Pages

Sunday 19 May 2013

கும்பம் குரு பெயர்ச்சி-பொதுப் பலன்கள்,28.5.2013 முதல் 12.6.2014 வரை.


புதிய முயற்சிகளில் வெற்றி. 
எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும் என்பதை அறிந்த நீங்கள், பதவியும் பணமும் வந்தாலும் யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலா விதத்திலும் சின்னாபின்னமாக்கிய குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்வதால் இனி நல்லதே நடக்கும். கடந்த ஓராண்டு காலமாக மருத்துவர்களே உங்கள் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் மயங்கினார்களே! மருந்து, மாத்திரையால் வயிறும் புண்ணானதே! உருகுலைந்து போயிருக்கும் நீங்கள், இனி அழகும் ஆரோக்யமும் பெறுவீர்கள். அடிக்கடி தொல்லை தரும் வாகனத்தையும் மாற்றுவீர்கள். காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்ததே இனி அமைதி திரும்பும். சிலர் பணம் கொடுத்து உதவுவார்கள் என்று நம்பி வீடு கட்டத் தொடங்கி முடிக்க முடியாமல் தவித்தீர்களே! இனி வீடு கட்டி முடித்து கோலாகலமாக
கிரகப்பிரவேசம் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாகும்.
      எலியும் பூனையுமாக இருந்த கணவன்மனைவி இனி நகமும் சதையுமாக மாறுவீர்கள். குழந்தை இல்லாமல் கோயில் குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடிவரும். தாயாருக்கு இருந்த நோய் குணமடையும். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும். சுருங்கியிருந்த உங்கள் முகம் மலரும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். பதினோராவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சங்கம், டிரஸ்ட் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென்று நினைப்பீர்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பழைய கடனை நினைத்து சில நேரங்களில் அஞ்சுவீர்கள். வேற்றுமொழியினர் உதவிகரமாக இருப்பார்கள். காய்ச்சல், சளித் தொந்தரவு, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். அவசரத்திற்கு கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.
     29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் தன லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுப் பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடி வரும். மகளுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் கூடி வரும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும் வதந்திகளும் வரக்கூடும். முக்கிய சொத்துப் பத்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். சில சமயங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியது வரும்.
     ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில் களையிழந்து போயிருந்த கடை இனி அதிக வாடிக்கையாளர்களின் வருகையால் களைகட்டும்.  பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். கெமிக்கல், ஏற்றுமதி இறக்குமதி, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் நிலைப்போமா, நிலைக்க மாட்டோமா என்ற பயம் இனி நீங்கும்.
      உங்களை அலைகழித்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் இனி உண்டு. புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் கனவு நனவாகும். அடி வயிற்றிலிருந்த வலி, தூக்கமின்மை விலகும். காதல் கனியும்.  திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! உங்கள் ஆசைப்படி கல்யாணம் முடியும். மாணவ மாணவிகளே! நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு பரிசும் பாராட்டும் கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவை தட்டும். வீடு வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! எதிலும் வெற்றி பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். கட்சியில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களை மதித்து பேசுவார்கள். முக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை இனி குறையும். பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். கடன் தீரும்.
    இந்த குரு மாற்றம் வாடிப் போயிருந்த உங்களை வளம் பெற வைப்பதுடன், மதிப்பு, மரியாதையையும் வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை  மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads