Pages

Sunday, 19 May 2013

கடகம் குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்-28.5.2013 முதல் 12.6.2014 வரை.


குழந்தை பாக்யம் கிட்டு ம்.
இழுத்துக் கொண்டே போனால் அது இழுக்காகத்தான் போய் முடியும் என்ற பழமொழியை உணர்ந்த நீங்கள், காலம் கடத்தாமல் காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், தூய்மைக்கும் நேர்மைக்கும் பெயர் போனவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவை தந்த குருபகவான் இப்போது 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் விரய ஸ்தானமான 12ம் வீட்டில் நுழைவது ஒரு வகையில் நல்லதுதான். உங்களின் பாதக ஸ்தானமான 11ம் வீட்டை விட்டு குரு விலகுவதால் உங்களுக்கு பணவரவு குறையாது. ஷேர் மூலமும் பணம் வரும். ஆனால், சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் நெடுந்தூரம் பயணிப்பதை தவிர்க்கப் பாருங்கள்.
      பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புகழ் பெற்ற அண்டை மாநில புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் அறியாதவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி குடும்ப அந்தரங்க விஷயங்களையோ, தன் சொந்த விஷயங்களையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும்.
      பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். குருபகவான் உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதியது வாங்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று மதத்தவர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.
 குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென்று முயற்சிப்பீர்கள். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். என்றாலும் தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம்.
      சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். 29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் சஷ்டம, பாக்யாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் விஐபிகள் அறிமுகமாவார்கள். புகழ், கௌரவம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி கிடைக்கும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆனால், செலவுகளும் காத்துக் கொண்டிருக்கும். சொத்து வாங்குவீர்கள்.
      உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கடையை விரிவுபடுத்தி நவீன மயமாக்குவீர்கள். தொழில் ரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். துணி, மின்னணு, மின்சார சாதனங்கள், புரோக்கரேஜ், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.  கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.  சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். உங்களை சிலர் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு.
      சில சலுகைகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்டநாள் கனவுகள் நனவாகும். காதல் கைகூடும். சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலை நிமித்தம் காரணமாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாடு செல்வீர்கள். கூடுதல் மொழி கற்பீர்கள். திருமணம் தடைபட்டு முடியும். மாணவமாணவிகளே! கெட்ட நண்பர்களை தவிர்க்கப் பாருங்கள். எல்லாம் தெரிந்ததுபோல் இருக்காதீர்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ள வேண்டாம். தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நெருக்கமாவீர்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பக்கத்து நிலத்தை வாங்குவீர்கள்.
     இந்த குரு மாற்றம் புதிய திட்டங்களை நிறைவேற்ற உதவுவதுடன் ஓரளவு வசதி, வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
தஞ்சை  திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதரையும் வீணா தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads