புத்தாண்டையொட்டி ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு இன்று முதல் அமுல்படுத்துகிறது.
மத்திய அரசு உணவு பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம் அடிதட்டு மக்களுக்கு முழுமையாக சென்றடையாமல் ஊழல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தது.
எனவே, மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டத்தை அமல்படுத்த நாடு முழுவதும் ஆதார் எண்ணையும் வங்கி கணக்கையும் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக இந்த திட்டம் ஆதார் அட்டை முழுமையாக வழங்கப்பட்ட 43 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாவட்டங்களில் மட்டும் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதில் புதுவை மாநிலமும் அடங்கும்.
புதுவை மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி ஆகிய 3 பிரதேசங்கள் இணைந்துள்ளது. முதல் கட்டமாக எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவி தொகை, இந்திராகாந்தி சகாயதாயோஜனா, தனலட்சுமி திட்டம், எஸ்.சி., எஸ்.டி. வேலைவாய்ப்பு உதவி தொகை உள்ளிட்ட 7 திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதற்காக புதுவை மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் கட்டமாக 7 திட்டங்களின் கீழ் நிதி உதவி நேரடியாக அளிக்கப்படும். ஒரு சில பயனாளிகளின் ஆதார் எண்ணையும் வங்கி கணக்கு எண்ணையும் இணைப்பது முழுமை அடையவில்லை. இதனால் இந்த திட்டம் இன்னும் ஓரிருநாளில் புதுவையில் முழுமைப்படுத்தபப்டும்.
அதன் பிறகு மொத்தம் 26 திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்கப்படஉள்ளது. இதற்காக புதுவை மாவட்டம் முழுவதும் ஆதார் அட்டை பெறாதவர்களுக்கு முகாம்கள் மூலம் பதிவு நடக்கிறது. விரைவில் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். இதேபோல் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதற்காக ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் டீசல், மண்எண்ணை, உணவு பொருட்கள் மற்றும் உரத்துக்கான மானியம் வழங்கப்படுவதில் நடைமுறை சிக்கல் உள்ளதால் இப்போதைக்கு செயல்படுத்தப்படாது. ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment