எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த 'அடிமைப்பெண்' உள்பட பல சிறந்த படங்களை கே.சங்கர் டைரக்ட் செய்தார். 1963-ம் ஆண்டு சரவணா பிலிம்ஸ்க்காக 'பணத்தோட்டம்' படத்தை கே.சங்கர் டைரக்ட் செய்தார்.
அதன்பின் 'சந்திரோதயம்' (1966), 'குடியிருந்தகோவில்' (1968), '
அடிமைப்பெண்' (1969), '
பல்லாண்டு வாழ்க' (1975) ஆகிய படங்களை இயக்கினார்.
இதில், 'குடியிருந்தகோவில்' எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்' பாடலும், பாடல் காட்சியும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
அந்தக் காட்சியில், எம்.ஜி.ஆர். மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருந்தார். ஆனால், முதலில் அந்த பாடலுக்கு நடனம் ஆட எம்.ஜி.ஆர். மறுத்து விட்டார் என்பது, பலருக்கும் தெரிந்திராத உண்மை.
இதுபற்றி சங்கர் கூறியதாவது:-
'ஆடலுடன் பாடலைக் கேட்டு.... பாடலுக்கு விஜயலட்சுமியுடன் சேர்ந்து நடனமாட வேண்டும்' என்று எம்.ஜி.ஆரிடம் கூறினேன். 'விஜயலட்சுமி நீண்டகாலம் நன்றாக நடனம் ஆடி தேர்ச்சி பெற்றவர். அவருடன் நான் எப்படி நடனம் ஆடமுடியும்?' என்று எம்.ஜி.ஆர். கோபமாக கூறிவிட்டுச் சென்றுவிட்டார். நான் அவருக்காகக் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். நடனம் ஆட சம்மதித்தார்.
நடனக் காட்சியைப் படமாக்கத் தொடங்கினோம். எம்.ஜி.ஆருக்கு எங்கிருந்துதான் அப்படியொரு வேகம் வந்ததோ தெரியவில்லை. மிகப்பிரமாதமாக ஆடினார். பாடல் காட்சியை எடுத்து முடித்தவுடன், 'இதை யாருக்கும் போட்டுக் காட்டக்கூடாது. நான்தான் முதலில் பார்ப்பேன்' என்று கூறினார்.
எடிட்டிங் முடிந்து, பாடல் காட்சியை அவரிடம் கொடுத்தேன். எம்.ஜி.ஆர், சில தயாரிப்பாளர்களையும் அழைத்து வந்து, பாடல் காட்சியை திரையிட்டுப் பார்த்தார். அக்காட்சியைப் பார்த்த பட அதிபர்கள் கை தட்டிப் பாராட்டினார்கள். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, 'என்னைக் கொடுமைப்படுத்தி ஆட வைத்தது இவர்தான்' என்று மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார். நான் மற்றொரு செய்தியையும் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரிடம்
'2-வது டேக்' கேட்ட இயக்குனர்கள் கிடையாது.
'பணத்தோட்டம்'தான், எம்.ஜி.ஆர். நடிக்க நான் டைரக்ட் செய்த முதல் படம். முதல் நாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். வசனம் பேசும் ஒரு காட்சியை 7 'டேக்' கேட்டு எடுத்தேன்.
7-வது டேக் முடிந்த பிறகு, எம்.ஜி.ஆர். எனது தோளில் கை போட்டபடி 'நீங்கள் எங்கிருந்தோ வந்து, எதையோ என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள். ராமச்சந்திரன் என்ன பண்ணுவான் என்பதை கேளுங்கள். நான் கொடுக்கிறேன்' என்றார்.
நான் சிவாஜி படத்தை டைரக்ட் செய்துவிட்டு, அதே நடிப்பை எதிர்பார்த்ததைத்தான், அவர் அப்படி கூறினார்.'
இவ்வாறு சங்கர் கூறினார்.
எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த படங்கள் மூன்றுதான். அவற்றில் 'நாடோடி மன்னன்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை அவரே டைரக்ட் செய்தார். மற்றொரு படமான 'அடிமைப்பெண்'ணை டைரக்ட் செய்யும் வாய்ப்பை கே.சங்கருக்குக் கொடுத்தார்.
இதில் எம்.ஜி.ஆர். கூனனாக வருவார். உடலை வருத்திக் கொண்டு, சிறப்பாக நடித்தார். சிங்கத்துடன் அவர் மோதும் காட்சியும் நன்கு அமைந்தது. பல காட்சிகள் ஜெய்பூர் அரண்மனையிலும், பாலைவனத்திலும் படமாக்கப்பட்டன.
'அடிமைப்பெண்' அனுபவங்கள் பற்றி சங்கர் கூறியதாவது:-
'பாலைவனக்காட்சிகளை எடுக்க, 1,000 ஒட்டகங்களைப் பயன்படுத்தினோம். 'எல்லா ஒட்டகங்களும் படத்தில் தெரியுமா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'தெரியுமë' என்றேன்.
ஆயிரம் ஒட்டகங்களையும், வளைந்து வளைந்து போகச் செய்து, படம் பிடித்தோம். அக்காட்சி சிறப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர், மிகவும் மகிழ்ந்து பாராட்டினார். அரண்மனையின் சுற்றுசுவரை இடித்து, 'கிரேன்' மூலமாக 'ஆயிரம் நிலவே வா' பாடல் காட்சியைப் படமாக்கினேன்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடுவில் நிற்க சுற்றிலும் மேல் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த வைரங்கள் தெரியும்படி படம் எடுத்தோம். என் மேல் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால், அவரது சொந்தப் படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பை அளித்தார்.'
இவ்வாறு சங்கர் கூறினார்.
எம்.ஜி.ஆரை வைத்து 'கலங்கரை விளக்கம்', 'பல்லாண்டு வாழ்க', 'இன்றுபோல் என்றும் வாழ்க' உள்பட பல படங்களை சங்கர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய 6 மொழிகளில் 100 படங்களை சங்கர் டைரக்ட் செய்துள்ளார். இவற்றில் இந்தியில் மட்டும் இயக்கிய படங்கள் 10.
இளைய தலைமுறையில், கமலஹாசன், விஜயகாந்த் ஆகியோர் சங்கர் டைரக்ஷனில் நடித்து இருக்கிறார்கள். கே.சங்கரின் மனைவி பெயர் காமாட்சி அம்மாள்.
இவர்களுக்கு விஜயலட்சுமி, ருக்மணி, ராதா ஆகிய மகள்களும், சிவபிரசாத், சசீதரன், கணேசன் ஆகிய மகள்களும் உள்ளனர். மூத்த மகள் விஜயலட்சுமி எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் ராமமூர்த்தியை மணந்துள்ளார்.
கே.சங்கரின் மகன் சிவபிரசாத் 1991-ம் ஆண்டு 'கல்யாணராசி' என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். பேரன் விக்னேஷ், அரவாணிகளை வைத்து 'அச்சுப்பிழை' என்கிற படத்தை டைரக்ட் செய்து உள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் கே.சங்கர்.

No comments:
Post a Comment