தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியனின் நூற்றாண்டு விழா சென்னை மயிலாப்பூர் நியூ உட்லெண்ட்ஸ் ஓட்டலில் இன்று காலை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
செல்லப்பாண்டியன் உருவப்படத்தை திறந்து வைத்து ப.சிதம்பரம் பேசியதாவது:-
முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் மிகப் பிரபலமான வழக்கறிஞர். அவர் உருவாக்கிய வழக்கறிஞர்கள் ஏராளம். இவரிடம் பயிற்சி பெற்ற ரத்தினவேல் பாண்டியன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்ந்தார். ஆவுடையப்பன் உள்பட பல வழக்கறிஞர்களை உருவாக்கியவர்.
வழக்கறிஞர் தொழிலில் பலநெறிகளை கடைபிடித்ததுபோல் அரசியலிலும் கடுமையான நெறிமுறைகளை கடைபிடித்தார். நல்லவேளை அந்த காலத்தில் அவர் வாழ்ந்தார். அதனால்தான் நெறிகளை கடைபிடிக்க முடிந்தது.
செல்லப்பாண்டியன் கருத்தை கேட்காமல் மூப்பனாரும் எந்த முடிவையும் எடுக்கமாட்டார். 1962-ல் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் 18 தொகுதிகளிலும் செல்லப் பாண்டியன் நியமித்த காங்கிரஸ் வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றார்கள். காலம் ரொம்ப மாறிப்போச்சு, காலத்திற்கு ஏற்ப இளையவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி உள்ளார். என்னைப் போன்ற ஒத்த வயது உடையவர். ராஜீவ்காந்திக்கு என்னை விட 2 வயது அதிகம் இருக்கும். இப்போது அடுத்த காங்கிரஸ் தலைவராக என்னைவிட இளையவரான ராகுல்காந்தியை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அந்த பக்குவம் தமிழக காங்கிரசுக்கு வரவேண்டும்.
கட்சி வலுவடைய மாவட்ட, வட்டார தலைவர்களை நியமிக்க வேண்டும். அப்போது நம்மை விட இளையவர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும். அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வரவேண்டும்.
இதற்கு மனதளவில் எல்லோரும் தயாராக இருக்கிறோம். ஆனால் செயல்பாடு என்று வரும்போது தயங்குகிறோம். இளைஞர்களை நியமிக்கும் போதுதான் காங்கிரசுக்கு புதிய ரத்தம் கிடைக்கும்.
1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் உள்ளது. இது நமது குற்றம்தான். புதிய தலைமையை தேடி பெறாதது நமது குற்றம்தான்.
எனவே காங்கிரஸ் மீண்டும் உயிர்ப்பித்து எழ வேண்டுமானால் மாவட்ட, வட்டார அளவில் புதியவர்களை தேர்ந்து எடுத்து அவர்கள் கையில் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லை.
யாரை நியமித்தாலும் சரி அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துப்போக வேண்டும்.
மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் புதிய திட்டத்தையும் உங்களிடம் விளக்கி கூற விரும்புகிறேன். மத்திய அரசு வருகிற 1-ந்தேதி செயல்படுத்த இருக்கும் 'உங்கள் கையில் உங்கள் பணம்' என்ற திட்டம் ஒரு புதிய புரட்சியாகும். நிர்வாக துறையில் புதிய யுக்தியை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மக்களிடமே நேரடியாக சென்று திட்டத்தின் பலன்களை பயனாளிகளுக்கே சேர்க்கும் திட்டம் ஆகும்.
மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித் தொகைகளை வழங்குகிறது. எத்தனை லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்குகிறோம். இதுவரை அறிவிக்கிறார்களே தவிர அது உரியவர்களுக்கு சென்று சேர்ந்ததா? என்றால் அறிவித்தவருக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது, கணக்காளருக்கும் தெரியாது.
பணம் போய் சேர்ந்ததா என்று 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் பார்க்க தொடங்குவார்கள். 1,242 கோடி எங்கே போனது? யாரிடம் சென்றது என்று விசாரணையை ஆரம்பிப்பார்கள். இந்த விசாரணை முடிய 3 ஆண்டு ஆகிவிடும்.
மொத்தத்தில் 6 ஆண்டில் இந்த விசாரணை முடிவதற்குள் பணம் பெற்றவரும் உயிரோடு இருக்கமாட்டார், பணத்தை கொடுக்கும் இடத்தில் இருப்பவரும் மாறிப்போய் இருப்பார். இறுதியில் நாங்கள் தொகுதிக்கு போகும்போது முதியோர் உதவித் தொகை வரவில்லை என்று மனு கொடுப்பார்கள். நாங்களும் மனுவை தாசில்தாருக்கு அனுப்புவோம். அந்த மனு சுற்றிச்சுற்றி வரும். கடைசியில் மனு கொடுத்த பெண்ணின் கையிலே போய் மனு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுத்தற்கு இல்லை. நிலைமை இப்படி உள்ளது.
அதன்பிறகு திடீர் என்று 2 மாத பென்சன் அந்த பெண்ணுக்கு வந்துவிடும். இடைப்பட்ட 5 மாத பென்சன் என்ன ஆனது என்று அந்த பெண்ணுக்கு தெரியாது, யாருக்கும் தெரியாது.
இப்படி இடையிலே நிற்கும் பணம் யாருக்கு போகிறது என்பதுதான் மிகப்பெரிய நிர்வாக கோளாறாகி விட்டது. இந்த பணம் எங்கே கிடக்கிறது. எப்போது வெளியே வந்து உரியவரிடம் சேரும் என்பதுதான் அரசாங்கம்.
இந்த புதிரை அவிழ்க்க மத்திய அரசு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.
பயனாளிகளின் வங்கி கணக்கில் உதவி தொகையை நேரடியாக வரவு வைக்கும் வகையில் புதிய தொழில் நுட்பம் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் 51 மாவட்டங்களில் (குஜராத், இமாசல பிரதேசத்தில் 8 மாவட்டங்களை தவிர்த்து) 39 திட்டங்களின் பயன்களை சேர்க்க சொல்லி உள்ளோம். கண்டிப்பாக ஜனவரி 1-ந்தேதிக்குள் இந்த திட்டங்கள் வங்கி கணக்குகளில் வரவு ஆகிவிடும்.
படிப்படியாக மற்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். 2013 டிசம்பர் 31-ந்தேதிக்குள் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

No comments:
Post a Comment