Pages

Saturday, 9 June 2012

திருப்பதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு


திருப்பதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு:
பாட்டில் தண்ணீரில் குளிக்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் தரிசன நேரத்துக்கு காத்திருக்க வேண்டி இருப்பதால் அங்குள்ள கோவில் விடுதிகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். தற்போது கோடை காலம் என்பதால் திருப்பதியிலும், திருமலையிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
குடிநீர் வசதி ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் தங்கி இருக்கும் அறைகளில் குடிநீர் வசதி இல்லை. மேலும் குளிக்க மற்றும் இதர உபயோகத்துக்கும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர். நேற்று முன்தினம் தண்ணீர் தட்டுப்பாடு உச்சகட்டத்தை எட்டியது. அறைகளில் தங்கி இருந்த பக்தர்கள் 6 மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.
இதே போல் மொட்டை போடும் இடத்தில் உள்ள குளியல் அறைகளிலும், லாக்கர் ஹாலில் உள்ள குளியல் அறைகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் மொட்டை அடித்த பக்தர்கள் குளிக்க முடியாமல் காத்திருந்தனர். தகவல் கிடைத்ததும் தேவஸ்தான அதிகாரிகள் விரைந்து சென்று தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுத்தனர். 6 மணி நேரத்துக்கு பின்பு நிலைமை சீரானது.
தண்ணீர் இல்லாமல் தவித்த பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தரிசன நேரத்துக்கு செல்ல வேண்டி இருந்ததால் கடைகளில் விற்பனையான மினரல் வாட்டர் பாட்டில்கள் வாங்கி குளித்துச் சென்றனர். இதனால் திருமலையில் மினரல் வாட்டர் பாட்டில்கள் விற்பனை அமோகமாக இருந்தது. குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில கடைகளில் கூடுதல் விலைக்கு குடிநீர் விற்கப்பட்டது.
திருமலை விடுதியில் தங்கி இருந்த விஜயவாடா பக்தர் ராம்மோகனராவ் கூறியதாவது:-
நான் பாலாஜி தரிசனத்துக்கு வந்தேன். எனக்கு வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) காலை 10.30 மணிக்கு தரிசன நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்று காலையில் விடுதியில் உள்ள குழாய்களில் தண்ணீர் வரவில்லை. காலையில் எழுந்து முகத்தை கழுவ கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டேன். ஆனால் தரிசன நேரம் நெருங்கியதால் மினரல் வாட்டர் பாட்டில்கள் வாங்கி பல் துலக்கி குளித்து முடித்தோம். 6 மணி நேரம் கழித்துதான் தண்ணீர் வந்தது.
இதுபோன்ற தட்டுப்பாட்டை இதுவரை நான் பார்த்தது இல்லை. தண்ணீருக்காக மட்டும் நூற்றுக்கணக்கில் பணம் செலவானது. திருப்பதி தரிசனம் இப்போதெல்லாம் அதிகம் செலவழித்தால்தான் கிடைக்கிறது. குடும்பத்துடன் ஆயிரக்கணக்கில் செலவழித்து ரெயில் டிக்கெட் எடுத்து இங்கு வந்து தங்கி இருக்கிறோம். ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் குளிக்க கூட முடியாமல் எனது தரிசனம் அர்த்த மற்றதாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் தண்ணீர் இன்றி அவதிப்பட்ட பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads