ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் உசேன் போல்ட் (ஜமைக்கா) புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தொடர்ந்து 2வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
உசேன் போல்ட்டுடன் சக ஜமைக்கா வீரரும் உலக சாம்பியனுமான யோகன் பிளேக், அசபா பாவெல், அமெரிக்காவின் நட்சத்திர வீரர்கள் ஜஸ்டின் காட்லின் (2004 ஒலிம்பிக் சாம்பியன்), டைசன் கே என உலகின் முன்னணி வீரர்கள் பைனலுக்கு தகுதி பெற்றதால், இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அதிவேக வீரர் யார் என்பதை அறிவதற்காக லண்டன் ஒலிம்பிக் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
கடந்த சில போட்டிகளில், தவறான தொடக்கம் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்ததால், உசேன் போல்ட் பைனலில் மிகவும் கவனமாக செயல்பட்டார். மற்ற வீரர்களை விட சற்று தாமதமாகவே ஓட்டத்தை தொடங்கினாலும், 50 மீட்டருக்கு பிறகு அவர் சிறுத்தைப் பாய்ச்சலில் முன்னேறினார். மின்னல் வேகத்தில் எல்லோரையும் முந்திய போல்ட் 9.63 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
எனினும் அவரால் தனது முந்தைய உலக சாதனையை (9.58 விநாடி, பெர்லின், ஆக. 2009) முறியடிக்க முடியவில்லை. ஜூலையில் நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் சக ஜமைக்கா வீரர் யோகன் பிளேக்கிடம் தோற்றிருந்ததாலும், தசைநார் காயத்தால் அவதிப்பட்டு வந்ததாலும், ஒலிம்பிக் பைனலில் போல்ட்டால் சாதிக்க முடியாது என்ற விமர்சகர்களின் கருத்தை தவிடுபொடியாக்கிய அவர், பெய்ஜிங் ஒலிம்பிக்கை தொடர்ந்து லண்டனிலும் அதிவேக வீரர் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டார்.
ஒலிம்பிக்கில் அவர் பெறும் 4வது தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்சில் அவர் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 ஙீ 100 மீட்டர் ரிலே பிரிவுகளில் தங்கம் வென்றிருந்தார். சக ஜமைக்கா வீரர் யோகன் பிளேக் (9.75 வி.) வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் (9.79) வெண்கலமும் வென்றனர்.
Key word:ஒலிம்பிக் சாதனை,ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்

No comments:
Post a Comment