Pages

Friday, 5 October 2012

உணவே மருந்து


உங்களுக்குப் பிடித்ததையோ, சமைக்கச் சுலபமானதையோ பிள்ளைகளுக்குக் கொடுத்து வளர்க்காதீர்கள். சுவை அடிப்படையில் உணவு கொடுப்பதைத் தவிர்த்து, வயது அடிப்படையில், உணர்வுகளின் அடிப்படையில் கொடுப்பதே சிறந்தது.

அந்த வகையில் வளரும் பிள்ளைகளுக்கு சாத்வீக உணவே சிறந்தது. உதாரணத்துக்கு உலகில் எல்லாருக்கும் பிடித்த உருளைக் கிழங்கையே எடுத்துக் கொள்வோமே...

பச்சை உருளைக்கிழங்கில் உள்ள நீர்ச்சத்தானது, மினரல் வாட்டரை விட சுத்தமானது. அதே கிழங்கை வேக வைத்தால், அதில் மாவுச்சத்து அதிகமாகிறது. எண்ணெயில் பொரித்தால் கார்பன் அதிகமாகிறது. கார்பன் அதிகமாகிறபோது, பிராண சக்தி குறைந்து, அதன் விளைவாக எதிர்ப்புச் சக்தி குறையும். உடலுக்குள் புதுசு புதுசாக நோய்கள் உற்பத்தியாகின்றன. அதனால் எதை, யாருக்கு, எப்போது, எப்படிக் கொடுக்க வேண்டும் என்கிற மனக்கணக்கு அம்மாக்களுக்கு
அவசியம்.

சாப்பாட்டு விஷயத்தில் பெற்றோர், பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். தினமும் இரண்டு, மூன்று வித காய்கறிகள், கீரைகள், பருப்புக் கலந்த உணவு, கொண்டைக்கடலை, பழங்கள் எல்லாம் மெனுவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சூப் குடிப்பதை தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மதிய உணவுக்குப் பிறகு உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் தூங்குவதாகக் கேள்விப்படுகிறீர்களா? தயிர்சாதம், தக்காளி சாதம், புளி சாதங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, கீரை சாதம், கொத்தமல்லி சாதம், புதினா சாதம் என மாற்றிப் பாருங்கள்.
     கோபப்படுகிற, ஆக்ரோஷமான பிள்ளைகளுக்கு அசைவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, காய்கறி, பழங்களைப் பழக்குங்கள். வன்முறை நடத்தை மாறுவதோடு, அவர்களது நுட்ப உணர்வுகளும் மேம்படும். நினைவாற்றல் பெருகும். வாரம் ஒரு நாள், ஒரு வேளைக்காவது வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவதை குடும்ப வழக்கமாக்கிப் பாருங்கள். மருத்துவரின் முகவரியே மறந்து போகுமளவுக்கு ஆரோக்கியமாக இருக்கலாம். இரவு உணவுக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு சேர்த்த சட்னி அல்லது துவையலைக் கட்டாயமாக்குங்கள். செரிமானம் சீராகி, உடலும் மனமும் லேசாகும்.

இவையெல்லாம் உங்கள் சமையலறையில் முதல் கட்டமாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள். குழந்தைகள் எந்த உணவையும் வெறுப்பதோ, விரும்புவதோ இல்லை. நாம்தான் அப்படிப் பழக்குகிறோம். இள வயதிலிருந்தே இயற்கை உணவுகளுக்குப் பழக்கி விட்டால், அவர்களது வளர்ச்சியும் வாழ்க்கையும் வளமாக இருக்கும். எந்தெந்த வயதில், எப்படிப்பட்ட இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அடுத்தடுத்த இதழ்களில் விரிவாகப் பார்ப்போம்.

இயற்கை உணவு என்றதும் ‘அய்யே... இலை, தழை, காய்னு ஆதிவாசிகள் மாதிரி வேகாததை எல்லாம் சாப்பிடணுமா?’ என பயப்படவே வேண்டாம்.
உங்கள் சுவை உணர்வுகளைத் தொந்தரவு செய்யாத சுவையான, சூப்பரான உணவுகளாக இருக்கும்  ஒவ்வொன்றும்... வாங்க சாப்பிடலாம்!
காய்கறி அவியல்:
 தேவையானவை:
கேரட்,
 பீட்ரூட்,
 முள்ளங்கி (ஒரே அளவில் சிறுதுண்டுகளாக நறுக்கியது)
 மூன்றும் சேர்த்து 100 கிராம், மிளகுப்பொடி - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் - 1 சிட்டிகை, மிளகாய்ப் பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - அரை டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க.
 செய்முறை விளக்கம் :
காய்கறிகளின் மேல் உப்புத் தண்ணீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி, இட்லித்தட்டில் 10 நிமிடங்கள் வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து, மிளகுப்பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துப் பிரட்டி அப்படியே பரிமாறவும். இந்தக் காய்கறி அவியலை காலை அல்லது மதிய உணவுக்குக் கொடுக்கலாம்.
பயன்கள்:
கேரட் சருமத்துக்கும் பார்வைக்கும் நல்லது. பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். முள்ளங்கி நீரைப் பிரித்து, உடலை சுத்தப்படுத்தும்.
எள்ளுருண்டை:
தேவையானவை:
கருப்பு எள் - 50 கிராம்,
வேர்க்கடலை - 50 கிராம்,
 கருஞ்சீரகம் - 10 கிராம்
, வெல்லம் - 100 கிராம்,
 ஏலக்காய் - 4.
 செய்முறை விளக்கம் :
வெல்லத்தைப் பொடித்து, தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். மற்ற பொருள்களைப் பொடித்து வைக்கவும். வெல்லப்பாகில் பொடித்ததைக் கொட்டிக் கிளறி, சுருண்டு வந்ததும் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பயன்கள்:
எள்ளில் கால்சியமும் இரும்புச்சத்தும் அதிகம். ஹார்மோன்களின் சீரான சுரப்புக்கு உதவும்.
அசைவ உணவு கொடுக்கிற போதெல்லாம், அதன் பாதிப்புகளை ஈடுகட்ட, இந்த எள்ளுருண்டையைக் கொடுக்கலாம்.
முருங்கைக்கீரை சூப்:
தேவையானவை:
முருங்கைக்கீரை - 2 கைப்பிடி,
கரகரப்பாகப் பொடித்த மிளகு,
 சீரகம் - 1 டீஸ்பூன்,
 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10,
 பூண்டு - 6 பல்,
 எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
 உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை விளக்கம் :
முருங்கைக்கீரையை காம்பு நீக்கி, சுத்தம் செய்யவும். 2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, வடித்தெடுக்கவும். உளுந்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். சிறிது எண்ணெயில் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, வடித்து வைத்துள்ள தண்ணீரில் சேர்க்கவும். உளுந்துப் பொடி சேர்த்து, ஒரு கொதி விட்டு சூடாகப் பரிமாறவும்.
பயன்கள்:
100 கிராம் முருங்கைக்கீரையில் 500 மி.கி. கால்சியம் கிடைக்கும். இரும்புச்சத்து நிறைந்த சூப் இது. காலையிலோ, மாலை 5 மணிக்குள்ளாகவோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 5 மணிக்கு மேல் கீரை உணவு களைத் தவிர்க்க வேண்டும்.
Key word:காய்கறி அவியல்,முருங்கைக்கீரை சூப்,எள்ளுருண்டை.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads