Pages

Friday, 21 December 2012

விசைப்படகில் சோலார் மின்சக்தி.


      குமரி மாவட்ட மீனவர் ஒருவர், சோதனை முயற்சியாக தனது ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகில் சோலார் மின்சக்தியை பயன்படுத்தி தினமும் 30 லிட்டர் வரை டீசலை மிச்சப்படுத்தியுள்ளார். குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையைச் சேர்ந்தவர் தியோக்குளஸ். இவருக்கு சொந்தமாக விசைப்படகு உள்ளது. பொதுவாக ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது மின் தேவைக்காக எப்போதும் விசைப்படகின் இன்ஜினை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் எரிபொருள் அதிகம் செலவாகிறது.

இதை கருத்தில் கொண்டு தியோக்குளஸ் தனது விசைப்படகின் மேல்பகுதியில் சோலார் தகடு பொருத்த தீர்மானித்தார். ஆழ்கடல் மீன்பிடி சங்க நிர்வாகிகளை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் உதவியுடன் அவர் தனது விசைப்படகின் மேல் தளத்தில் சுமார் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் சோலார் மின் தகடு பொருத்தினார்.

சோலார் தகடு பொருத்தப்பட்ட விசைப்படகில் முதன்முறையாக கடந்த நவ.30ம் தேதி கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து தியோக்குளஸ் மீன்பிடிக்க புறப்பட்டார். அவரது படகை கலெக்டர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 20 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு டிச.18ம் தேதி இரவிபுத்தன்துறை பகுதியில் கரை திரும்பினார். கரைக்கு வந்த விசைப்படகை மீன்வளத்துறை அதிகாரிகள் ரூபர்ட் ஜோதி, ஐசக் ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக படகின் உரிமையாளர் தியோக்குளஸ் கூறியதாவது.

கடலில் மீன்பிடித்த போது சோலார் தகடில் இருந்து பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம் மூலம் மின் விளக்குகள், ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு தேவையான மின்சாரம் கிடைத்தது. இதனால் இரவு நேரங்களில் மின் பிடித்துக் கொண்டிருக்கும் போது விசைப்படகு இன்ஜின் இயக்காமல் நிறுத்தி வைக் கப்பட்டது. ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது ஒரு நாள் சுமார் 100 லிட்டர் டீசல் செலவாகும். தற்போது சோலார் தகடு பொருத்தப்பட்ட பிறகு சுமார் 70 லிட்டர் டீசல்தான் ஆகிறது. அதன்படி ஒருமுறை படகு ஆழ்கடலில் மீன் பிடித்து வரும்போது (20 நாட்கள்) 30 ஆயிரம் ரூபாய் செலவு குறைகிறது என்றார்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads