108 அம்மன் கோவில்கள் சுற்றுலா:
புதிய பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சுற்றுலாவிற்கு சென்று வந்தவர்கள், மிகவும் சிறப்பாக இருந்தது என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். இச்சுற்றுலாவினை மேலும் சிறப்பிக்கும் வகையில், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திராவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனும் இணைந்து, சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் வி.கு.ஜெயக்கொடி, சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தனபால் ஆகியோருடன் நேற்று (12.7.2012) கலந்து ஆலோசனை செய்து, ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு தரிசனமும், மற்றும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்ய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, வருகிற ஆடி மாதம் 1-ம் தேதி (16.7.2012) காலை 6.30 மணியளவில் 108 அம்மன் கோவில் சுற்றுலாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா துவங்கி வைக்கிறார்.
இச்சுற்றுலா ஆடி மாதத்தில் திங்கள் கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் காலை 6.00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு வெள்ளி மற்றும் திங்கள் கிழமை முறையே இரவு 9 மணியளவில் சென்னை வந்தடையும். ஐந்து நாட்களில் 108 அம்மன் கோவில்களை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சுற்றுலாவில் வைத்தீஸ்வரன் கோவில், தஞ்சாவூர், மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுலாவிற்கான கட்டணம் நபருக்கு ரூ.4300 (இருவர் தங்கும் வசதியுடன்), சிறுவருக்கு ரூ.3700 (4 வயது முதல் 10 வயது வரை), தனி நபருக்கு தனி அறை வசதியுடன் நபருக்கு ரூ.5300 வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் சொகுசு பேரூந்து மற்றும் தங்கும் வசதிக்கு மட்டும் உட்பட்டது. மேலும், ஒரு நாள் சக்தி சுற்றுலாவாக மாங்காடு, திருவேற்காடு, ந்தமல்லி, திருமுல்லைவாயில், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலுர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஊர்களில் உள்ள அம்மன் திருக்கோயில்களை தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா பேருந்து காலை 7.00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மாலை 7.00 மணிக்கு வந்தடையும்.
மேலும், மீஞ்சூர் திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் ஆகிய அம்மன் கோவில்களை தரிசிக்கும் வகையில் மூன்று தேவியர் சுற்றுலாவாக, நபருக்கு ரூ.375/ கட்டணத்தில் காலை 8 மணிக்கு தமிழ்நாடு சுற்றுலா பேருந்து சென்னையிலிருந்து புறப்பட்டு, மாலை 5.00 மணிக்கு வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கு அனைத்து நாட்களும் முன்பதிவு செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்சிக்கழகம், வாலாஜா சாலை, சென்னை 2 என்ற முகவரியில், நேரிலும் அல்லது தொலை பேசி எண்கள். 25384444/25383333/25389857 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment