Pages

Monday, 25 June 2012

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை

சென்னை:

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 16 பேர், 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளனர். இவர்களில், 10 பேர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள். நடப்பு கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க, மொத்தம் 28 ஆயிரத்து 354 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில், ஒரே விண்ணப்பதாரர் பெயரில் பெறப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், தகுதியற்றவை போன்ற காரணங்களால் 477 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 27 ஆயிரத்து 877 விண்ணப்பங்கள் கலந்தாய்விற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில், 9,816 பேர் ஆண்கள்; 18 ஆயிரத்து 61 பேர் பெண்கள்.
கலந்தாய்வு:இவர்களுக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், ஜூலை 5ம் தேதி துவங்குகிறது. இதற்கான மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், மருத்துவக் கல்வி இயக்ககத்தில் நேற்று மாலை வெளியிட்டார்.
அதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த ஆண்டு,கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் 50 இடங்களை அதிகரிக்க, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இக்கூடுதல் இடங்களையும் சேர்த்து, தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 1,696 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியிலும், 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாகக் கிடைக்கவாய்ப்புள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில், இந்திய மருத்துவக் கவுன்சில் மூன்று கட்ட ஆய்வு முடிந்துள்ளதால், ஜூலை 15ம் தேதிக்குள்,
 இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
10 நாட்கள்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலையின் கீழ் இயங்கும் 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில், பி.டி.எஸ்., படிப்பிற்கு 85 இடங்கள் மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக 897 இடங்களும் உள்ளன.இந்த இடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 5ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடைபெறும். ஜூலை 5ம் தேதி, சுதந்திர போராட்ட தியாகிகளின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும், 6ம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.இதில் பங்கேற்ற,தரவரிசைப்படி, விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாதோர், www.tnhealth.org, http://www.tn.gov.in/ ஆகிய இணையதளங்களில்,
அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இம்முறை, "கட்-ஆப்' மதிப்பெண்கள், பெரியளவில் குறைய வாய்ப்பில்லை. முதல்கட்ட கலந்தாய்விற்கு பின், ஆகஸ்ட் முதல் வாரம் எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் துவங்கும்.இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன், மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா, மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads