Pages

Saturday, 14 July 2012

விண்வெளி திருவிழா


கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நாசா ஆராய்ச்சி மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (டி.ஆர்.டி.ஓ.) ஆகியவை இணைந்து விண்வெளி திருவிழாவை நடத்துகின்றன.


இந்த விண்வெளித் திருவிழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இன்று நிறைவு விழா நடைபெறுகிறது. கண்காட்சியில் ராக்கெட், ஏவுகணை, செயற்கைகோள், கோளரங்கம், உளவு விமானங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இவற்றை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து பார்த்துச் சென்றனர். நேற்று மாலை வரை 1 லட்சம் பேர் கண்காட்சியை கண்டு பயனடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கண்காட்சி குறித்து அதனை கண்டு வியந்தோர் கூறியதாவது:-

விவேகலட்சுமி:- நான் சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படிக்கிறேன். சேலத்திலிருந்து 200 பேருக்கும் மேல் இங்கு வந்துள்ளோம். விண்வெளி கண்காட்சி ரொம்ப நல்லா இருக்கு. இதுபற்றி இன்னும் தெரிய ஆர்வமாக உள்ளது. ஒவ்வொரு ஆராய்ச்சிகளையும் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இந்த மாதிரி ஆராய்ச்சிகளை நாங்களும் உருவாக்க ஆசைப்படுகிறோம். குறிக்கோளுடன் உள்ளவர்களுக்கு இந்த விண்வெளி கண்காட்சி ஒரு வரப்பிரசாதமாகும்.

பிரியவதனா:- நான் கோபியில் பள்ளி ஆசிரியையாக உள்ளேன். என்னுடன் 3 ஆசிரியர்கள் வந்துள்ளனர். இந்த கண்காட்சியை பார்க்கும்போது விண்வெளிக்கு சென்று வந்த மாதிரி இருக்குது. அடுத்த தடவை வரும்போது குழந்தைகளையும் அழைத்து வருவோம். இந்த மாதிரி வாய்ப்பு எப்போதும், எல்லோருக்கும் கிடைக்காது. எல்லாவற்றையும் பார்க்க 1 நாள் போதாது. அந்த அளவுக்கு நிறைய விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த கண்காட்சியை இன்னும் நீட்டிக்க வேண்டும்.

அப்படி செய்தால் பார்க்காதவர்களும் பார்க்க முடியும். இந்த மாதிரி கண்காட்சி வருடம்தோறும் நடத்த வேண்டும். அப்படி செய்தால் நிறைய பேர் பயன்பெறுவர்.

ரம்யா:- நான் பொள்ளாச்சியில் பிளஸ்-1 படித்து வருகிறேன். இது மாணவர்களுக்கு நல்ல பயன்தரும். எல்லா பள்ளி மாணவர்களும் பார்க்க வேண்டும். வகுப்பில் விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமாக வீடியோ மூலம் விளக்கலாம். இது ஒரு நல்ல அனுபவம். புதிய ராக்கெட் பற்றி தெரிஞ்சு கிட்டோம். கண்காட்சியை பார்க்கும்போது விண்வெளிக்கு சென்று வந்த மாதிரி இருக்கு.

ஆதித்யா:- நான் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். விலை மதிப்பில்லாத நிறைய பொருள் இங்கு இருக்கிறது. ரொம்ப நல்லா இருந்தது. கண்காட்சியை காணவந்தவர்களுக்கு நல்ல விளக்கம் தந்தனர். விஞ்ஞானிகள் எங்களிடம் நல்ல நண்பர்கள் போல பழகினர். அறிவை வளர்க்க இது உதவுகிறது. மாணவர்கள் இதை பார்க்கும்போது அவர்களுக்கு நல்ல ஐடியா கிடைக்கும். பெரிய ஆளாகியபின் இதை நாமும் செய்ய வேண்டும் என எண்ண தோன்றுகிறது.

நிவேதா:- நான் பிளஸ்-2 படித்து வருகிறேன். சோலார் பற்றி தெரிய ரொம்ப உதவியாக இருந்தது. கண்காட்சியில் உள்ளதை புத்தகத்தில் மட்டும்தான் பார்த்தோம். இப்போது நேரிலே பார்த்துட்டோம். சூரிய குடும்பத்தை பற்றி நன்றாக தெரிந்து கொண்டோம். அடுத்த வருடமும் இந்த மாதிரி கண்காட்சி அமைக்க வேண்டும். கூட்ட மிகுதியால் இன்று பார்க்க முடியாததை நாளை பார்க்க உள்ளேன்.

இங்கு உள்ள ரோபோவுக்கு மனித உடை உடுத்தப்பட்டு மனிதனை போன்று காட்சியளிக்கிறது. மனிதன் என தொடும்போதுதான் அது மனிதன் இல்லை ரோபோ என தெரிகிறது. பழைய காலத்து பீரங்கி மாடல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. அதை புத்தகத்தில் மட்டும்தான் பார்த்தோம். இப்போது நேரில் பார்த்தது சந்தோஷமாக உள்ளது. கண்காட்சியை இன்னும் சில நாட்கள் நீட்டித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads