கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னி பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப்படுகிறது.
இப்படி சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் `சரவணபவ' என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது முருகனே என்பது அருணகிரியார் கூற்று. கார்த்திகை விரதமே கார்த்திகை பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக்கூறுவார்கள்.
சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி போற்றி வளர்த்ததும், குமாரன் வளர்ந்ததும், அவனை சேர்த்து ஒன்றாக்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று சொன்னார்.
மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார். இந்த கார்த்திகை விரதம் தான் கிருத்திகை விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கும் பொருந்தும். என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாகக் கருதுகின்றனர்.
உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. ஆடி மாத கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயணம் திருமணம், உபநயனம், கிரகப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.
ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
அதனால் தான் தை மாதக் கார்த்திகையை விட ஆடிக்கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
No comments:
Post a Comment