Pages

Sunday, 2 December 2012

விவேகம்.



கீதையில் முக்கியமான ஒரு வாக்கியத்தை எல்லாரும் சொல்வது வழக்கம்… அதாவது, "என்னை வழிபட, நீங்கள் அதிக பிரயாசைப்படக் கூட வேண்டாம். ஒரு புஷ்பமோ, ஒரு பழமோ, அதுவுமில்லாவிட்டால், ஒரு உத்ரணி தீர்த்தமோ எனக்கு அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே போதும்…’ என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது, "உன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாவிட்டால் புஷ்பம், பழம், தீர்த்தம் ஏதாவது ஒன்றை அர்ப்பணம் செய்தால் போதும்…’ என்பது தான். அவர்தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்பதற்காக, அவருக்கு ஒரு உத்ரணி தீர்த்தத்தை விட்டு விட்டு, இவன் வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், போளி என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை. நம்மால் அதிகப்படியாக எவ்வளவு செய்ய முடியுமோ, அதை வசதிக்கேற்ப செய்ய வேண்டும்.
வீட்டுக்கு வெளியூரிலிருந்து ஒருவர் வருகிறார்… "எனக்காக பிரமாதமாக சமையல் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் இருந்தால் போதும்…’ என்கிறார். இவர் தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்று, ஒவ்வொரு வேளைக்கும் வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் சாதம் போட்டால் எப்படி இருக்கும். வந்த விருந்தாளி மறுநாளே ஊருக்கு கிளம்பி விடுவார்.
ஒரு @காவிலில் உபன்யாசம் செய்வதற்காக ஒரு உபன்யாசகர் வந்திருக்கிறார். ஒன்பது நாள் உபவாசம். இதுபோன்ற உபன்யாசத்தின்போது உபன்யாசருக்காக ஒரு, "பிளாஸ்கில்’ பால் கொண்டு வந்து வைப்பர். உபன்யாசம் செய்யும்போது அவருக்குத் தொண்டை வறண்டு விடும். அதற்காக பால் வைப்பது சம்பிரதாயம்.
அவர், அவ்வப்போது அதில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார். முதல் நாள் கோவில் காரியதரிசியிடம், "எனக்கு பிளாஸ்கில் சூடாக வென்னீர் கொண்டு வந்து வைத்து விடுங்கள்; போதும்!’ என்றார் உபன்யாசகர்.
அவர் அப்படியே வென்னீர் கொண்டு வந்து வைத்தார். உபன்யாசகரும் அந்த வென்னீரையே சாப்பிட்டு உபன்யாசம் செய்தார். மீதமுள்ள எட்டு நாட்களுக்கும் இவர் சொல்லாமலே பிளாஸ்கில் வென்னீர் கொண்டு வந்து வைத்து விட்டார் அந்த காரியதரிசி. பார்த்தார் உபன்யாசகர், பால் வேண்டும் என்று சொல்ல சங்கடமாக இருந்தது.
ஒன்பது நாளும் வென்னீரையே சாப்பிட்டுக் கொண்டு உபன்யாசத்தை முடித்தார். கடைசியில் ஊருக்கு புறப்படும்போது, "சார்… உங்க காரியதரிசி பலே ஆசாமி சார்… நான் முதல் நாள் ஏதோ தலைவலியாக இருந்ததால் வென்னீர் கொண்டு வந்தால் போதும் என்றேன். அவர், உபன்யாசகருக்கு பால் பிடிக்காது போலிருக்கிறது என்று எண்ணினாரோ, என்னவோ… ஒன்பது நாளும் வென்னீரையே வைத்து விட்டு ஒப்பேத்தி விட்டாரே… நான் பால் வேண்டாமென்றா சொன்னேன்!’ என்று ஒரு நண்பரிடம் கூறினார்.
இப்படி பிறருக்கு தொந்தரவு வேண்டாம் என்பதற்காக குறைந்தபட்சம் இதை செய்தால் போதும் என்று சொன்னால், அதையே பிடித்துக் கொண்டு அதற்குமேல் எதுவும் செய்யக் கூடாது என்பதல்ல. கேட்பவர் குறைந்தபட்சம் கேட்பார்; கொடுப்பவர் அதிகபட்சம் கொடுக்க வேண்டும்! அதுதான் விவேகம்!



No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads