Pages

Thursday 6 February 2014

மாசி மகம் .


மங்களகரமான மாசி மாதத்தில் ஞான மோட்ச காரகனான கேது பகவானின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் மாசி மகம் என கொண்டாடப்படுகிறது
. உமா தேவி, முருகன், மகாவிஷ்ணு ஆகிய மூவருக்கும் உகந்த நாள் மாசி மகம். உமா தேவியார் மாசி மாத மகம் நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். இந்த உலகை படைத்து காத்து ரட்சிக்கும் அம்பிகை அவதாரம் செய்ததால் மகத்துப் பெண் ஜெகத்தை ஆளும் என்ற ஜோதிட வாக்கு ஏற்பட்டது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக் கொணர்ந்த நாள் மாசி மகமாகும். தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் இந்நாள்தான். இந்த பிறவிப் பெருங்கடலை கடந்து, பிறவா வரம் வேண்டி இறைவனின் அருட்கடலை நாடும் நாள் இது. எனவேதான் ஞான மோட்சகாரகனான கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்தது. இந்த நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். புண்ணிய ஸ்தலங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.
       தமிழகத்தைப் பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மிகப் பெரிய சிறப்பாகும். ஆண்டு தோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகாமகம் ஆகும். அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் மகாமக குளத்தில் நீராடுவர். இந்த ஆண்டு மாசி மகம், மகா மகத்துக்கு நிகரான சிறப்பு பெற்றது. ஏனென்றால் குருபகவான் தனது விசேஷ பார்வையாகிய ஐந்தாம் பார்வை மூலம் சிம்ம ராசியை பார்க்கிறார். கேது பகவான் ஞானத்தை தரக்கூடியவர். ஆகையால் இந்நாளில் கல்வி சம்பந்தமான பணி, பயிற்சிகளை தொடங்கலாம். காலையில் எழுந்தவுடன் விநாயகப் பெருமானை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு, ஞானம் விருத்தி பெறும். மந்திர உபதேசம் பெறுவது மிகவும் சிறப்பானது. தேவாரம், திருவாசகம், காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம், ராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், விஷ்ணு புராணம் போன்ற புத்தகங்களை படிப்பது மோட்ச பலன்களை அளிக்கும்.
         நம் முன்னோர்கள், தாய், தந்தையரை நினைத்து அன்னதானம், ஆடை, போர்வை தானம் தரலாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் ஏற்படும். பூமி யோகம் உண்டாகும். மாசி மாதத்தில் புது வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம். இதனால் சகல யோகங்களும் விருத்தியாகும். வாடகை வீடு மாறவும் உகந்த நாள். மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிட்டும். திருச்செந்தூரில் மாசி மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார். கடலூர் தேவானம்பட்டினம் கடற்கரையில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads