Pages

Tuesday, 23 October 2012

ஜெயமாதா பராசக்தி-எடுத்த காரியம் வெற்றி.



இந்துக்களின் வழிபாடுகளில் முக்கிய இடம் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள், திதிகளுக்கு ஏற்ப விரதங்கள், பண்டிகைகள் வருகின்றன. சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம். தை மாதம் தை அமாவாசை என்று கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே ‘நவராத்திரி’ விழாவாகும். இந்த நோன்பு விழா ஸ்ரீசக்கர நாயகியான அம்பாளுக்காக எடுக்கப்படும் விழா. நவமி முடிந்த அடுத்த நாள் தசமியாகும். நவராத்திரி நவமி முடிந்தவுடன் வரும் தசமி ‘விஜயதசமி’ என்று சிறப்பிக்கப்படுகிறது.

நவராத்திரியில் துர்கா தேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து ஒன்பதாம் நாள் போரில் வென்று வெற்றிக் கொடி நாட்டினாள். இது நவமி திதியில் நிகழ்ந்தது. இது முடிந்த மறுநாள் தேவர்கள் இந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால் விஜயதசமி என்று வழங்கலாயிற்று. ‘விஜயீ’ என்றால் வெற்றி என்று பொருள். ‘விஜயீ பவ’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் வாழ்த்துவது இந்த நோக்கத்தில்தான். 9 நாள் நவராத்திரி விழா, விஜயதசமியுடன் சேர்த்து தசரா என்று அழைப்பார்கள். தசம் என்றால் பத்து. பத்து நாட்கள் நடக்கும் விழா என்பதால் தசரா என்று அழைத்தனர். இந்த பத்து நாட்களில் கடைசி மூன்று நாட்கள் மிகவும் விசேஷம்.

அதாவது அஷ்டமி, நவமி, தசமி ஆகிய இந்த மூன்று திதி களும் மிக முக்கிய மாக கருதி பூஜை செய்யப் படு கிறது. சாதாரண மாக நம் இல்லங் களில் எந்த நல்ல காரி யங்கள், விசேஷங் கள், முக்கிய பேச்சு வார்த்தைகளைகூட இந்த இரண்டு திதிகளில் செய்ய மாட்டோம். ஆனாலும் இறைவன் எல்லா திதிகளிலும் உறைகின்றான் என்பதை உணர்த்தவே இந்த நவராத்திரியில் இந்த திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள், முக்கிய விசேஷங்களில் நாம் அஷ்டமி, நவமி திதிகளை விலக்கி வைக்கின்றோம். இந்த முறை காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு அப்படியே வழிவழியாக வருகிறது. ஆனால் அஷ்டமி, நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம். பைரவர், சரபேஸ்வரர், வராஹி போன்ற தெய்வங்களுக்கு அஷ்டமி திதியில் முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யப்படுகின்றன.

காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்களுக்கும் இந்த இரண்டு திதிகளில் முக்கிய பூஜைகள் நடைபெறும். பொதுவாக பிறந்த நாள் கொண்டாடும்போது நட்சத்திரத்தை வைத்து ஜெயந்தி என்று கொண்டாடுவார்கள். ஆனால் ராமர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ராம நவமி என்றும், கிருஷ்ணர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இதன்மூலம் இந்த திதிகளும் சிறப்பு பெறுகிறது. ஆதி சக்தியாம் அம்பாளை வணங்குவதற்கு ஒன்பது இரவுகளை முன்னோர்கள், மூத்தோர்கள் தேர்வு செய்தனர். இதற்காக புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்களை கணக்கிட்டனர்.

காரணம் இரவுக்கு அதிபதி சந்திரன், மேலும் அமாவாசையில் இருந்து சந்திரன் வளர்பிறையில் இருப்பதாகவும், அம்பாளின் அம்சமாக சந்திரன் திகழ்வதாலும் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர். இந்த காலகட்டத்தில் அம்பாளை வணங்குவதால் நம் அறியாமை எனும் இருள் நீங்கி பக்தியும், புத்தியும், ஞானமும், செல்வமும் ஒருங்கே வந்து சேரும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் மட்டுமின்றி எல்லா கோயில்களிலும் சிறப்பான அபிஷேக ஆராதனைகளும், சுவாமி புறப்பாடும் இருக்கும். அம்மன், அம்பாள் ஸ்தலங்கள், நவதிருப்பதிகள், திவ்ய தேசங்கள் போன்றவற்றில் உற்சவங்களும், பிரம்மோற்சவங்களும் நடைபெறும். அம்பாள் தினமும் ஒரு வாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

மேலும் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்சத்தில் அலங்கார ரூபிணியாக அருள்பாலிப்பாள். கவுரி அம்மனாகவும், சரஸ்வதியாகவும், பத்மாசினியாகவும், மகேஸ்வரியாகவும், ராஜராஜேஸ்வரியாகவும், மீனாட்சியாகவும், காமாட்சியாகவும், அன்னபூரணியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் வலம் வருவாள். நவராத்திரியில் வரும் நவமி மகா நவமி என்றும் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சிறிய கடை முதல் பெரிய தொழிற்சாலைகள், கல்வி கூடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். புத்தகங்கள், நோட்டு பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து மாணவர்கள் வணங்குவார்கள்.

எல்லா துறைகளில் இருப்பவர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் பொருட்களை வைத்து வணங்குவார்கள். இயந்திரங்களுக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து தமக்கு வாழ்வளிப்பதற்காக அதற்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள். லாரி, பஸ், கார், பைக், சைக்கிள் முதற்கொண்டு எல்லா வாகனங்களுக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு திருஷ்டி கழித்து, எலுமிச்சம்பழத்தில் ஏற்றி வாகன ஓட்டத்தை தொடங்குவார்கள். இதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகும். இன்றைய தினம் புதிதாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள், புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஏதாவது புதிய பொருள் வாங்குவார்கள். ஒப்பந்தங்கள் போடுவார்கள். இயல், இசை, நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வணங்குவார்கள்.

அவரவர்கள் சார்ந்துள்ள தொழில்களில் இன்றைய தினம் புதிதாக ஆரம்பம் செய்வார்கள். இதற்கு காரணம் இது வெற்றியை குறிக்கும் தினம். ஆகையால் எல்லா செயல்களும் வெற்றி பெற வேண்டும் என்று பூஜை செய்து வேண்டிக் கொள்வார்கள். நவராத்திரியின் தத்துவமே ஆதிசக்தியான அன்னை எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறாள் என்பதே. எல்லா உருவங்களிலும் அவளின் சக்தி வெளிப்படுகிறது என்பதை உணர்த்தவே பல்வேறு விதமான பொம்மைகளை வைத்து வணங்கும் கலாசாரம் ஏற்பட்டது.

இந்த ஒன்பது இரவுகளிலும் தனி சக்தியாக விளங்கும் ஜெகன்மாதா பத்தாம் நாள் விஜயதசமியன்று ஈஸ்வரனை வணங்கி சிவசக்தி சொரூபமாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்த நாரீஸ்வரராக உருவெடுக்கிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு. நவராத்திரியிலும் ஆயுத பூஜையன்றும் விஜயதசமியன்றும் அன்னை பராசக்தியை வணங்குவோம். அவள் அருள் பெறுவோம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads