நம் நாட்டில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கியாஸ் சிலிண்டர் ஒன்று தற்போது மானிய விலையில் ரூ. 398-க்கு விற்கப்பட்டு வருகிறது. இனி இந்த மானிய விலையில் வாங்கப்படும் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் புதியதாக வாங்கும் கியாஸ் சிலிண்டர்களுக்கு பாதுகாப்பு டெபாசிட் கட்டணத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இக்கட்டணம் ரூ. 900 ஆக இருந்தது. நேற்று முதல் இந்த பாதுகாப்பு டெபாசிட் கட்டணத்தை ரூ. 1450 ஆக உயர்த்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் ரூ. 1150 ஆக உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களில் புதிய கியாஸ் சிலிண்டர்கள் வாங்குபவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு டெபாசிட் கட்டணம் உயர்ந்ததை தொடர்ந்து புதிதாக இன்டேன் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வாங்கும் போது மொத்தம் ரூ. 2500 செலுத்த வேண்டும். இதில் ரெகுலேட்டருக்கான பாதுகாப்பு டெபாசிட் ரூ. 150, கியாஸ் டியூப்புக்கு ரூ. 170 மற்றும் நிர்வாக செலவினங்களும் அடங்கும்.
தற்போது சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் ஒன்று மானிய விலையில் ரூ. 398-க்கு விற்கப்படுகிறது. பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் வைத்திருப்பதை தடுக்கவே பாதுகாப்பு டெபாசிட் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வைத்திருப்பவர்கள் அதை உடனடியாக திரும்ப ஒப்படைப்பது நல்லது. இல்லாவிட்டால் அந்த வீட்டில் உள்ள கியாஸ் இணைப்பு முழுவதும் ரத்து செய்யப்படும் என்றார்.

No comments:
Post a Comment