Pages

Thursday, 14 June 2012

காமராஜரின் வாழ்க்கை - சினிமா

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழகத்தின் முன்னாள் தமிழக முதல்வர்  பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
மக்களின் ஆதரவைப் பெற்ற அத்திரைப்படம், பத்திரிகைகள், ஊடகங்கள், சினிமா விமர்சனங்களின் ஏகோபித்த பாராட்டினையும், தமிழக அரசின் அந்த ஆண்டிற்கான சிறப்பு விருதினையும் பெற்றது.
இப்போது அத்திரைப்படம், நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, மேலும் பல புதிய காட்சிகளோடு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது.
காமராஜர் இந்திய விடுதலைக்காக காந்தியின் வழி நின்று ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்து பொற்கால ஆட்சியை தந்தவர். இரண்டு முறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து சர்வதேச புகழ் பெற்றவர்.  காந்தியவாதியான இவர் இறுதிக்காலம் வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர் அவர் மறைந்த போது அவரிடமிருந்த சொத்து ரூ.110 தான்.
தற்போது தேசமெங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கியுள்ளன. அதில் பெருவாரியாக இளைஞர்களே பங்கேற்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளின் ஊழல், ஆடம்பர மற்றும் அதிகார மோகம், நேர்மையற்ற செயல்பாடுகள் நம் இளைஞர்களிடையே மாற்று அரசியல் குறித்த சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காமராஜரின் நேர்மை, எளிமை, அரசியல் ஆளுமை, நிர்வாக செயல்பாடுகள் குறித்து இன்றைய இளைஞர்கள் அறியும் போது அது அவர்களுக்கு சிறந்த அரசியல் வழிகாட்டியாக அமையும். தேசத்தை வழிநடத்த உதவும். 
இதற்கென தற்போது புதிதாக 15 காட்சிகள் கணினி வரைகலை துணையுடன் படமாக்கப்பட்டு வருகிறது. காமராஜரின் ரஷ்யப்பயணம் இணைக்கப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டிடிஎஸ் ஒலி அமைப்பு, புதிய பரிமாணத்துடன் இசைஞானி இளையராஜாவின் ஆத்மார்த்தமான இசை என பிரமாண்டமாக உருவாகி வருகிறது 'காமராஜ்' திரைப்படம்.
அ.பாலகிருஷ்ணன் தயாரித்து, இயக்கும் இத்திரைப்படம், காமராஜரின் 110-வது பிறந்த தினமான ஜுலை 15 - ல் திரைக்கு வருகிறது. 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads