ஆன்மிகத்தில் ஆர்வம் பிறக்கும் :
நாம் விரும்பியது கிடைக்காதபோது எது கிடைத்ததோ அதை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அனுபவ மொழியை அறிந்த நீங்கள், கிடைப்பதை வைத்து வாழக் கற்றவர்கள். அவ்வப்போது ஆழ்ந்த யோசனையில் மூழ்கும் நீங்கள், நான்கும் அறிந்தவர்கள். கடந்த ஓராண்டு காலமாக 9ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு ஏழரைச் சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வைத்தார். ஓரளவு கௌரவத்தை தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் 10ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. உத்தியோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் கலங்க வேண்டாம்.
உங்கள் ராசிநாதனான புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் குரு அமர்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மன இறுக்கத்திற்கு ஆளாவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அவ்வப்போது ஆழ்மனதில் ஒருவித பயம் வந்து நீங்கும். குரு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் சமயோஜித புத்தி வெளிப்படும். சாதுர்யமாகவும் இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மழலை பாக்யம் கிடைக்கும்.
உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குரு ஏழாம் பார்வையால் சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடனின் உதவியும் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். குரு 9ம் பார்வையால் 6ம் வீட்டை பார்ப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மகள் உங்களை புரிந்து கொள்வாள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரீஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள், முன்கோபம், திடீர் பயணங்களால் செலவுகள், பாகப்பிரிவினை, சொத்துப் பிரச்னைகள் வந்து செல்லும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அலைபேசியில் பேசிக் கொண்டே சாலைகளை கடக்க வேண்டாம். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் சுக சப்தமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் உத்யோகத்தில் வீண்பழி, அடிக்கடி இடமாற்றம் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துபோகும். எந்தச் சூழ்நிலையிலும் மனைவியை மரியாதை குறைவாக பேச வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, பைப்ராய்டு பிரச்னைகள் வந்து செல்லும். சிலர் உங்களைப்பற்றி அவதூறு பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தாயாருடன் மனத்தாங்கல் வரும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணவரவு, சொத்து சேர்க்கை உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
வேற்றுமதத்தவர் வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலமும் பணம் வரும். புதுவேலை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வியாபாரத்தில் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். புது முதலீடுகள் வேண்டாம். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் சம்பாதிப்பீர்கள். 10ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தக்க இடமாற்றமும் இருக்கும். பாராட்டுகள் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளிடம் பணிந்து போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளமும் சற்று தாமதமாகி கிடைக்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும். கல்யாணம் சிறப்பாக முடியும். காதல் விவகாரங்கள் வேண்டாமே! வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவ மாணவிகளே! கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது.
அதற்கான உழைப்பு வேண்டும். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலால் பதவியை இழக்க வேண்டி வரும். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கலைத்துறையினரே! சம்பளபாக்கி கைக்கு வரும். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும். விவசாயிகளே! தோட்டப் பயிர்களால் லாபமடைவீர்கள். பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போவது நல்லது.
இந்த குருமாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதாகவும் சாதிக்க வேண்டுமெனில் சகிப்புத் தன்மையும் விடா முயற்சியும் அவசியம் என்பதை அறிய வைக்கும்.
பரிகாரம்:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள தட்சிணாமூர்த்தியை தரிசித்து வணங்குங்கள். முதியோர் இல்லத்திற்கு சென்று உதவுங்கள்.

No comments:
Post a Comment