முதல் குழந்தையின் படம் அதிர்ஷ்ட சின்னமாகிறது!
புதுடெல்லி : இருபத்தியேழு வயது பெண்ணுக்கு இப்படியொரு யோகம் அடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மெட்ரோ ரயிலில் பிரசவித்த முதல் பெண் என்பதால், அவரை விழுந்து விழுந்து கவனிக்கிறது டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம்.
பெண்ணின் பெயர் ஜூலிதேவி. அவருக்கு இது இரண்டாவது பிரசவம். முதல் பெண் குழந்தைக்கு 3 வயது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜூலிதேவிக்கு டாக்டர் சொன்ன டெலிவரி தேதி, ஆகஸ்ட் 1. ஞாயிற்றுக் கிழமை காலை 7.20 மணிக்கு செக்,அப்க்காக கணவன், மைத்துனர், தனது மகள் ஆகியோருடன் கான் மார்க்கெட் நிலையத்தில் மெட்ரோ ரயிலில் ஏறினார் ஜூலி. சப்தர்ஜங் மருத்துவமனைக்கு செல்ல திட்டம். பதர்புர் பகுதியில் உள்ள இட்மாட்புர் என்ற கிராமத்தில் கணவன் வீடு. அங்கிருந்து ஆட்டோவில் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
7.20க்கு ரயில் கிளம்பியதும் ஜூலிக்கு பிரவச வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வலி அதிகமாகி துடிக்கத் தொடங்கினார். அவரது அழுகுரல் கேட்டு, பக்கத்தில் இருந்த பெண் பயணிகள் உதவிக்கு வந்தனர். ஆண் பயணிகளை, வேறு பெட்டியில் ஏறுமாறு கூறினர். சென்டரல் செகரட்டேரியட் ஸ்டேஷனை ரயில் அடைந்ததும், ஆண் பயணிகள் அங்கிருந்து வேறு பெட்டிக்கு மாறினர். கடைசி பெட்டி, பிரசவ வார்டாக மாறியது. முழுக்க பெண்கள் சூழ்ந்திருக்க, ஓரளவுக்கு மருத்துவம் தெரிந்த ஒரு பெண் முன்னெடுத்து செல்ல, சக பெண் பயணிகள் ஒத்துழைக்க, பிரசவம் தொடங்கியது. சரியாக 7.28 மணிக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஜூலி.
அதற்குள் டிஎம்ஆர்சி நிர்வாகம் ஆம்புலன்சை வரவழைத்திருந்தது. நிலையத்தின் வாசலில் காத்திருந்த ஆம்புலன்சில் தாயும் குழந்தையும் உடனடியாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரும் ஆரோக்யமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்த பிறகே டிஎம்ஆர்சி அதிகாரிகளுக்கு நிம்மதி.
‘‘உலகில் வேறு எந்த மெட்ரோ ரயிலிலாவது நடந்திருக்குமா என தெரியவில்லை. டெல்லி மெட்ரோ ரயிலுக்கு இது முதல் பிரசவம். சுகமான அனுபவம். எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. பெண் பயணிகளுக்கும், மெட்ரோ அதிகாரிகள், ஊழியர்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு இது ஒரு நல்ல நாள்’’ என்று பூரித்துப் போய் பேசுகிறார் டிஎம்ஆர்சி செய்தி தொடர்பாளர் அனுஜ் தயாள்.
வெறும் வார்த்தையோடு நின்று விடவில்லை. ஜூலிக்கான பிரசவ செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். தாயையும் சேயையும் கவனிக்க பெண் உறவினர் யாரும் இல்லை என்பதை கேட்டதும், உடனடியாக தனது பெண் ஊழியர், அதாவது நிலைய மேலாளர் அந்தஸ்தில் உள்ள இரண்டு பேரை மருத்துவமனை டூட்டி என்று அனுப்பியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்லும் வரை அந்த பெண்களுக்கு அங்குதான் டூட்டி.
இதையெல்லாம் விட, மெட்ரோ ரயிலின் முதல் குழந்தையை கவுரவிக்க, டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தின் (டிஎம்ஆர்சி) அதிர்ஷ்ட சின்னமாக (மஸ்காட்) அந்த குழந்தையின் படத்தை பயன்படுத்த விரும்புகின்றனர். அதற்கு ஒப்புதல் பெற, பரீதாபாத்தில் வசிக்கும் ஜூலியின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு அதிகா ரிகள் படையை அனுப்பியிருக்கிறது டிஎம்ஆர்சி நிர்வாகம்.

No comments:
Post a Comment