Pages

Wednesday, 24 October 2012

மோர்க் குழம்பு.


தேவையான பொருள்கள்:
1.கெட்டியான தயிர் – 1 1/2 கப்
2.காய் – 15, 20 துண்டுகள் (பெரிது)
3.தேங்காய்த் துருவல் – 1 கப்
4.பச்சை மிளகாய் – 6, 7
5.சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
6.இஞ்சி – சிறு துண்டு (விரும்பினால்)
7.மஞ்சள் தூள்
8.பெருங்காயம்
9.உப்பு – தேவையான அளவு
10.தேங்காயெண்ணை
11.கொத்தமல்லித் தழை.
தாளிக்க: 
தேங்காயெண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
மிக லேசாகப் புளித்த, கெட்டியான (கொஞ்சம் க்ரீமியாகவும் இருந்தால் சுவையாக இருக்கும்) தயிரை தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும்.
ஏதாவது காயை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
முற்றிய தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்த் துருவல், (ஆனால் கொப்பரை மாதிரி காயாயதாக அல்லது துருவல் ஃப்ரிட்ஜில் வைத்ததாக இல்லாமல், புதிதாக உடைத்த தேங்காயாக இருந்தால் சரியாக இருக்கும்.) பச்சை மிளகாய், சீரகம், இஞ்சியை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், வேகவைத்த காய், அரைத்த விழுது சேர்த்து அடுப்பில் நிதானமான தீயில் வைக்கவும்.
மெதுவாகச் சூடேறி, பொங்கி வரும்போது பச்சைத் தேங்காயெண்ணை 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும்.
வாணலியில் எண்ணையில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.
* வெண்டை, கத்தரி, முருங்கை, வாழை, சேனை, சேப்பங்கிழங்கு என்று நாட்டுக் காயான எதையும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடித்தது பூசணிக்காய்.

* இன்னும் காரம் தேவை என்று தோன்றினால் தாளிக்கும்போது ஒரு காய்ந்த மிளகாய் அல்லது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நான் செய்வதில்லை.

* வாழை சேனை மட்டும் சேர்த்துச் செய்தால் தான் காளன். இது மோர்க் காளன் என்று சிலர் சொல்கிறார்கள். எப்படியும் இது மோர்க் குழம்பில் ஒரு வகை. அவ்வளவே. அப்புறம் நான் எப்பொழுதும் மோர்க் குழம்பு செய்வதும் இந்த முறையே.

* அடுப்பில் வைக்காமலே மஞ்சள் தூள், உப்பு, காய், அரைத்த விழுது எல்லாம் சேர்த்து பச்சை மோர்க் குழம்பும் செய்கிறார்கள்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் பருப்பு கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எந்தக் காரக் கறி அல்லது பருப்பு உசிலியுடனும் சேரும். குழம்பிலிருக்கும் காய் தயிர்சாதத்திற்கு சுவையாக இருக்கும்.

அடை, இடியாப்பம், ஆப்பம் வகைகளுக்கும் இந்தக் குழம்பை தொட்டுக் கொள்ளலாம்.
Key word:மோர்க் குழம்பு 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads