Pages

Monday, 19 November 2012

முடி உதிரும் பிரச்னைக்கு முடிவு.


‘உள்ளங்கை... உடலின் இந்தப் பகுதிக்குத்தான் அக்குபிரஷரில் முக்கிய இடம். காரணம்... கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உயிர்காக்கும் அத்தனை உறுப்புகளுடனும் தொடர்புடைய அக்கு புள்ளிகள் இங்குதான் குவிந்து கிடக்கின்றன. அதாவது, உள்ளங்கை என்கிற சுவிட்ச் போர்டில் பட்டனைத் தட்டினால் உடலின் எந்த இடத்திலும் வெளிச்சத்தைப் பாய்ச்சலாம்!

கொஞ்சம் முந்தைய காலத்துக்குப் போய் பார்த்தாலும், ஐந்து விரல்களை பஞ்ச பூதத்தோடு தொடர்பு படுத்தியே சொல்கிறது நம் பாரம்பரிய மருத்துவம். கட்டை விரல்-நெருப்பு, ஆள்காட்டி விரல்-காற்று, நடு விரல்-ஆகாயம், மோதிர விரல்-நிலம், சுண்டு விரல்-நீர் என்று நம் முன்னோர்கள் வகுத்திருந்தார்கள். இந்த விரல்களைக் கொண்டு நம் உடலில் உள்ள ஐம்பூதங்களை சமன் செய்து நோய்களைத் தீர்த்தார்கள்.

அதே விரல் இப்போது தீர்க்கப் போகும் பிரச்னை எது தெரியுமா? நம் எல்லோருக்கும் தலையான தலைமுடி பிரச்னை! எண்சாண்
உடலுக்கு தலையே பிரதானமென்றால், அந்தத் தலைக்கு மகுடம் முடி.  சமீபமாக சிறுமிகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே சினைப்பை கட்டிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதற்கும் முடி உதிர்தலுக்கும்கூட தொடர்பு உள்ளது.

முடி உதிர்ந்து உதிர்ந்து தரும் கவலையைவிட, இருந்தபடி தரும் கவலை சிலருக்கு அதிகம். இளநரை, பொடுகுப் பிரச்னை போன்றவை அந்த லிஸ்ட்டில் அடக்கம்!

மற்ற பிரச்னைகளிலிருந்து தலை முடி மட்டும் அக்குபிரஷரில் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது. காரணம், விரல்களுக்குப் பதில் இங்கு நகமே அழுத்தத்துக்குப் பயன்படுகிறது. இரண்டு கைகளிலும் கட்டை விரலைத் தவிர்த்து மற்ற எட்டு விரல்களின் நகங்களை ஒன்றுடன் ஒன்று உராயச் செய்தலே போதுமானது. கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருப்பதாக நினைப்பவர்கள், தினமும் 10 நிமிடங்கள் வரை காலையிலும் இரவிலும் சாப்பிடுவதற்கு முன்பாக இதைச் செய்து பாருங்கள்... மூன்றே மாதங்களில் ரிசல்ட் தெரியும். நகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டிருக்கும்போதே தலையின் மேற்பகுதியில் ஒரு சக்தியோட்டம் பாய்வதையும் அனுபவிப்பீர்கள்.

இந்த நக உரசல் சிகிச்சை தவிர, ‘ப்ளம் பிளாசம் நீடில்’ எனப்படும் ஊசி மூலமான சிகிச்சை இன்னொரு ரகம். சுத்தமாக வழுக்கை விழுந்தவர்களுக்கும் இதன் மூலம் நிவாரணம் கிடைக்கிறது. தலையின் மேற்பரப்பில் 7 ஊசிகளைக் கொண்டு மெதுவாகத் தட்டுவதன் மூலம் மேற் பகுதியின் தோல் திறந்து மயிர்க்கால்களின் வேர்ப்பகுதியானது தூண்டப்பட, புதிய முடி முளைக்கத் தொடங்குகிறது. அழகான ஆரோக்கியமான தலைமுடியை விரும்பாதவர் யார்? தினமும் கண்ணாடி முன் நின்று தலை சீவும்போது, சீப்பில் ஒரு முடி தெரிந்தாலும் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளுமே... அந்தக் கவலைக்கு எத்தனை எளிமையான ஒரு தீர்வை நம் உடலுக்குள்ளேயே இயற்கை ஒளித்து வைத்திருக்கிறது பாருங்கள்!

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். ‘அக்கு’ சிகிச்சையும் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இவற்றோடு எல்லாம் சம்பந்தப்பட்டதே. நிபுணர்களிடம் போய் அக்கு சிகிச்சை எடுப்பவர்களும் சரி, ஓரளவு கற்றுக்கொண்டு தாங்களாகவே சிகிச்சை செய்து கொள்கிறவர்களும் சரி... ஓரளவு குணமானதும் ‘பிரச்னைதான் சரியாயிடுச்சே’ என பழைய ரூட்டிலேயே பயணிக்கக் கூடாது. அது திரும்பவும் சிக்கலுக்கு வழி வகுத்து விடும். நோய் என்பதே உடல் ஏற்றுக் கொள்ளாத விஷயங்களை நாம் அதன் மீது திணிக்க முயற்சிக்கும்போது வருவதுதான். எனவே, நம் உணவையும் பழக்கவழக்கங்களையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து செய்ய வேண்டுமா என்று வாயைப் பிளப்பதற்கு அக்குபிரஷர் பயிற்சி ஒன்றும் கடினமானது அல்லவே. காசா, கட்டணமா நம் நகத்தை நாமே உரசிக் கொள்வதற்கு? அங்குதான் நிற்கிறது அக்குபிரஷர்!

ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்

*  சிகிச்சை எடுக்கிற நாட்களில் இரவில் படுக்கும் முன் கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிது வினிகர் கலந்து தலைக்குத் தேய்த்து வருவது கூடுதல் பலன் தரும்.

*  சாப்பாட்டில் புடலங்காயை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இதிலுள்ள கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், கரோட்டின் போன்ற சத்துக்கள் தலைமுடிக்கு ஆரோக்கியம் அளிப்பவை.

*  கறிவேப்பிலையில் முடிக்குத் தேவையான 7 அமினோ அமிலங்கள், ஜிங்க், காப்பர், நியாசின், ஃபோலிக் அமிலம் போன்ற அனைத்தும் உள்ளதால் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

*  டீ, காபியைக் குறைத்தால் இளநரையிலிருந்து தப்பிக்கலாம்.

*  புளித்த தயிர், புளியோதரை போன்றவற்றை அதிகம் சேர்ப்பதே பொடுகுப் பிரச்னைக்குக் காரணமென்பதால், அவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads