ஐதராபாத்தில் இலவச மீன் மருத்துவம்.
2-வது நாளாக திரண்ட கூட்டம்: நெரிசலை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு
ஐதராபாத்தில் ஆண்டுதோறும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இலவசமாக மீன் மருந்து
வழங்குவது வழக்கம். இந்த மருந்தை உயிருள்ள மீனின் வாயில் வைத்து நோயாளிகள் விழுங்குகிறார்கள். இந்த ஆஸ்துமா மருந்தை பாஜினி ஹரிநாத் கவுடு குடும்பத்தினர் வழங்குகிறார்கள். இம்மருந்து நேற்று ஐதராபாத் புறநகர் பகுதியாக காட்டேதான் விளையாட்டு மைதானத்தில் வைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
முதல் நாளான நேற்று ஆஸ்துமா மீன் மருந்து வாங்க கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒருவருக்கொருவர் முண்டியடித்து ஆஸ்துமா மருந்து வாங்கச் சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி மராட்டியத்தை சேர்ந்த கோரக் பாட்டீல் (75) என்பவர் மரணம் அடைந்தார். 121 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.
காயம் அடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்று 2-வது நாளாக காட்டேதான் மைதானத்தில் இலவச ஆஸ்துமா மருந்து வழங்கப்பட்டது. மருந்தை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். நெரிசலை கட்டுப்படுத்த இன்று ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் ஏற்படுவதை தடுக்க மரக்கட்டைகளால் ஏராளமான கம்பார்ட்மென்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மருந்து வாங்கும் பகுதிக்கு ஒவ்வொருவராக அனுப்பப்பட்டனர். ஆந்திர அரசு சார்பில் நோயாளிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. கூடுதல் அரசு பஸ்களும் விடப்பட்டது. ஹரிநாத் குடும்பத்தினர் கூறும்போது, இன்று ஆஸ்துமா மீன் மருந்து உட்கொள்ள வந்த அனைவருக்கும் மருந்து வழங்கப்படும். போதுமான அளவுக்கு எங்களிடம் மருந்துகள் உள்ளன. நேற்று ஒருசிலர் தாமதமாக சென்றால் மருந்து கிடைக்காது என்று வதந்தியை பரப்பியதால்தான் நெரிசல் ஏற்பட்டது.
ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பதால் எந்தவித குளறுபடியும் இல்லாமல் மருந்து வழங்கப்படுகிறது என்றனர்.

No comments:
Post a Comment