Pages

Sunday, 21 October 2012

கரடிகள்.


வன விலங்குகள் மனிதர்களின் பார்வையில் தென்படாமல் வனங்களில் வாழ்பவை. சுலபமாகப் பார்க்க முடியாத வன விலங்குகளில் கரடியும் ஒன்று.
வனங்களில் கரடிகளை அரிதாகத்தான் பார்க்க முடியும்.


இந்தியக் கரடிகள் உர்சிடே (Ursidae ) என்று அழைக்கப்படும், ஒரு குறிப்பிட்ட ஒற்றை அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தவை. நம் நாட்டில் காணப்படும் கரடி இனம் அனைத்தும் Sloth bea என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றன. Slot ட் என்பதற்கு, வெப்பமண்டலக் காடுகளில் வாழும், மெதுவாக நகரும், குறைந்த பற்கள் உள்ள,பாலூட்டி வகை மிருகங்கள் (Mammals) என்று அர்த்தம். இந்தியக் கரடிகளின் (Sloth Bear)      அறிவியல் பெயர் " Melursus ursinus (Ursidae) என்பதாகும். கரடிகள் ஒரு காலத்தில் ஓநாய் மற்றும் நாய் இனத்துடன் இணைந்திருந்தவை என்று புதைபடிவங்கள் (Fossils ) மூலம் நிரூபணமாகியுள்ளது.

   கரடிகள் இலை தழைகளிலிருந்து மாமிசம்வரை உண்ணும் பழக்கமுடையவை. பெரும்பாலும் பழங்கள், பழக் கொட்டைகள், தண்டுகள், சில குறிப்பிட்ட இலைகள், மரப்பட்டைகள்போன்றவற்றை உண்ணுகின்றன. கரடிகள், மனிதர்களைவிடவும் தாவரவியல் அறிவு மிகுந்தவை. எந்தப் பருவத்தில் எந்த வகைக் காய்கனிகள் எங்கே கிடைக்கும் என்பதைக் கரடிகள் நன்றாக அறிந்திருக்கும். இவை, நாவற்பழத்தை மிகவும் விரும்பி உண்ணும். நாவற்பழங்கள் பழுக்கும் பருவத்தில் காடுகளில் இந்த மரங்களின் அருகில் செல்லாமல் இருப்பது நல்லது.

அடர்த்தியான காட்டிற்குள் செல்லும்போது இம்மரங்கள் இருக்கும் பகுதியில் முன்னெச்சரிக்கையோடு செல்லவேண்டும். கரடிகள், மரங்களின் உச்சிவரை எளிதில் ஏறக்கூடியவை.   கரடிகளுக்கு தேனும் மிகவும் பிடித்த உணவு. மலை முகடுகளிலும், மரங்களின் உச்சிகளிலும் உள்ள தேன் கூடுகளை தேனுக்காக கரடிகள் கைப்பற்றும். இவற்றின் மற்றொரு உணவு கரையான். கரடிகள், காடுகளில் காணப்படும் கரையான் புற்றுகளைச் சுற்றி வந்துகொண்டிருக்கும். கரையான் புற்றில் வாய் வைத்து மிகுந்த ஓசையுடன் கரையான்களை அப்படியே உறிஞ்சிவிடும். வாக்குவம் கிளீனர் தூசுகளை உறிஞ்சுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லவா, அதைப்போலத்தான்.

எப்போதாவது கரடிகள் மிருகங்களின் மாமிசத்தையும் உணவாகக் கொள்ளும்.   இந்தியக் கரடிகள் சராசரியாக நான்கு அடி உயரமும் நூற்றுப் பதினைந்து கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. கரடிகளைப் பிடித்து அவற்றைச் சங்கிலிகளால் கட்டி வித்தை காட்டி பணம் சம்பாதிக்கும் வழக்கம் பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உண்டு.

    சமீபத்திய ஆய்வுகளில், விலங்கினங்களில் கொழுப்புச் சத்து மிகவும் அதிகமாக உள்ள விலங்கு கரடிதான் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கொழுப்புச் சத்து மிக அதிகமாக இருந்தால் இதயம் தொடர்பான கோளாறுகள் ஏற்படும். இந்த நிலையில் கரடிகள் எப்படி ஆரோக்கியமான இதயத்துடன் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றின் மூலம் தெரியவரும் உண்மைகள் மனிதர்களுக்கு உதவக்கூடும் என்பதே இவ்வகையான ஆய்வுகளின் நோக்கம்.

   துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் "ஆர்க்டோஸ் (Arctos) என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்ட்டிக்' என்ற பெயர் வந்தது. தென் துருவப் பகுதியில் துருவக் கரடிகள் கிடையாது. உருவத்தில் பெரிதான அமெரிக்க கிரிஸ்லி (Grizzly) கரடிகள் மிகவும் ஆபத்தானவை.

    இந்திய ஆண் கரடிகளும் உருவத்தில் பெரியவை. அதிக பலமுள்ளவை. கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள். ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மாக் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும். குட்டிகளும் தங்கள் அம்மாவின் முதுகில் இருக்கும் முடிக் கற்றைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கீழே விழாமல் பத்திரமாக அமர்ந்திருக்கும். அம்மாக் கரடி குட்டிகளை மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்ளும். யாராவது பக்கத்தில் சென்றால் கோபத்துடன் தாக்கும்.

   கரடிகளின் கண்கள் சிறிதாக இருக்கும். இவை, குறைந்த பார்வைத் திறன் உடையவை. ஆயினும் கரடிகள் மிகுந்த மோப்ப சக்தியும், கேட்கும் திறனும் கொண்டவை. பழம் பொறுக்கவும், விறகு சேகரிக்கவும் காட்டிற்குள் செல்பவர்கள் கரடிகளை நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதுண்டு. அப்போது கரடிகளால் மோசமாகத் தாக்கப்படுவதும் உண்டு. இம்மாதிரியான நேரங்களில் கரடிகள் தங்கள் பின்னங் கால்களால் நிமிர்ந்து நின்றுகொண்டு, முன்னங் கால்களைக் கைகள்போலப் பயன்படுத்தித் தாக்கும். தாக்கப்படுபவரின் முகமும், தலைப் பகுதியும் அதிக அளவு சேதமடையக்கூடும்.

கரையான் புற்றுகளையும், தேன் கூடுகளையும் எளிதில் பிய்த்து எடுத்துவிடுவதற்கு கரடிகள், நீண்டு வளைந்திருக்கும் தங்கள் கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நகங்களில் சகதியும் அழுக்கும் சேர்ந்திருக்கும். பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். எனவே இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது. சமயங்களில் புண்கள் புரையோடி விரைவில் மரணம் சம்பவிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

   கரடிகள், திறந்த நகங்கள் கொண்ட வளைந்த முன்னங் கால்களைக் கொண்டு ஒரு வகையாக அசைந்து நடக்கும். அவற்றின் நெஞ்சுப் பகுதியில் ய வடிவத்தில் வெள்ளை நிற அடையாளத்தைக் காணலாம். இந்த இனத்தைத் தனிப்படுத்திக் காட்டவும், பிறருக்கு எச்சரிக்கை செய்யவும் இந்த அடையாளம் உதவுகிறது.

    எப்போதும் பசுமையாக இருக்கும் காடுகளைவிட, பாறைகளும், செடிகொடிகளும் நிறைந்த பகுதிகளே கரடிகள் வாழத் தகுதியான இடங்களாகும்.

கர்நாடக மாநிலத்தின் பாழடைந்த நகரான ஹம்பியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் "தாரோஜி தேசியப் பூங்கா' உள்ளது. இது கரடிகள் சரணாலயமாகும். இங்கே கரடிகளை அவற்றின் இயற்கையான சூழலில் காண முடியும். அவற்றின் பழக்க வழக்கங்களையும் நேரில் கண்டு அறிந்துகொள்ள முடியும். இந்த இடம் கரடிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பாறைகள், குகைகள், கரையான் புற்றுகள், தேன்கூடுகள் உள்ள மரங்கள், செடிகொடிகள் நிறைந்து உள்ளது.

 தாரோஜி தேசியப் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், எளிதாகக் கரடிகளைக் காண்பதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. கரடிகளை நன்கு காணக்கூடிய உயரமான இடத்தில், ஒரு பார்வைக் கோபுரத்தில் (Watch Tower) ஏறிப் பாதுகாப்பாக கரடிகளை நாம் பார்க்கலாம்.

  இங்கே ஒவ்வொரு நாளும் பிற்பகல் மூன்று மணியளவில் ராகியையும், வெல்லத்தையும் நல்லெண்ணையில் கலந்து தயாரிக்கப்பட்ட உணவு பாறைகளிடையே வைக்கப்படுகிறது. இத்துடன், கரடிகள் தேடி எடுத்து உண்ணும் வகையில் அதிக அளவில் வாழைப் பழங்களும் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன. வழக்கமாக ஒரே நேரத்தில் தினமும் இவ்வாறு செய்கிறார்கள். எனவே, கரடிகள் உணவுக்காக இவ்விடத்திற்கு ஒவ்வொரு குழுவாக வந்து உண்டு செல்வதைக் காணலாம். இவ்வாறு கரடிகள் உணவு உண்பது நான்கு மணி நேரம் நீடிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமின்றி இந்த மிருகங்களைக் காணலாம்.

அதுமட்டுமின்றி, கரடிகளின் உணவுப் பழக்கங்கள், அவை ஒன்றுடன் ஒன்று பழகுவது, குழுவிற்குத் தலைமை வகிக்கும் கரடிகளின் நடைமுறைகள், கரடிக் குட்டிகள் விளையாடுவது ஆகிய அனைத்தையும் காணலாம்.

   வானவியலில் "பெருங்கரடி (Great Bear)

என்பது முக்கியமான ஒரு நட்சத்திரக் கூட்டத்தின் பெயர். இந்த நட்சத்திரக் கூட்டத்தின் முழுமையான வடிவம் ஒரு கரடியின் வடிவத்தை ஒத்திருப்பதாகக் கருதப்பட்டதால் இப்பெயர் வழங்கப்பெற்றது.

   கரடி, ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் "ஜாம்பவான்' என்று குறிப்பிடப்படுகிறது. "ருட்யார்ட் கிப்ளிங்' எழுதிய "ஜங்கில் புக்' என்னும் நாவலில் வரும் கரடியை யாரும் மறக்க முடியாது. இதே நாவலை "வால்ட் டிஸ்னி' கார்ட்டூன் திரைப்படமாகத் தயாரித்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் "பாலு' என்னும், எதற்கும் கவலைப்படாத மகிழ்ச்சியான கரடிக் கதாபாத்திரமும் என்றும் நம் நினைவில் இருக்கும்.

"தமிழினி' ஏப்ரல் இதழில் வெளிவந்த
கட்டுரையின் சுருக்க வடிவம்.
 உணவு: பழங்கள், பழக் கொட்டைகள், தண்டுகள், தேன்,கரையான்.
Key word:கரடி

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads