Pages

Wednesday 26 June 2013

கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு சிறப்பு வசதிகள்: அண்ணா பல்கலைக்கழகம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 95 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அண்ணா பல்கலைகழகம் கவுன்சிலிங் நடத்தி வருகிறது.

ஒரு லட்சத்து 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களது கட்-ஆப் மார்க் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 3 ஆயிரம் முதல் 5 ஆயிம் பேர் வரை கலந்து கொள்கிறார்கள்.

கலந்தாய்விற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள், கார், பஸ் போன்ற வாகனங்களில் வந்து விடுகின்றனர்.

ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முதல் நாள் சொந்த ஊரில் இருந்து புறப்பட வேண்டும். அதுவும் காலையில் கவுன்சிலிங் நடப்பதாக இருந்தால் அதிகாலை சென்னை வந்து சேர வேண்டும்.

கலந்தாய்வு காலை 7.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை நடக்கிறது. கவுன்சிலிங் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆஜராக வேண்டும். அதனால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் முதல் நாள் மாலையில் பெற்றோருடன் புறப்பட்டு சென்னைக்கு அதிகாலை வந்து சேருகிறார்கள்.

அவர்கள் பெட்டி, படுக்கையுடன் நேராக அண்ணா பல்கலைகழகத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் குளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் அருகில் உள்ள பல்கலைக்கழக கட்டிடத்தில் குளித்து, ஆடை மாற்றி புறப்பட இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அறை எடுத்து தங்கி குளித்து விட்டு வந்தால் தாமதமாகி விடும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வோம் என்று பயந்து பெரும்பாலான வெளியூர் பெற்றோர்கள் அண்ணா பல்கலைகழகத்திற்கு அதிகாலை 4, 5 மணிக்கே சென்று விடுகின்றனர்.

பல்கலை கழக வளாகத்தில் இரவை பகலாக்கும் மின் விளக்குகள் எல்லா பக்கமும் கண்ணை பளிச்சிடுகின்றன.

குடும்பமாகவும், நண்பர்களாகவும், உறவினர்களாகவும் அதிகாலையில் மாணவ-மாணவிகள் கலந்தாய்விற்கு பரபரப்பாக புறப்படும் காட்சிகள் சற்று வித்தியாசமாகவே இருக்கின்றன.

கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்கள் எதார்த்தத்தை அங்கு காணமுடிகிறது.

குளிப்பது, உடைகளை மாற்றுவது, எனவும், மகளின் ஜடையை சிக்கல் எடுத்து அவசர அவசரமாக பின்னும் காட்சிகளும் அங்கே மரத்தடியில் அரங்கேறுகின்றன. அதிகாலையிலேயே அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பாக காணப்படுவதும், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக பெற்றோர்கள் கலந்து பேசி கொள்வதும் ஒரு மாறுபட்ட சூழல் அங்கு நிலவுகிறது.

குடிநீர் வசதி, கேண்டின் வசதி, கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். தகவல் போன்றவற்றை பல்கலைக்கழகம் வழங்குகிறது. திகைக்கும் பெற்றோர்களுக்கும் டென்ஷனில் இருக்கும் மாணவர்களுக்கும் தெளிவான ஆலோசனை, அறிவுரைகளை மைக் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கும் போது அடுத்த பிரிவு தயாராக வரிசையில் நிற்க அறிவுறுத்துவதும், அதையடுத்து சான்றிதழ்கள் சரிபார்ப்பதும் தொடர்ந்து கலந்தாய்வு அறையில் அமர்வதும் என அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டு பெற்றோர்களுக்கு குழப்பம் எதுவும் இல்லாமல் நடத்தப்படுகிறது.

ரூ.5000-க்கு வங்கி செலான் எடுப்பது முதல் வரிசையில் நின்று சான்றிதழ்கள் வரிசையாக அடுக்கி கொடுப்பது உள்ளிட்ட பல பணிகளை பல்கலைகழக ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்துகிறார்கள். இது மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. 1 1/2 மணி நேரம் கலந்தாய்வு முடித்த பின் மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிநீர், கழிப்பிட வசதி, கல்லூரிகள் காலி இடங்கள் குறித்த தகவல் அறிய மிகப்பெரிய திரை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பாதுகாப்பு ஊழியர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் பல்கலைகழக வளாகத்தில் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். மொத்தத்தில் அண்ணா பல்கலைக்கழகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த கல்வி திருவிழா ஒரு மாதம் வரை நீடிக்கும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads