சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தானியங்கி எந்திரம் மூலம் டிக்கெட்:
மின்சார ரெயில் டிக்கெட் எடுக்கும் கவுண்டர்களில் பயணிகள் கூட்டத்தை குறைப்பதற்காக தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
பயணிகள் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்கவும், வரிசையில் நிற்காமல் ஸ்மார்ட் கார்டு மூலம் தானியங்கி டிக்கெட் எந்திரம் வழியாக பெறவும் வசதி செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை (சென்னை பீச்), பூங்கா நகர், தாம்பரம், தியாகராய நகர், கிண்டி உள்ளிட்ட பல ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ரூ. 100, ரூ. 50 மதிப்பிற்கு கார்டு பெற்றுக்கொண்டு அதன் மூலம் ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில் கார்டை செலுத்தி எந்த ஊருக்கு பயணம் செய்ய விரும்புகிறாமோ அதற்கான பட்டனை அழுத்தினால் டிக்கெட் கையில் கிடைத்து விடும்.
நாம் பயண செய்யும் கட்டணத் தொகை ஸ்மார்ட் கார்டின் மொத்த மதிப்பில் இருந்து குறைந்து விடும். தொகை முழுவதுமாக தீர்ந்து விட்டால் மீண்டும் பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மிக எளிமையான முறையில் டிக்கெட் பெறும் இந்த திட்டம் வெற்றி பெறவில்லை. சாதாரண பயணிகள் ஸ்மார்ட் கார்டு மூலம் டிக்கெட் எடுக்க சிரமப்பட்டனர். அதனால் ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்ட எந்திரங்கள் பயனற்று தூங்கின. காட்சிப் பொருளாகவே இருந்தது. அதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
டிக்கெட் கவுண்டர்களில் நாளுக்கு நான் கூட்டம் அதிகரித்தது. முக்கிய ரெயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் பெறும் நிலை இருந்து வருகிறது. பல கோடி மதிப்புள்ள தானியங்கி எந்திரங்கள் பயனற்று போவதை அறிந்த ரெயில்வே துறை இப்போது விழித்துள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டம் தோல்வி அடைய என்ன காரணம் என்று ஆராய்ந்தார்கள்.
பயணிகள் சிரமமின்றி எளிதாக டிக்கெட் எடுக்க வழிமுறைகளை சொல்லவும், உதவி செய்யவும் ஒருவர் அங்கு நியமிக்கப்பட்டால் பயன் உள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து டிக்கெட் எந்திரம் உள்ள கவுண்டர்களில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்களை பணி நியமனம் செய்ய தெற்கு ரெயில்வே வணிகத்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை உள்பட 40 முக்கிய புறநகர் ரெயில் நிலையங்களில் இந்த மாத இறுதிக்குள் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு தானியங்கி எந்திரம் செயல்படத் தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வணிக தலைமை மேலாளர் பிரியம்வதே விஸ்வநாதன் கூறியதாவது:-
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வணிக தலைமை மேலாளர் பிரியம்வதே விஸ்வநாதன் கூறியதாவது:-
பரீட்சார்த்த முறையில் 6 மாதத்திற்கு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமிக்க இருக்கிறோம். திருவான்மியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சைதாப்பேட்டை, கோட்டை, கடற்கரை (பீச்), அரக்கோணம் உள்பட 40 முக்கிய ரெயில் நிலையங்களில் 70 தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் உள்ளன. இவற்றின் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் இது அமைந்துள்ளது. பொதுமக்களுக்கு உதவும் வகையில் தானியங்கி எந்திரத்திற்கு ஊழியர் நியமனம் செய்யப்படும் பட்சத்தில் இத்திட்டத்திற்கு பலரும் மாறிச் செல்ல வாய்ப்பு உள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Key word:தொ.நுட்பம்

No comments:
Post a Comment