Pages

Wednesday 19 September 2012

சோளம், சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி.


வரகு, திணை, சாமை, கம்பு, சோளம், சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி... பறித்த பசுமை மாறாத கீரை வகைகள்... உயிர்ப்போடு ஃப்ரெஷ்ஷாக இருக்கும் காய்கறிகள்... கலப்படம் கொஞ்சமும் இல்லாத உணவு வகைகள்... எங்கே கிடைக்கும்? சென்னை அடையாறில் இருக்கும் ரீஸ்டோரில் கிடைக்கும்! இங்கே முதலாளியும் இல்லை. தொழிலாளியும் இல்லை
எல்லோருமே தன்னார்வலர்கள் என்பது கூடுதல் ஆச்சரியம்!

ரீஸ்டோர் வாலண்டியர்களில் ஒருவரான ராதிகா சொல்கிறார்... ‘‘இன்னிக்கு நாம சாப்பிடுற உணவு ஆரோக்கியமானது இல்ல. பயிர்கள்ல உரம், பூச்சி மருந்தை அதிகமாப் போட்டு, விஷமாக்கிடுறாங்க. அதைத்தான் காசு குடுத்து சாப்பிடுறோம். தாத்தா, பாட்டிகள் கடைசி காலம் வரை திடகாத்திரமா இருந்த நிலைமை போய், இன்னிக்கு 15 வயசுலயே டயாபடீஸ் வந்துடுது. காரணம், உணவில் சத்தில்லை. அதோட பாரம்பரிய உணவை மறந்துட்டு வெளிநாட்டு உணவு வகைகளைத் தேடித் தேடி சாப்பிடுறோம்.

இன்னொரு பக்கம், விளைந்த பொருட்களை விற்க முடியாம விவசாயிகள் தவிக்கிறாங்க. இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்னு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ரீஸ்டோர்’. பாரம்பரியத்தை மீட்டுக் கொண்டு வர்றதுதான் எங்க நோக்கம். சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்கள்ல விவசாயிகளிடம் நேரடியா உணவுப் பொருட்களை வாங்கி, விக்கிறோம். சமையலுக்கு தேவைப்படுற அத்தனையும் இங்கே கிடைக்கும்.

பருப்பு, மாவு, செக்குல ஆட்டின சுத்தமான எண்ணெய், ட்ரைஃப்ரூட்ஸ், அரிசி, சிறு தானியங்கள்னு எல்லாமே இயற்கையா விளைஞ்ச தரமான பொருட்கள்.  ‘பாசுமதி’ பஞ்சாப்ல கிடைக்கிற உயர்ரக அரிசி. நம்ம ஊர் சீரக சம்பா அரிசிக்குப் பக்கத்தில கூட அது வரமுடியாது. சீரக சம்பாவுல அவ்வளவு சத்து இருக்கு. இதையெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்கிறோம். வரகு, திணை, கம்பு விளையுற இடங்கள், அதிலுள்ள சத்துகள் பற்றி புத்தகம் வெளியிட்டிருக்கோம். இன்னிக்கு தேன்ல கூட கலப்படம்! நாங்க விக்கறது இயற்கையா கிடைக்கிற தேன்!

பண்டிகை நாட்கள்ல பாரம்பரிய உணவுகளை தயார் செஞ்சு கொடுக்குறோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கிற மூலிகை சோப், ஷாம்பு, குளியல் பவுடர் கூட இங்கே இருக்கு. ஊறுகாய், இன்ஸ்டன்ட் பவுடர், இயற்கை உரத்துல விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், கீரைகளும் கிடைக்கும். முதலாளி, தொழிலாளி பாகுபாடு இல்லாம ரீஸ்டோரை ஆரம்பிச்சோம். எல்லாருமே தன்னார்வலர்கள்தான். சம்பாதிக்கறது எங்க நோக்கமில்ல. அடுத்த சந்ததியினர் ஆரோக்கியமா இருக்கணும்... அவ்வளவுதான்.

வாரத்துல ரெண்டு நாள், செவ்வாய்க்கிழமை மதியம் ரெண்டு மணியில இருந்தும், சனிக்கிழமை சாயங்காலம் நாலு மணியில இருந்தும் காய்கறிகள், பழங்களுக்கான பஜார் நடக்கும். காய்கறி வாங்க வெறும் கையோட யாரும் இங்கே வர முடியாது. பிளாஸ்டிக் கவருக்கு தடை போட்டிருக்கோம்.
இது எங்களோட முதல் முயற்சி. அடுத்தக்கட்டமா வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகள் உற்பத்தி பண்ணுற வித்தையை கத்துத் தரப்
போறோம். அழகுக்காக குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கறதை விட்டுட்டு மொட்டை மாடியில சின்னதா தோட்டம் போட்டா கீரைகள், காய்கறிகள் கிடைக்கும். அதுக்காகத்தான் ‘ரீஸ்டோர் கார்டன்’ அமைப்பை உருவாக்கியிருக்கோம்.

எங்களைப் பார்த்து மற்றவர்களும் இந்த முயற்சியை செஞ்சா அது எங்களுக்குக் கிடைத்த வெற்றி. சூப்பர் மார்க்கெட்ல ஃப்ரீசர்ல வச்சிருக்குற உணவை வாங்கி உடம்பை கெடுத்துக்குறதை விட்டுட்டு, நாம உற்பத்தி செஞ்ச காய்கறிகள்ல சமைச்சு, மிச்சமிருக்குற நாட்களை ஆரோக்கியமா வச்சுக்க எல்லாரும் முன்வரணும். பாரம்பரிய தானியங்கள்ல இருக்குற சத்துகளையும் மகத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போயே ஆகணும்’’ என்கிறார் ராதிகா.

1 comment:

  1. காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா, தாவணி பெண்களும்
    தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா.....
    பொங்கல் திருநாளில் இன்று இந்த கட்டுரை மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. சென்னையில் இருப்பது போல் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இது போல் அங்காடிகளை திறந்தால், தலைநகர் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழகமே பயன் அடையும்! கட்டுரையை படித்து முடித்தவுடன், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்" என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விவசாயி படத்தில் பாடியது நினைவுக்கு வருகிறது. சகோதரி ராதிகாவிற்கும் உடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 14-01-2013 அன்புடன் சந்துரு, பாரிஸ் பிரான்ஸ்

    ReplyDelete

ADVERTISE HERE.

space for ads