Pages

Monday, 4 June 2012

மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் எளிய வழி!

மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் எளிய வழி!
ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு; ஆனால் மன அமைதிதான் இல்லை
. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மனம் எங்கெல்லாமோ அலைப்பாய்கிறது. தாங்கள்தான் எனக்கொரு நல்வழி காட்டவேண்டும் என்றான்.
அவனுக்கு விவேகானந்தர் பதில் சொல்வதற்கு முன் ஒரு சிறு கதையைக் கூறினார். ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகையில், மூன்று ஞானிகள் நெடுநாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில் லயித்திருந்தனர். ஒரு நாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்து சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன் என்றார். அதற்கு மற்ற இருவரிடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை. மேலும் ஆறு மாதங்கள் ஓடின. அப்போது இரண்டாவது ஞானி, அது கறுப்புநிறக் குதிரையாக இருக்க வாய்ப்பில்லை, வெள்ளை குதிரை என்று நினைக்கிறேன் என்றார். இவரின் வாதத்துக்கும் மற்ற இருவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இன்னும் ஆறு மாதங்கள் கடந்தன. கொஞ்சம் சும்மா இருக்க மாட்டீங்களா? இப்படியே நீங்கள் வளவளவென்று பேசிக்கொண்டு இருந்தால் , நான் வேறு எங்காவது போய் என் தியானத்தை தொடர்கிறேன் என்று கோபப்பட்டார் மூன்றாவது ஞானி. இந்த மூன்று ஞானிகளும் கண்களை மூடி தியானிப்பதற்கு பதில் மனதை மூடி தியானித்திருந்தால் இறைவனை அடைந்திருக்க முடியும். அதுவே உண்மையான தியானம்.
இப்போது விவேகானந்தர் இளைஞனின் கேள்விக்கு பதில் கூறினார். மனஅமைதி பெற சிறந்த வழி சுயநலமற்ற பொதுசேவையில் ஈடுபடுவதுதான் என்கிறார். உன் வீட்டை சுற்றி வசிப்பவர்களின் ஏழைகள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய். கவனிப்பின்றி கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்! பிறருக்கு செய்யும் சேவையில் தான் உண்மையான மனதிருப்தி இருக்கிறது. மனத்தில் திருப்தி இருந்தால், அங்கே நிம்மதியும், அமைதியும் குடிகொள்ளும். இதை நீ உணராவிட்டால் உன்னால் நிச்சயம் தியானம் செய்ய முடியாது. உன் மனம் ஒருநிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கும் என்று இளைஞனுக்கு போதித்தார் விவேகானந்தர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads