சித்திரகுப்தன் என்பவர் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார். இவர் பிரம்மதேவனின் உடலிலிருந்து சித்ரா பவுர்ணமி தினத்தில் தோன்றியதால் இவருக்கு சித்ரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது. இவர் எமதர்மனின் சபையில் இருந்து சகல ஜீவராசிகளின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதுவதை கடமையாக கொண்டுள்ளார்.
பிரம்மதேவன் இவருக்கு இப்பணியை வரையறுத்தார். ஜீவனின் மரண காலத்தில் சித்ரகுப்தன் கொடுக்கும் பாவ புண்ணியக் கணக்கின் முடிவை வைத்தே எமதர்மன் ஜீவனுக்கு தண்டனை அளிப்பதும், பிரம்மா அதன் தலையில் எழுதுவதும் அமையும். ஆகவே சித்ரகுப்தரை தொழவேண்டியது மிக, மிக அவசியமாகிறது.
பூஜை முறை:-
சித்ரகுப்தனை வேண்டி பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் இல்லத்தில் மாக்கோலம் போடுவார்கள். அதன் ஒரு பகுதியில் சித்திரகுப்தனை போலவே கோலம் போடுவார்கள். அருகில் ஏடும் எழுத்தாணியும் வைப்பார்கள். விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்வார்கள். வெண் பொங்கல் இடுவதும் உண்டு.
இட்ட பொங்கலுடன் இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய் தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன், நீர், மோர், பழங்கள், கண் திறந்த இளநீர், பானம் இவைகளை வைத்து படைப்பார்கள். பலகாரங்களும் செய்து வைக்கலாம். இவைகளை வைத்து படைத்து மதியத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவ்வுணவையே உட்கொள்வார்கள்.
சித்திர புத்திர நாயனார் கதை புராணம் ஆகியவற்றை படிப்பார்கள். காலையில் கோவிலுக்கு சென்று பிள்ளையார், நந்தி, சிவபெருமான் மூன்று தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள். விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்தவுடன் பசுவுக்கு வெல்லம் கலந்த பச்சரிசி வைப்பார்கள். ஒரு வேளை தான் உணவு உட்கொள்ள வேண்டும்.
பலன்:-
சித்திரபுத்திர நாயனார் நம் கணக்குகளை வைத்திருக்கும் கணக்குப்பிள்ளை என்பதை முன்பே அறிந்தோம். இவ்விரதத்தால் அவர் மனம் மகிழ்ந்து நம் பாவக்கணக்குகளை குறைப்பார். இதனால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இது இதிகாச புராணங்களால் வரையறுக்கப்பெற்ற முறையாகும்.
சித்திரபுத்திர நாயனார் விரதத்தால் நமக்கு பாவம் செய்யும் மனப்பான்மையே மறைந்துவிடும். மேலும் இவ்விரதம் இருப்பவர்களுக்கு எமபயம் கிடையாது எனக் கூறுகிறார்கள். அன்று பசும்பால், பசுமோர் சாப்பிடக்கூடாது. உப்பில்லாமல் சாப்பிடவும். எருமைப்பாலில் பயத்தம் பருப்பு பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.
சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள். சிலர் உன்னுடன் பிறக்கவில்லை. உன் மனைவியுடன் பிறந்தேன் என்று பிரார்த்திப்பார்கள். சித்ரகுப்த பூஜை புத்தகத்தை பார்த்து பூஜை செய்யலாம். இதை ஆடவர்களும் செய்வதுண்டு.

No comments:
Post a Comment