Pages

Wednesday, 16 January 2013

பிரம்மாண்டமான அருவி பூங்கா -குற்றாலம்.


ஐந்தருவி: குற்றாலம் ஐந்தருவி பழத்தோட்ட பண்ணையில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான அருவி பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். அவர்கள் பொழுதை போக்க குறிப்பிட்டு சொல்லும் படியான வசதிகள் குற்றாலத்தில் இல்லை. குறிப்பாக மெயினருவி பகுதியில் அமைந்துள்ள பூங்கா மற்றும் சிறுவா பூங்கா, ஐந்தருவி செல்லும் சாலையில் படகுகுழாம் ஆகியவை மட்டுமே உள்ளது. சீசன் காலங்களை தவிர்த்து மற்ற காலங்களில் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும். இதற்கு குற்றாலத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததும் ஒரு காரணமாகும். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் குற்றாலத்திற்கு ஆண்டிற்கு 3 மாதம் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் அவல நிலை உள்ளது வேதனைக்குரியது. இந்த குறையை போக்குவதற்காக ஆண்டு முழுவதும் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வகையில் அருவிப்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குற்றாலம் ஐந்தருவி பகுதியில் தோட்டக்கலை சார்பில் அமைந்துள்ள பழத்தோட்ட பண்ணையில் ரூ. 5.22 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாய் அருவி பூங்கா அமைக்க கடந்த 2010ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. தற்போது இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மலை மீது இயற்கை எழிலுடன் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமையயுள்ள இந்த அருவி பூங்காவில் குளம், வாகனங்கள் நிறுத்துமிடம், மூங்கில் தோட்டம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மலர் வனம், சிறுவர்கள் விளையாடும் இடம், நீர்வீழ்ச்சி, நீர்விளையாட்டு திடல், நீரோட்ட நடைபாதை, பாறைத்தோட்டம், காகிதப்பூ தோட்டம், நறுமணப் பூங்கா, சிற்ப விலங்கு தோட்டம், பழத்தோட்டம், கற்பாதை பூங்கா, இயற்கை பூங்கா, உணவகம், பசுமை குடில், புல்வெளி, சூரிய ஒளிவிளக்கு போன்றவை அமைக்கப்படவுள்ளது. அருவி பூங்கா அமைக்கும் பணி துவங்கி சுமார் 2 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையில் இந்தாண்டு சீசனுக்குள் பணிகள் நிறைவு பெற்றுவிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றாலும், பணிகள் முழுமை பெறவில்லை. இந்தாண்டு சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் துவங்கிவிடும். அதற்குள் பணிகள் முடித்து, சுற்றுலாப் பயணிகள் உள்ளே பூங்காவுக்குள் அனுமதிக்கபடுவார்களா என்பது கேள்விக்குரியாக உள்ளது. அருவி பூங்கா பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருப்பதாலும் ஆண்டு முழுவதும் பரவலான மழை, சில்லென்ற சூழல், மலைச்சரிவுகள், இயற்கையான நீரோடை, ஐந்தருவிக்கு பாய்ந்து செல்லும் தண்ணீரின் ஆர்ப்பரிக்கும் சத்தம், மேகக் கூட்டகள் என இயற்கை வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த அருவி பூங்கா அனைவரையும் கவரும் வகையில் அமைய உள்ளது.
Key word; குற்றாலம், பிரம்மாண்டமான அருவி பூங்கா.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads