Pages

Monday, 25 November 2013

தீபத் திருவிழாவின் உட்பொருள்.

கார்த்திகை தீபம்:-
தீபத் திருவிழா எனும் திருக்கார்த்திகைத் திருவிழா ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் திருக்கோயில்களிலும், தமிழர் தம் இல்லங்களிலும் கொண்டாடப்பட்டு வரும் உன்னதப் பெருவிழா ஆகும். தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் இதற்கான சான்றுகள் உள்ளன என்கின்றனர்.

கார்த்திகை மாத வளர்பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடி வரும் நாளில் இல்லங்கள் தோறும் வரிசை வரிசையாக, அலங்காரமாக திருவிளக்கேற்றி வைத்து மக்கள் வழிபடுவர்.

திருஞான சம்பந்தப் பெருமான் திருமயிலையில், நந்தவனத்தில் அரவந்தீண்டி மாண்டு கலசத்தில் சாம்பலாக இருக்கும் பூம்பாவை எனும் இளம் கன்னியை மீண்டும் உயிர்ப்பித்தருள திருப்பதிகம் பாடும் போது இந்த விழாவினை ''கார்த்திகை நாள் தளத்து ஏந்தி இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு '' என்று சிறப்பித்துப் பாடுகின்றார் .

தீபத் திருவிழாவின் உட்பொருள் என்ன? அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் விளைவதே!...

பிரம்மனும் விஷ்ணுவும் ''நானே பெரியவன்'' என வாதாடி, பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் சோதிப் பிழம்பாகத் தோன்றி, ஜோதியின் அடியையும் முடியையும் தேடிக் காணும்படி அசரீரியாகக் கூறினார்.

எனவே ஜோதியின் திருமுடியைக் காண அன்னப் பறவையாய் பிரம்மன் விண்ணுலகத்தில் தேடினார். ஜோதியின் திருவடியைக் காண திருமால், வராகமாய் பாதாள லோகம் சென்று தேடினார். அவர்களால் அடிமுடி காண முடியாதபடி பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதல் என்று ஏற்றுக்கொண்டு, தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி அருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.

தஞ்சை பெரிய கோவிலில் திருஅண்ணாமலை
அதன்படி சிவபெருமான் திருக்கார்த்திகை அன்று ஜோதிப் பிழம்பாகக் காட்சியருளினார். இந்த வரலாறு தேவாரம் எங்கும் காணக் கிடைக்கின்றது.

இந்தத் தத்துவத்தை விளக்குவதே அண்ணாமலை தீபம் ஆகும்.

கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

அமரர் இடர் தீர்ப்பதற்கு என்று சிவபெருமான் தன் நெற்றிக் கண்களினின்றும் தோற்றுவித்த ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நின்றன. அந்தத் திருக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் தம் மடியேந்தி பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர். ஆறு குழந்தைகளும் அம்மங்கையரின் அன்பான அரவணைப்பில் திருமுலைப்பாலுண்டு சரவணப் பொய்கையின் திருக் கரையினில் விளையாடிக் கொண்டிருந்தன.

திருக்குமாரர்களைக் காண என்று சிவபெருமானுடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளிய அம்பிகை தன் அன்பு செல்வங்களை வாரி அணைக்க, ஆறு திருமேனிகளும் ஓருருவாகி ஆறு திருமுகங்களுடன் பேரொளிப் பிரகாச ரூபமாய் தேவியின் திருக்கரங்களில் எழுந்தருளியது. ஐயனும் அம்பிகையும் கந்தனுடன் திருக்கயிலை மாமலைக்குத் திரும்பும் முன் கந்தனைக் கனிவுடன் பாராட்டிப்பாலூட்டி வளர்த்த மங்கையர் அறுவர்க்கும் அருள் பாலிக்கச் சித்தம் கொண்டனர்.

அந்த மங்கையரும் சிவ சக்தியைப் போற்றிப் பணிந்து நின்றனர். சிவபெருமான் அவர்களை நோக்கி "உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்! கார்த்திகை பெண்களாகிய உங்களால் வளர்க்கப்பட்ட எங்கள் செல்வன் கார்த்திகேயன் என்ற திருப்பெயருடன் மக்களால் வழிபடப்படுவான். நீங்கள் அறுவரும் ஒருங்கிணைந்து கார்த்திகை நட்சத்திரமாகத் திகழ்வீர்களாக!.. கார்த்திகை நாளில் கார்த்திகேயனை வணங்குவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப்பெறுவர். இக்கார்த்திகை நன்னாளில் கார்த்திகேயனைப் போற்றி விரதமிருந்து வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இது கந்த புராணம் நமக்குக் காட்டும் நிகழ்ச்சி.

இறைவனை நாளும் நல்ல விளக்கேற்றி வழிபடுவது நமது நாட்டில் தொன்று தொட்டு வரும் பழக்கம். அது என்றென்றும் நலம் தரும் என்பது நம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .

முதல்நாள் பரணி தீபம். மறுநாள் திருக்கார்த்திகை தீபம் கார்த்திகை அன்று பகலில் விரதம் இருந்து மாலையில் வீட்டினுள் - பூஜை அறை, கூடம் எல்லா இடங்களிலும் திருவிளக்குகளை ஏற்றவேண்டும். வீட்டு வாசலிலும், மாடத்திலும், (இன்று புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் தலை வாசலின் இருபுறமும் மாடம் அமைப்பதே இல்லை) வீட்டில் கொல்லைப்புறம் இருந்தால் அங்கும், கிணற்றடியிலும், சிறு விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பூஜை செய்து அதன் பிறகே உணவு உண்ண வேண்டும்.

கார்த்திகை அன்று இந்தத் திருவிளக்கின் சுடர்கள்அசைந்தாடி இல்லம் எங்கும் பிரகாசிப்பதைக் காணும் போது மகிழ்ச்சியுடன் பக்தியும் தெய்வீகமும் விளங்கும் .

கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப் படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் நீளமுடைய துணியில் கற்பூர தூளை சேர்த்து வைத்து சுருட்டி திரியாக்கப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்தப் பெருஞ்சுடர் நான்கு, ஐந்து நாட்களுக்கு எரியும். 60 கி.மீ. தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது.

சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தில் வாழை மரத்தை நட்டு, அதனை சுற்றி அடைத்த தென்னை மட்டைகளுக்கு கருவறையிலிருந்து எடுத்து வந்த ஜோதியால் அக்கினியிடுவர். தீ மூண்டு சோதி வடிவாகத் திகழும். சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இறைவனின் ஒளி வடிவத்தை '' சொக்கப்பனை '' உணர்த்தும்.

சிவபெருமான், தன் முறுவலால் முப்புரங்களையும் எரித்து திரிபுர தகனம் நிகழ்த்தியதும், அம்பிகை இறைவனை வேண்டித் தவமிருந்து இடப்பாகம் பெற்றதும் இந்த நன்னாளில் தான் என்பது ஐதீகம்.

ஜோதிமலையாய், அருணாசலமாய் விளங்குவது திருஅண்ணாமலை. அனற் பிழம்பாக எம்பெருமான் எழுந்தருளிய மலை திருஅண்ணாமலை.

யோகியர், சித்தர்கள், தவஞானியர் வாழ்ந்த மலை திருஅண்ணாமலை. இன்றும் அவர்கள் வாழ்கின்ற மலை திருஅண்ணாமலை. தன்னை நாடி வந்தவர்களுக்கு மட்டுமன்றி நினைத்தவர்க்கெல்லாம் நல்லருள் வழங்கும் மலை திருஅண்ணாமலை..

ஜாதி,சமய, இன,மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி அருளும் மலை திருஅண்ணாமலை. முழுநிலா அன்று மக்கள் - வெள்ளமென வலம் வந்து வணங்கும் மலை திருஅண்ணாமலை.

உண்ணாமுலை உ மையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!...
- திருஞான சம்பந்தர்.

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே!...
- திருநாவுக்கரசர்.

அண்ணா மலைஎம் அண்ணா போற்றி!...
கண்ணார் அமுதக் கடலே போற்றி!..
- மாணிக்கவாசகர்.

திருஅண்ணாமலைக்கே உரிய அற்புதத் திருவிழா தீபத் திருவிழா.
திருவிளக்கின் பிரமாண்ட வடிவமே அண்ணாமலை தீபம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads