Pages

Saturday, 18 May 2013

மேஷம் குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்-28.5.2013 முதல் 12.6.2014 வரை.

அடங்கிப் படுத்திருக்கும் நாய், அலையின்றி கிடக்கும் நீர்நிலை இரண்டிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை உணர்ந்த நீங்கள், சுற்றுச் சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப காய் நகர்த்துவதில் வல்லவர்கள். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் இதுவரை உங்களின் தன வீடான 2ம் வீட்டில் அமர்ந்து செல்வாக்கையும் பணவரவையும் தந்தார். வெளிவட்டாரத்திலும் உங்கள் கை ஓங்கியிருந்தது. பலரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், 28.5.2013 முதல் 12.6.2014
வரை உங்களின் விரய, பாக்ய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டியிருக்கும். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்களும் துரத்தும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம்.
      வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். அசைவ மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. மூச்சுத் திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சுவலி வந்துபோகும். மருத்துவரை ஆலோசித்து மருந்து உட்கொள்வது நல்லது. மனைவிவழி உறவினர்களால் செலவினங்களும் அலைச்சலும் இருக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வரும். அன்பும் அன்யோன்யமும் குறையாது. விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்னையால் நிம்மதியிழப்பீர்கள். தந்தையாருடன் இருந்த கருத்து மோதல்கள் குறையும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். குருபகவான் 11ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் திறமைகள் வெளிப்படும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். சொத்துகள் மூலம் திடீர் பணவரவு உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வாகனம் வாங்குவீர்கள். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுபகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள், வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக் கூடும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் பாக்ய விரயாதிபதியான குருவின் சாரத்திலேயே குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் ஓரளவு கைக்கு வரும்.
       குழந்தை பாக்யம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு புதுவேலை கிடைக்கும். திருமணம், கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பாதியில் நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகளை கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படப் பாருங்கள்.
     வேலையாட்களால் பிரச்னைகள் வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள். அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களும் வீண் பழியும் வந்து செல்லும். திறமை இருந்தும் கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றமும் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டாம்.
       கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். காதல் கசந்து இனிக்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் போராடி இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும். போட்டிகள் இருக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியினரை தகுந்த ஆதாரமில்லாமல் தாக்கிப் பேச வேண்டாம். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். அக்கம்-பக்க நிலத்தாரை அனுசரித்துப் போங்கள். மரப்பயிர் லாபம் தரும்.
     இந்த குரு மாற்றம் ஏமாற்றங்களையும் எதிலும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் மகிழ்ச்சியை தரும்.
பரிகாரம்: 
மதுரை: திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை சஷ்டி திதியன்று சென்று தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads