பாராளுமன்றத்தில் இன்று 2013 - 14ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த வளர்ச்சி 8 சதவீதமாக உயர்த்துவது மிகவும் சவாலானதாக உள்ளது.
2011-12-ல் உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக சரிந்தது. இதே நிலை நீடிப்பதால் நமது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது சவால் நிறைந்ததாக உள்ளது. என்றாலும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை தீவிரப்படுத்துவதே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதன்மை இலக்காக உள்ளது.
நாட்டில் பொருளாதார வளர்ச்சியை திறம்பட முன்னெடுத்து செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டை நமது நாடு நோக்கி ஈர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கச்சா எண்ணை, தங்கம் இறக்குமதியால் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையை சமாளிக்கவே அன்னிய முதலீட்டுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது. நிதி பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே எல்லா வகை செலவினத்தையும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே உணவு பணவீக்கம் நீடிப்பதும் கவலை தருவதாக உள்ளது. அரசின் திட்ட செலவினங்கள் வரும் ஆண்டில் 20 சதவீதம் அதிகரிக்கும். எனவே நிதி நிர்வாகத்தை சிறப்பாக செய்யவேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு துறைக்கும் இருக்கிறது.
11-வது திட்ட காலத்தில் சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்தை எட்டும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து முனைகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
12-வது ஐந்தாண்டு திட்டத்தில் திட்ட செலவு ரூ. 14 லட்சத்து 30 ஆயிரத்து 825 கோடியாக இருக்கும். பட்ஜெட் செலவு ரூ. 16 லட் சத்து 65 ஆயிரத்து 297 கோடியாகவும், திட்ட செலவு ரூ. 5 லட்சத்து 55 ஆயிரத்து 322 கோடியாகவும் இருக்கும்.
இந்த நிதியாண்டில் திருத்தப்பட்ட செலவு இலக்கு ரூ. 14 லட்சத்து 30 ஆயிரத்து 825 கோடியாகும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ மகளிர் - குழந்தைகள் நலத்துறைக்கு கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கு ரூ. 41,561 கோடி வழங்கப்படும். சிறுபான்மை துறைக்கு ரூ. 3511 கோடி, மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுக்கு ரூ. 110 கோடி ஒதுக்கப்படுகிறது. ஆர்ïஷ் துறைக்கு ரூ. 1069 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சுகாதாரம், குடும்ப நலத்துறைக்கு ரூ. 37,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்விக்கு ரூ. 4727 கோடி, மனித வள மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 65,867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் எய்ம்ஸ் போன்று மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட தொடங்கும். இந்த பணிக்காக ரூ. 1650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி இனத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினர் பல்வேறு துறைகளில் உதவித் தொகைகள் பெறுவதற்கு ரூ. 5284 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 13,215 கோடி வழங்கப்படும். குழந்தைகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு ரூ. 17,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி செய்வதற்காக ரூ. 15,260 கோடி வழங்கப்படும்.
ஊரக மேம்பாட்டு துறைக்கு ரூ. 80,194 கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 14,813 கோடி கொடுக்கப்படும். 2012-13ல் உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்களாக இருக்கும். 2013-14ல் வேளாண்துறைக்கு ரூ. 27,049 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
2013-14ல் ரூ. 7 லட்சம் கோடி அளவுக்கு விவசாய கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாநிலங்களில் விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு திட்ட ஒதுக்கீடாக ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்படுத்த வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் அரிசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
2013-14ல் விவசாயிகள் ஒருங்கிணைந்த நீர்ப்பாசனத்தை பெற ரூ. 5387 கோடி தரப்படும். ராஞ்சியில் பயோ-டெக்னாலஜிக்கான தொழில் நுட்பக்கழகம் தொடங்கப்படும். உணவு பாதுகாப்புத் திட்டத்துக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
ரூ. 50 ஆயிரம் கோடி வரை வரி விலக்கு தரும் பத்திரங்கள் வெளியிட அனுமதிக்கப்படும். வேளாண் குடோன்கள் கட்ட ரூ. 5 ஆயிரம் கோடி வழங்கப்படும். சாலை பாதுகாப்பு துறைக்கு ஒரு ஒழுங்கு முறை ஆணையம் ஏற்படுத்தப்படும்.
தொழில் துறையை மேம்படுத்த பல சலுகைகள் தரப்படுகிறது. ஒரு நிறுவனம் ஒரு தொழிலில் ரூ. 100 கோடி முதலீடு செய்தால் 15 சதவீதம் முதலீடு விலக்கு சலுகை பெறும். சில தொழில்களுக்கு முழு வரி விலக்கு கொடுக்கப்படும்.
ராஜீவ்காந்தி பங்கு சேமிப்பு திட்டத்தில் சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி முதல் தடவை முதலீடு செய்பவர்கள் பயன் பெறுவார்கள். இதனால் தனி நபர்கள் தங்கள் உபரி நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய வழிவகை ஏற்படும்
காஷ்மீரில் மின்சாரம் திட்டத்துக்கு ரூ. 1840 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை - பெங்களூர் இடையே புதிய தொழில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் நிறுவனம் இதற்கான திட்ட பணிகளை தயாரித்து வருகிறது.
மேற்கு வங்கம், ஆந்திராவில் 2 புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும். எண்ணை மற்றும் எரிவாயு கொள்கை சீரமைக்கப்படும். லாப நோக்கில் இருந்து வருவாய் பங்கீடு கொள்கையாக அது மாற்றப்படும். இந்தியாவின் முதல் பெண்களுக்கான வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்துக்குள் இந்த வங்கி செயல்பட தொடங்கும்.
2012-ல் நிலக்கரி இறக்குமதி 100 மில்லியன் டன்களைக் கடந்தது. 2016-17ல் அது 185 மில்லியன் டன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவுளித் துறைக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களை எதிர்கொள்ள ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நெசவாளர்களுக்கு 6 சதவீத வட்டியில் கடன்கள் வழங்கப்படும். தபால் துறை திட்டங்களுக்கு கூடுதலாக ரூ. 530 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பொதுத்துறை வங்கிகளின் அனைத்து கிளைகளிலும் வரும் 31-ந்தேதிக்குள் ஏ.டி.எம். வசதி செய்யப்படும்.
ஊரக வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் இணையத் தளம் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிளைகள் தொடங்க அனுமதிக்கப்படும். ராஷ்டீரிய சுவஸ்திய பீமா யோஜனா திட்டத்தின் பலன்கள் இனி ஆட்டோ, ரிக்சா, மற்றும் டாக்சி டிரைவர்களுக்கும் கிடைக்கும்.
பெண்கள் பாதுகாப்புக்காக ரூ. ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும். பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இனி இன்சூரன்சு புரோக்கர்களாக செயல்படவும் அனுமதிக்கப்படும்.
காற்றாலை மின் உற்பத்தியை மேம்படுத்த ரூ. 800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதுபோல கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அலிகார், காசி, கவுகாத்தி பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ. 100 கோடி நிதி வழங்கப்படும். விளையாட்டை மேம் படுத்தும் வகையில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க பாட்டியாலாவில் தேசிய விளையாட்டுக் கழகம் தொடங்கப்படும்.
மத்திய அரசு வழங்கும் நேரடி மானியத் திட்டங்கள் மூலம் 11 கோடி பேர் இதுவரை பயன் பெற்றுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த ரூ. 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பையில் புதிய தொழில் பூங்காக்கள் தொடங்கப்படும்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ரூ.250 கோடியில் விளையாட்டு அமையம் அமைக்கப்படும். ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில் எப்.எம். ரேடியோ ஸ்டேசன்கள் தொடங்க அனுமதி வழங்கப்படும். கேரளா, அந்தமானில் தென்னை மர வளர்ப்புத் திட்டங்கள் மேம்படுத்தப்படும். தனி நபர் வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
இதனால் வருமான வரி விலக்கு உச்சவரம்பிலும் மாற்றம் இல்லை. வரி சலுகைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வரிச் சலுகை வழங்கப்படும். இந்த புதிய வரிச் சலுகை மூலம் வரி செலுத்துபவர்களில் 1.8 கோடி பேர் பயன் பெறுவார்கள்.
ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு காரணமாக 42,800 பணக்காரர்கள் கூடுதல் வரி செலுத்துவார்கள். தேசிய குழந்தைகள் நல நிதிக்கு அன்பளிப்பு வழங்கினால் 100 சதவீதம் வரிச் சலுகை பெறலாம்.
ரூ. 10 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும். கல்விக்கான வரி தொடர்ந்து 3 சதவீதமாக இருக்கும்.
மத்திய- மாநில அரசின் சுகாதார திட்டங்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு வரிச்சலுகைகள் பெறலாம். அசையா சொத்துக்கள் விற்பனை செய்யப்படும்போது ஒரு சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும்.
முதலீட்டாளர்களால் ஏற்படுத்தப்படும் முதலீடு பாதுகாப்பு நிதிக்கு வரிவிலக்கு கொடுக்கப்படும். பங்குகளுக்கான பாதுகாப்பு மாற்று வரி குறைக்கப்படும். வேளாண் பொருட்கள் அல்லாத பொருட்களுக்கு பண்டமாற்று வரி விதிக்கப்படும்.
நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் நேரடி வரி விதிப்பு தொடர்பான மசோதா கொண்டு வரப்படும். அடிப்படை சுங்கம் மற்றும் சேவை வரி விதிப்புகளிலும் மாற்றம் இல்லை. திரைப்படத் துறைக்கு சேவை வரி லிக்கு அளிக்கப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் தொழில்களுக்கு உற்பத்தி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செட்டாப் பாக்சுகளுக்கு வரி விதிப்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மேம்படுத்தப்படாத இல்லுமினேட் மீது 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள் மீதான வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும்போது ஆண்கள் கொண்டு வரும் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்துக்கும் பெண்கள் கொண்டு வரும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
மாநில அரசு கழகங்களால் நடத்தப்படும் படிப்புகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சேவை வரியை தாமாக முன்வந்து கட்டும் திட்டம் கொண்டு வரப்படும். அவர்களுக்கு வட்டி மற்றும் அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
வரி விதிப்புகள் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதில் ரூ. 13,300 கோடி நேரடி வரி விதிப்பு மூலமாகவும், ரூ. 4,700 கோடி மறைமுக வரி விதிப்பு மூலமாகவும் கிடைக்கும்.
நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 5.2 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் அது 4.8 சத வீதமாக குறையும். வீட்டுக்கடன் பெறு வோருக்கு இனி கூடுதலாக ரூ.1 லட்சம் வரிவிலக்கு அளிக்கப்படும். முதன் முதலாக வீடு வாங்குபவர்களுக்குத்தான் இந்த வரி விலக்கு.
தற்போது வீட்டு கடன் வாங்குவோருக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு ரூ.1.5 லட்சமாக உள்ளது. இனி புதிதாக வீட்டு கடன் பெறுவோருக்கு வரி விலக்கு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ.25 லட்சம் வரை வங்கிக் கடன் பெறுவோருக்கு இந்த வரி விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment