Pages

Monday, 13 May 2013

நந்தி தரிசனம், நல்ல பலன் தரும்!


நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’ என்பது பழமொழி. கோயில்களில் நடக்கும் நந்தி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு  அந்தப் பேறு உடனே கிட்டுகிறது. பொதுவாக கோயிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள். ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச் சிறப்புடையது. ஐந்து பிராகாரங்கள் உள்ள கோயில்களில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து  நந்திகளை தரிசிக்கலாம். ஒரு சமயம் இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வ தால் இவர் ‘போக நந்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.
        பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார். அதனால் அவர் பிரம்ம நந்தி எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே ‘வேத நந்தி’யும் ஆனார். முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான் தேரில் ஏறியதும் ‘தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது’ என்று கர்வம் கொண்டது தேர். இதனை  அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார். தேர் உடைந்தது. அப்போது மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை  தாங்கினார். அவர்தான் ‘மால் விடை’ என்று சொல்லக்கூடிய விஷ்ணு நந்தி. மகா பிரளய காலத்தில், தர்ம தேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் ‘தர்ம விடை’ எனப்படும் தர்ம நந்தி.
       கோயில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி ‘ஆன்ம நந்தி’ எனப்படும். இந்த நந் தியை ‘சிலாதி நந்தி’ என்றும் சொல்வர்.கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி. சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார். சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத்  தலைவராகவும் இருப்பவர். பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார். நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். குலம் செழிக்கும், சிறப்பான வாழ்வு அமையும் என்பர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads