Pages

Wednesday, 2 May 2012

பங்குச் சந்தையில் வேலைவாய்ப்பு

           பங்குச் சந்தை என்பது பணம் முதலீடு செய்வதற்குரிய இடம் மட்டும்தானா? இல்லை, அங்கு வேலைவாய்ப்பும் நிறைந்துள்ளது.
 வேலைவாய்ப்பு வணிகம் படித்தவர்களுக்கு மட்டும்தானா? அதற்கும் இல்லை என்பதுதான் பதில்! எந்தப் படிப்பைப் படித்திருந்தாலும், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனும் தேசிய பங்குச் சந்தை நடத்தும் சில சான்றிதழ் படிப்புகளைப் படித்தால் பங்குத் தரகு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத அளவுக்கு வருமானம் கிடைப்பதோடு, இத்துறையில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்பும் இருப்பது அனைவருக்கும் தெரியாத ஒன்று. எனினும், சமீப காலமாக இத்துறையைப் பற்றிய எண்ணம் மக்களிடையே மாறி வருகிறது. விஷயம் தெரிந்தவர்கள் பங்குச் சந்தையில் அதிகளவில் முதலீடு செய்வதுமட்டுமன்றி, இத்துறையில் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர். இருப்பினும் இத்துறையைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இப்போதுதான் ஏற்படத் தொடங்கியுள்ளது.
         "நம்நாட்டில் இன்று மக்கள் தொகை ஏறத்தாழ 125 கோடியை எட்டிவிட்டதென்றாலும், இவர்களில் 1.75 கோடி பேர்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கான டீமேட் கணக்கை வைத்துள்ளனர். இதிலிருந்தே இத்துறை குறித்து மக்கள் எந்தளவில் தெரிந்து வைத்துள்ளனர் என்பது தெரிய வரும்.
         தற்போது அந்த நிலை மாறி வருகிறது. விஷயம் தெரிந்து முதலீடு செய்தால் மற்ற எல்லா நிதி திட்டங்களையும்விட இதில் அதிக வருமானம் கிடைக்கும் என அறியத் துவங்கியுள்ளனர். அதே போல், இத்துறையில் நிறைய வேலை வாய்ப்பு இருப்பது குறித்தும் உணரத் துவங்கியுள்ளனர்.
இத்துறையில் உள்ள சில படிப்புகளைப் படிப்பதன் மூலம் வங்கிகள், பங்குத் தரகு நிறுவனங்கள், கமாடிட்டி சந்தை, டெரிவேட்டிவ் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் பணிபுரியலாம்.
        மணிபால் கல்வி நிறுவனத்துடன் இணைந்து தேசிய பங்குச்சந்தை பல்வேறு படிப்புகளை நடத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்கவை, பங்குச்சந்தை அடிப்படை (Basics of stock markets), டெரிவேட்டிவ்ஸ் - டிரேடிங், கிளியரிங் அண்ட் செட்டில்மென்ட் (Derivative - trading, clearing & Settlement), ஃபண்டமென்டல் அனாலிசஸ் (Fundamental Analysis), டெக்னிக்கல் அனாலிசஸ் (Technical Analysis) ஆகியவையாகும்.
மும்பையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இங்கு கரன்ஸி டெரிவேட்டிவ்ஸ் குறித்த படிப்பு, இன்ட்ரஸ்ட் ரேட் டெரிவேட்டிவ்ஸ் குறித்த படிப்பு, ஷேர் டிரான்ஸ்பர் ஏஜென்ட்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூட்டர், டெபாசிட்டரி ஆபரேஷன், செக்யூரிட்டிஸ் ஆபரேஷன் அண்ட்ரிஸ்க் மேனேஜ்மென்ட், பர்சனல் ஃபைனான்சியல் அட்வைஸர் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள்
        இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னை பங்குச்சந்தை அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
பயிற்சிக் கட்டணமாக, தேர்ந்தெடுக்கும் படிப்புக்கேற்ப ரூ.1,000-யிலிருந்து ரூ.5,000 வரை வசூலிக்கப்படுகிறது. தேர்வுகளைப் பொருத்தவரை, நமது வசதிக்கு ஏற்றாற்போல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான தேர்வுகள் தினம்தோறும் என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்தில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக அங்கு பதிவு செய்தால் போதும்.
       இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துவக்கத்திலேயே பங்குத் தரகு நிறுவனங்களில் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப, திறமைக்கு ஏற்றாற்போல் கமிஷன் அடிப்படையிலும் ஊதியம் கிடைக்கும்.
இப்படிப்புகளில் சேர 12-ம் வகுப்பு முடித்தாலே போதுமானது. எனினும், ஏதேனும் ஒரு டிகிரி முடித்துவிட்டு சேருவது நல்லது. வணிகவியல், பொருளாதாரம் ஆகிய படிப்புகளைப் படித்தவர்களுடன் கூட அறிவியல், கணிதம் போன்ற பாடங்களைப் படித்தவர்களும் இதில் சேரலாம். எம்.பி.ஏ. போன்ற மேலாண்மை புரஃபஷனல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களும் மேற்கண்ட சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இப்படிப்புகளைப் படிப்பதன் மூலம், நாம் பிற நிதி மற்றும் பங்கு நிறுவனங்களில் வேலைக்குச் சேரலாம். அல்லது நாமே சுயமாக பங்குத் தரகு நிறுவனங்களைத் தொடங்கலாம்.
      இந்தப் படிப்புகளைத் தவிர, முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாதம்தோறும் 3-வது சனிக்கிழமையன்று  சென்னை பங்குச்சந்தை அலுவலகத்தில் மதியம் 3 மணிக்கு இலவச வகுப்புகளை நடத்துகிறோம். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பயன்பெறலாம். பங்குச் சந்தை குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்பட தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு பங்குச் சந்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தற்போது சென்னையில் சில பள்ளிகளில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். மாணவர்கள் எவ்விதத் தயக்கம் இன்றி இத்துறையை தேர்ந்தெடுத்தால் பிரகாசமான எதிர்காலம் உள்ளது''

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads