்கும். மாசிமக நாளில் இங்கு அமைந்த 17 சிவாலயத்தையும், 5 விஷ்ணு ஆலயத்தையும் அத்துடன் மாமாங்கக் குளக்கரையில் பக்கத்துக்கு நான்கு வீதம் அமைந்த பதினாறு சின்ன சிவ சன்னதிகளையும் தரிசிப்பது நல்லது. 

மாசி மகத்தன்று இத்தனை சுவாமிகளும் இக்குளத்தில் தீர்த்தவாரி காண்பர். அவற்றுள் ஒரு ஆலயமான ஏகாம்பரேஸ்வரர் ஆலய இறைவன் ஏகாம்பரநாதருக்கு பதில் காமாட்சியம்மை தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். அப்பனும், அம்மையும் ஒன்றே என்பதை இதனால் அறியலாம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads