Pages

Thursday, 5 July 2012

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்:இந்தியாவின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. தற்போதைய இராமநாதபுர மாவட்ட எல்லைக்கு உட்பட்ட திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம்
 ஆகிய பகுதிகள் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியப் பேரரசிடம் இருந்தது. 1520 இல் பாண்டியர்களிடமிருந்து நாயக்கர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினர். 1063 இல் குறுகிய காலம் மட்டும் இராஜேந்திர சோழர்கால சோழ அரசுக்கு உட்பட்டதாக இருந்துள்ளது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் கீழிருந்த சேதுபதி பரம்பரையினர் இராமநாதபுரத்தின் ஆட்சியை எடுத்துக்கொண்டனர். ஆங்கிலேயர்களால் ராம்நாட் என்று அழைக்கப்பட்ட இந்தப்பகுதி விடுதலைக்குப் பிறகு இராமநாதபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ராமநாதபுரம் அரண்மனை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரண்மனை ஆகும். சேதுபதி ராஜாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை இராமலிங்க விலாசம் என்றும் அழைக்கபடுகிறது. இது ஏறத்தாழ மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். இங்குதான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆஷ் துறையுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலம்.
அக்னி தீர்த்தம்:;
உயர்ந்த கோபுரம், எதிரே அமைதியான கடல், அருகே சில புண்ணிய தீர்த்தங்கள், அக்னி தீர்த்தம் இவற்றில் பிரபலமானது. இதில் நீராடினால் சகல பாவங்களும் அகலும் என்பது நம்பிக்கை. இன்னும் சில தீர்த்தங்களும் உண்டு.
அன்னை இந்திராகாந்தி பாலம் - பாம்பன் பாலம்:

2.10.1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாலம் இது. இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.
இராமநாத சுவாமி கோயில்:

இந்தக் கோயில் குறித்தப் புராதனக் கதை உண்டு. வழிபாட்டுக்கு உகந்த நேரத்தில் தான் பூஜிக்க லிங்கம் ஒன்று வேண்டும் என அனுமனிடம் இராமர் கேட்டிருக்கிறார். அனுமன் லிங்கத்தைக் கொண்டுவந்து சேர்க்கத் தாமதமாகவே சீதையே ஒரு லிங்கத்தை உருவாக்கி உள்ளார். இதனால் தாமதமாக லிங்கத்தைக் கொண்டு வந்த அனுமன் சஞ்சலம் அடையவே அவனையும் தேற்றி அந்த லிங்கத்தையும் அருகிலேயே வைத்ததாக இராமாயணம் கூறுகிறது. தற்போதும் அனுமனால் அமைக்கப்பட்ட லிங்கத்துக்கே இங்கு அதிக சிறப்பு. இராமநாதசுவாமி கோயிலின் மூன்றாவது பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது.
தனுஷ்கோடி:

மிக அண்மைக்காலத்தில் கடல் கொண்ட பகுதி இது. இது ஓர் அழகிய சிறு தீவு. 1964 இல் ஏற்பட்ட கடுமையான புயலின்போது இந்தத் தீவு முழுவதும் கடலுக்குள் முழ்கிவிட்டது. ஆனால் இங்குள்ள கோதண்டசாமி கோயில் மட்டும் எஞ்சி நிற்கிறது. இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீக்கு அப்பால் உள்ள தனுஷ்கோடிக்கு சாலை வழியாகவே செல்லலாம். இங்கு உள்ள கடற்கரையில் படகு சவாரி செய்யலாம். இங்குள்ள வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
தேவிப்பட்டினம்:
இந்தக் கடலோரக் கிராமத்தை நவபாசாணம் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இந்துக்கள் தங்களின் முன்னோருக்குச் சடங்குகள் செய்யும் இடமாகவும் இது உள்ளது.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்
இங்குள்ள அனுமன் செந்தூர் காப்பில் எழுந்தருளி உள்ளார்.
மன்னார் வளைகுடா - கடல்வாழ் உயிரினப் பூங்கா:
இந்தியாவிலேயே மிகப் பெரிய கடற்கரையைக் கொண்ட தேசிய கடல் வாழ் உயிரினங்களின் பூங்கா இங்குதான் உள்ளது. 3600 வகையான கடல் வாழ் தாவரங்களும் உயிரினங்களும் கொண்ட இந்தப் பூங்காவை இந்திய குழுவும் அமைப்பும் இணைந்து தனிப்பட்ட கவனத்திற்குரிய சிறப்புப் பகுதியாக அடையாளப்படுத்தி பயன்பாட்டு நிர்வாகச் சிறப்புத் தகுதியையும் வழங்கி உள்ளன.
ஜடாயு தீர்த்தம்:
இராவணனிடமிருந்து சீதையைக் காப்பதற்காக ஜடாயு என்ற பறவை சண்டையிட்டபோது அதன் இறகு ஒன்று இந்த இடத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலையும் குளத்தையும் சுற்றி நிறைய மணற்குன்றுகள் சூழ்ந்துள்ளன. இந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் இளநீரைப் போன்று சுவையுள்ளது.
சிவபெருமானின் ஜோதி லிங்கம்:
இந்தியாவில் உள்ள ஜோதிலிங்கத் கோயில்களில் இராமநாத சுவாமி கோயிலும் ஒன்று.
இராமநாதபுரம்:
மன்னர் சேதுபதியின் ஆட்சிக்குட்பட்ட நகரம். இப்போது மாவட்டத்தின் தலைநகரம். இராமலிங்க விலாசம் என்ற அரண்மனையும், தாயுமானவரின் கல்லறையும் இங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.
கஞ்சிரங்குளம் மற்றும் சித்திரக்குடி பறவைகள் சரணாலயம்:
பருவகாலங்களின் மாற்றத்துக்கு ஏற்ப பறவை இனங்கள் கண்டம் விட்டுக் கண்டம் வந்து இளைப்பாறும் இயல்பு கொண்டவை. பறவைகளின் இந்தப் பயணத்தை வலசை வருதல் என்று அழைப்பார்கள். இப்படி வரும் பறவைகள் இந்தப் பகுதியில் வந்து தங்கி கூடிக் குலாவி குஞ்சுகளும் பொரிக்கின்றன. நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இந்தக் காட்சியைக் காண முடியும்.
மண்டபம்:
இராமநாதபுரத்திலிருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அழகிய கிராமம். இராமேஸ்வரத்திலிருந்து 19 கி.மீ. தூரத்தில உள்ளது. 1914 க்கு முன்பு இராமேஸ்வரத்துக்கு நேரடியாக இரயிலில் செல்ல முடியாது. மண்டபத்தில் வந்து இறங்கி படகில்தான் இராமேஸ்வரத்துக்குச் செல்ல வேண்டும். தற்போது குருசடை தீவிற்கு படகு சவாரி செல்லலாம்.
சாட்சி அனுமன் கோயில்:
கண்டேன் சீதையை என்று இராமனிடம் வந்து அனுமன் சொன்ன இடம். அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இந்தக் கோயில் நிற்கிறது.
வில்லூண்டி தீர்த்தம்:
இராமனுடன் சென்று கொண்டிருந்த சீதாபிராட்டிக்கு இராமன் தன் கையிலிருந்த வில்லை ஊன்றி அதிலிருந்து பீறிட்ட நீரைக் கொண்டு தாகத்தைக் தணித்துள்ளான். இதனால் இந்த இடத்துக்கு வில்லூண்டித் தீர்த்தம் என்று பெயர் வந்துள்ளது. இராமேசுவரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
Key word:இராமேஸ்வரம்,கஞ்சிரங்குளம் மற்றும் சித்திரக்குடி பறவைகள் சரணாலயம்,
மன்னார் வளைகுடா-கடல்வாழ் உயிரினப் பூங்கா,இராமநாத சுவாமி கோயில்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads