Pages

Sunday, 19 May 2013

துலாம் குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்-28.5.2013 முதல் 12.6.2014 வரை.


வீடு வாங்குவீர்கள்.
ஆற்றைக் கடக்கிற வரையில்தான் அண்ணன், தம்பி முறை அதை கடந்தப் பின் நீ யாரோ, நான் யாரோ என்றில்லாமல் பிறர் செய்த சிறு உதவியையும் மறவாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8ல் மறைந்து வரவு எட்டணா, செலவு பத்தணாவாக்கினாரே! ஏகப்பட்ட அலைச்சலையும், மன உளைச்சலையும் குருபகவான் கொடுத்தாரே! சேமிப்புகளை எல்லாம் கரைத்தாரே! மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட்டு சிக்கினீர்களே! நமக்கேன் வம்பு என்று சில இடங்களில் மௌனமாக இருந்த போதெல்லாம் தலைக்கனம் பிடித்தவன் என்று பட்டம் சூட்டப்பட்டீர்களே! 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் அமர்வதால் இனி தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிரச்னைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வுதேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள்.
    ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப திடீர் செல்வாக்கையும் வசதி, வாய்ப்புகளையும் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். குருபகவான் உங்களின் 3ம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் வரும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வீட்டில் தள்ளிப்போய் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நெடுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் தன, சப்தமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அறிவுப் பூர்வமாகவும் அனுபவப் பூர்வமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். பதவிகள் தேடி வரும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். என்றாலும் மனைவியுடன் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு கருப்பை கட்டி, மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைச் சுற்றல், யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும்.
      கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். முன்னேற்றம் தடைபடாது. எதிர்பார்த்த பணம் வரும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். என்றாலும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அடுத்தடுத்து வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும்.
      யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே, தன்னை யாரும் மதிக்கவில்லையே என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆர்டர்கள் வரும்.  கூட்டுத் தொழிலில் பங்குதாரர் பணிந்து வருவார். இரும்பு, ரியல் எஸ்டேட், சிமென்ட், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள்.
      வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ற நல்ல மணமகன் அமைவார். ஆரோக்யம் கூடும். புது வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவமாணவிகளே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள்.
       நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சகாக்களின் ஆதரவு கிட்டும். தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கற்பனைத் திறன் வளரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள்.  அரசாங்க சலுகைகள் கிடைக்கும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
      இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.
பரிகாரம்: 
கும்பகோணம்  மயிலாடுதுறை பாதையிலுள்ள திருவாடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads