மூன்றாம் பிறையன்று முடியை வெட்டினால் வேக வேகமாக வளரும் என்பதில் தொடங்கி, தினம் 100 முறை பிரஷ் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்
என்பது வரை கூந்தலைப் பற்றி ஏகப்பட்ட நம்பிக்கைகள்
அப்படி சில தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கம் தந்து, ஆரோக்கிய கூந்தலுக்கு ஆலோசனைகளும் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா.
‘‘முதல் விஷயம், தலைக்கு உபயோகிக்கிற எண்ணெய். முடியோட வளர்ச்சிக்கும், அதுல தடவற எண்ணெய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கூந்தல் வளர்ச்சிங்கிறது உள்ளுக்குள்ள எடுத்துக்கிற உணவு, அதுல கிடைக்கிற ஊட்டத்தைப் பொறுத்தது. எண்ணெய் தடவறதால, முடியோட வறட்சி மாறுமே தவிர, வளர்ச்சி மாறாது. எண்ணெய் தடவாம இருக்கவே முடியாதுங்கிறவங்க, சொதசொதன்னு தடவி மணிக்கணக்கா ஊறாம, பத்து நிமிஷம் வச்சிருந்து குளிச்சா போதும். ‘எண்ணெய் வச்சாதான் முடி படியும்... என்ன செய்ய’ன்னு யோசிக்கிறவங்க, ஹேர் சீரம் உபயோகிக்கலாம். கிட்டத்தட்ட எண்ணெய் மாதிரியானது. ஆனா, பிசுபிசுப்பா இருக்காது. முடியையும் அடர்த்தியா காட்டும்.
பொடுகு இருந்தா மட்டுமே பொடுகு ஷாம்பு உபயோகிக்கணும். மத்தவங்க, அவங்கவங்க முடியோட தன்மைக்கேத்தபடி எண்ணெய் பசை முடிக்கானது, வறண்ட முடிக்கானதுன்னு தேர்ந்தெடுத்து உபயோகிக்கணும். கண்டிஷனர் உபயோகிக்கிறப்ப, அதை மண்டைல படாம, முடியில மட்டும் தடவிக் குளிக்கணும். கண்டிஷனர்லயும், சாதாரண கூந்தலுக்கானது, கலரிங் செய்த கூந்தலுக்கானது, ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணின கூந்தலுக்கானது, சுருள் முடிக்கானதுன்னு நிறைய வகைகள் இருக்கு. தலை குளிச்ச பிறகு அப்படியே முடியில ஸ்பிரே செய்துக்கக் கூடிய கண்டிஷனர்களும் இருக்கு. யாருக்கு, எது பொருந்தும்னு தெரிஞ்சு தேர்ந்தெடுத்து உபயோகிக்கிறது கூந்தலுக்கு நல்லது’’ என்பவர், எப்போதும் கூந்தலை விரித்து விட்டபடி இருப்பது கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்.
‘‘தூங்கும் போதும், நீச்சலடிக்கிற போதும், உடற்பயிற்சியின் போதும் தலையை விரிச்சு விடாம, பின்னல் போட்டுக்கணும். அது, சிக்கும் அழுக்கும் சேராம காக்கும். அதே மாதிரி தலைமுடியை ரொம்பவும் இறுக்கமாகவும் கட்டக் கூடாது. எப்போதும் தலைக்கு மேல காட்டன் துணியைக் கட்டிக்கிட்டு, அதுக்கு மேல ஹெல்மெட் போடறது முடியைப் பாதுகாக்கும். இது எல்லாத்தையும் விட முக்கியமானது அடிக்கடி வகிட்டையும், ஹேர் ஸ்டைலையும் மாத்த வேண்டியது. ஒரே இடத்துல வகிடு எடுக்கிறப்ப, காலப்போக்குல அந்த இடத்துல முடி உதிரும். அப்பப்ப புதுசு, புதுசான ஹேர் ஸ்டைல்களை ட்ரை பண்றது, உங்க அழகை மட்டுமில்லாம, தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்

No comments:
Post a Comment