Pages

Tuesday, 12 June 2012

எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை!


எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை!

வீடுகளில் டீ.வி. பார்க்கும் கிரிக்கெட் நேரங்களில், பெரியவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து எழக்கூடாது என்பது பொது விதி. ‘‘பாட்டி, நீங்க இங்க உட்கார்ந்த போதுதான் டெண்டுல்கர் சிக்ஸர் அடிச்சாரு. நீங்க எழுந்தா அவுட் ஆயிடுவாரு. இதுதான் ராசி’’ என்று பாட்டியை பாத்ரூம் கூட போக விடாத பிள்ளைகள் வீடுதோறும் உண்டு. ஐபிஎல் உபயத்தால் வீடு கூட்டும் முனியம்மா கூட, ‘‘இன்னுமா தோனி ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கல?’’ என்று விசாரிக்கும் அளவுக்கு கிரிக்கெட் நம் கலாசாரத்தோடு இணைந்தது.
அண்மையில் கிரிக்கெட்டின் காசியாக, மெக்காவாக, பெத்லஹேமாக மதிக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது பரவசமாகவே இருந்தது. இங்குதான் கபில்தேவ் 1983ல் கோப்பையைப் பெற்றார். இங்குதான் சௌரவ் கங்குலி வெற்றி
 பெற்றவுடன் சட்டையை கழற்றி வீசினார் என்ற பரவசத்தோடு பற்பல இந்தியர்கள் லார்ட்ஸ் மைதானத்தை தரிசித்துக் கொண்டார்கள். ரகசியமாக கீழே இருந்த மண்ணை பொட்டலம் கட்டியவர்களும் உண்டு. வீட்டுக்குப் போய் பிரசாதமாக விநியோகம் செய்வார்களோ, என்னவோ?
சிறுவயதில் நாங்கள் சுவரில் கரிக்கோடுகள் வரைந்து ஓயாது விளையாடிய நாட்கள் நினைவில் ஆடுகின்றன. நாங்கள் வரைந்த கோடுகளை காலம் அழித்து விட்டது. இன்றைய சிறுவர்கள் புதுக்கோடுகளை வரைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்றைய கிரிக்கெட், கனவான்களின் விளையாட்டு. இன்று பணம் புழங்க ஆரம்பித்ததும் கவர்ச்சி அதிகமாகிவிட்டது. லார்ட்ஸ் மைதானத்தின் பாதுகாவலர் எங்களிடம் ‘‘ஏன் சியர் பாய்ஸ் உங்கள் ஐ.பி.எல் போட்டிகளில் இல்லை?’’ என்று கேலியாகக் கேட்டார். உலக கிரிக்கெட்டில் இன்று ஐபிஎல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால், சூதாட்டம், குடிபோதையில் தகராறுகள், மேட்ச் ஃபிக்ஸிங் என்று பணம் புரளப் புரள, களங்கங்களும் புது உயரங்களைத் தொடுகின்றன. ஆன்மிகமோ, அரசியலோ, கலையோ, விளையாட்டோ, பெரும் பணம் பீடிக்காதவரை மட்டுமே அர்ப்பணிப்பு மிளிரும். உயர்ந்த சிந்தனைகளுக்கும் லட்சியங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்குமான பாதை எளிமை மட்டுமே.
‘‘நான் வணங்கும் ராமனும் சீதையும் நகைகள் ஏதும் அணிவதில்லை’’ என்று சொன்ன காந்தி, விருதுநகரில் வசித்த அம்மா, ‘‘வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்ட வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்த போது, ‘‘எதுக்கு வீண் செலவு? நாளைக்கு எவனாவது, முதலமைச்சர் வீட்டை வசதியாக் கட்டிக்கிட்டாருன்னு சொல்லுவான்’’ என்று மறுத்துவிட்ட காமராஜ், ஒரு வாளித் தண்ணீரில் தானும் குளித்து தன் வேட்டியையும் துவைத்துக் கொண்ட ராஜாஜி... இவர்கள் எல்லாரும் இன்று மியூசியம் மனிதர்கள்.
நம் திருமணங்களையே பாருங்கள். மந்திரங்களின் உச்சரிப்புக்கு இருந்த மரியாதையெல்லாம் அழகுநிலைய ஒப்பனைக்கு மாறிவிட்டது. பெண், மாப்பிள்ளை, பெண்ணின் அத்தைகள், சித்திகள், அம்மா, பாட்டி, மாப்பிள்ளையின் தங்கைகள் என்று எல்லோரும் அழகு நிலையம் போய் திரும்பிய பின்தான் திருமண வரவேற்பு ஆரம்பிக்கிறது. ‘ஏழு மணி’ என்று வரவேற்பு அட்டையில் போட்டிருந்தாலும் இத்தனை பேர் அழகுநிலையம் போய்த் திரும்ப எட்டு, எட்டரை ஆகவே, பாதிப்பேர் பஸ்ஸிற்கு லேட்டாகும் எனறு சாப்பிட்டுவிட்டு, மொய்ப்பணத்தை தகப்பன்களிடம் கொடுத்துவிட்டு தேங்காய்ப் பைகளுடன் விலகி விடுகின்றனர் - பெண், மாப்பிள்ளை வருமுன்னரே! இலை போட்டு எளிமையாய் இருந்த விருந்துகள் 100 ஐட்டங்கள் பரிமாற்றப்படும் பஃபே என்று மாறி பாதிப்பேர் தட்டைத் தூக்கி அலைந்து கொண்டிருக்கும் அவமானமாகிவிட்டது.
திருமணமா? தலைவர் அந்த வழியாக வீட்டுக்குப் போகிறாரா? மஞ்சள் நீராட்டா? வை, ஃபிளக்ஸ் பேனர்களை. கம்பத்துக்குக் கம்பம் சிரிக்கும் படோபடங்கள். ‘‘ஏம்மா, தீபாவளிக்குன்னு புடவை வாங்கிக்கற; கொஞ்சம் சரிகை போட்டு வாங்கினால் என்ன?’’ என்று நாங்கள் கேட்கும்போது ‘‘சிம்பிள் லிவிங், ஹை திங்கிங்’’ (எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை) என்று பதில் சொல்லும் என் அம்மாவின் வார்த்தைகள், புத்தகத்தில் மூடி வைத்த செண்பகப்பூ போல, நினைக்கும் போதெல்லாம் மணக்கிறது.
எளிமையை ஒரு வாழ்வியல் நெறியாகக் கொண்ட மனசு, ‘எதுவுமே வேண்டாம்’ என்ற நிலைக்கு எளிதில் நகர்கிறது. திருமழிசை ஆழ்வார் பற்றி வைணவர்கள் ஒரு கதை சொல்வார்கள். ஆழ்வார் ஒரு மூலையில் அமர்ந்து எதையோ தைத்துக் கொண்டிருந்தாராம். அவரைப் பார்த்த பார்வதி அவருக்கு ஏதாவது வரம் தர விரும்பினாள். சிவனும் பார்வதியும் அவர் அருகே சென்று, ‘‘என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டனர். ‘‘என்ன தர முடியும்?’’ என்றார் ஆழ்வார். ‘‘ஐஸ்வர்யம் தருகிறோம்’’ என்றனர் உமையும் சிவனும். ‘‘அதை வைத்து நான் என்ன செய்வது? தேவையில்லை’’ என்றார் ஆழ்வார். ஏதாவது கொடுத்தே தீர வேண்டும் என்று செல்லப் பிடிவாதம் பிடித்தார் சிவன். ‘‘இந்த ஊசியில் கொஞ்சம் நூல் கோர்த்துக் கொடுங்கள். அதுவே போதும்’’ என்றாராம் ஆழ்வார்!
‘‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’’ என்பது பழமொழி மட்டுமல்ல; அதுவே ஒரு மந்திரம். திரும்பத் திரும்பச் சொல்லும்போது பேயாட்டம் போடும் மனது அமைதிப்படுகிறது. ‘மொபைல் ஃபோனில் இந்த மாடல் பிடிக்கவில்லை. எப்போது பீரோவைத் திறந்தாலும் போதுமான ஆடை இல்லாத மாதிரித் தோன்றுகிறது. என்னதான் இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி உங்களுக்கு சாமர்த்தியமாக சம்பாதிக்கத் தெரியலை...’ தொடரும் இந்தப் புலம்பல்கள், இன்று பலரின் இயல்பு. எதுவுமே எனக்குப் போதாது என்ற இந்த இயல்பின் இன்னொருகட்டம்தான் எதிலும் ஆடம்பரத்தையும் மிகையையும் கவர்ச்சியையும் நாடும் இச்சை. இதன் பின்னர் அதற்கான பணத்தைத் துரத்துதல் - அதன்பின் பணம் வரும் வழி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற விபரீத எண்ணம். இது விஷ வட்டம். எளிமை தான் கடவுளிடம் போக மிகக் குறுகிய வழி என்ற மரபுதான், நம் சமயத்தின் நம்பிக்கை. ‘‘ஆன்மாவில் எளிமை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது’’ என்கிறது பைபிள். இந்தச் சிந்தனை இல்லாத ஒரு மதத்தைக்கூட நம்மால் காட்டிவிட முடியாது. எல்லா மதங்களின் வேராக இருப்பதும் எளிமை என்னும் தத்துவம்தான். ஆனால் இன்று கட் அவுட்களின் பிரமாண்டத்திலும் சியர் கேர்ள்ஸின் ஆரவாரங்களிலும் வேரே ஆட்டம் கண்டிருக்கிறது. மரம்
எத்தனை நாள் தாங்குமோ?
(சிறகுகள் விரியும்)
சிறகை விரி! பற!
ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி. கொல்கத்தா நைட் ரைடர்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் மோதிய மின்சார கணங்கள். அரங்கம் சும்மா அதிர்ந்தது. ஸ்டேடியத்தில் இருந்த உற்சாகத்திற்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை, வீடுகளில் தொலைக்காட்சி முன் குழுமியிருந்த மனிதர்களின் உற்சாகம். கடைசி ஓவர்கள் - தோனியா? காம்பீரா? கேமரா பார்வையாளர்களைச் சுற்றிச் சுற்றி வந்தது. பலர் தீவிரமாக பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். மந்திரங்களை முணு முணுத்தோர், ஜப மாலை உருட்டினோர்... எத்தனை பால் அபிஷேகங்களோ, எத்தனை சிதறு தேங்காய்களோ... இந்தியாவில் கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல. அது வாழ்க்கை, அது உயிர்த்துடிப்பு, கடவுளர்களின் ஆசி தேவைப்படும் போராட்டம், கடைசி ஓவர் என்பது இந்திரலோகத்து வான வில்லில் எழுதப்படும் கலையா ஓவியம்.
பிரதி எடுக்க

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads