Pages

Wednesday, 5 December 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்- சினிமா விமர்சனம்.


நாளை மறுநாள் தன் காதலியான காயத்ரியுடன் கல்யாணம் என்கிற நிலையில் இருக்கும் புதுமாப்பிள்ளை விஜய் சேதுபதி. பொழுதுபோவதற்காக தனது நண்பர்கள் மூன்று பேருடன் கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடிவிட்டு வரலாம் என்று செல்கின்றார்.

நண்பன் அடிக்கும் பந்தை பறந்து வந்து பிடிக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடுகிறது. இதனால் கடந்த ஓரிரு வருடங்களில் நடக்கும் அத்தனை சம்பவங்களும் மறந்து போய்விடுகிறது. தற்போதும் அவரிடம் எது சொன்னாலும் அதனையும் உடனுக்குடன் மறந்து போகிறார்.

இந்த பிரச்சினை பெண் வீட்டுக்குத் தெரிந்தால் திருமணம் நடக்கவிடமாட்டார்கள் என நண்பர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கும், காயத்ரிக்கும் திருமணம் நடந்ததா? என்பதை படம் முழுக்க சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.

படம் முழுக்க கலகலப்பாக போகிறது. சீரியசான கதையை இப்படி காமெடியாக சொல்லமுடியுமா? என்னும் கேள்விக்கு சொல்லமுடியும் என சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

விஜய் சேதுபதி மற்றும் அவருடன் நணபர்களாக வரும் மூன்று பேரும் தங்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார். திருமண மண்டபத்தில் இவர் செய்யும் கலாட்டாவாகட்டும்.... தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்துவிட்டு சொன்ன வார்த்தையையே திரும்ப திரும்ப சொல்லும் போதும் ரொம்பவும் கலகலப்பூட்டுகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வருகிறார் காயத்ரி. படத்தில் இவருக்கு நீண்ட நேரம் வருகிற கதாபாத்திரம் இல்லை. ஆகையால் நடிப்பதற்குண்டான வாய்ப்பும் குறைவே.

படத்திற்குண்டான லொக்கேஷன்ஸ் தேர்வும் குறைவே. கல்யாண மண்டபம், மருத்துவமனை, வீடு, கிரிக்கெட் கிரவுண்டு என நான்கு இடங்களிலேயே படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். கடைசி அரைமணி நேரம் கதை முழுக்க முழுக்க திருமண மண்டபத்திலேயே நடக்கிறது. இருப்பினும், எந்தவித சலிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தைதான் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவருடைய ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் வேத்சங்கரின் பின்னணி இசையும் படத்திற்கும் மேலும் பலம் சேர்த்திருக்கின்றன.

மொத்தத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ சிரிப்பு அலை.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads