அண்ணா வளைவை அகற்றும் பணியை கைவிட்டு மாற்றுப்பாதையில் பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுப் பாதையில் பாலம் அமைப்பதற்கான இடதேர்வு, கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன.
இதற்கிடையில் அறுத்து அந்தரத்தில் நிற்கும் அண்ணா வளைவு, அதிகாரிகளை திகிலடைய வைத்துள்ளது. கீழே விழுந்து விடாமல் இருக்க ராட்சத கிரேன் மூலம் தாங்கி பிடிக்க செய்துள்ளனர்.
அறுத்த வளைவை மீண்டும் ஒட்ட வைக்க மும்பையில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆலோசனையின்படி ஒட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூணின் மேற்பகுதியிலும் அறுபட்ட வளைவின் மேல் பகுதியிலும் துளைகள் போட்டு இரும்பு கம்பிகளை சொருகி கான்கிரீட் கலவையால் பூசி ஒட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் ஒட்டி வைத்தால் பலமாக நிற்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏனென்றால் இந்த வளைவின் எடை 85 டன், 56 அடி உயரத்தில் 85 டன் எடையுடன் வளைவு நிற்கிறது. இனி ஒட்டி வைப்பதால் இவ்வளவு அதிகமான எடையை தாங்கி அண்ணா வளைவு பலமாக இருக்குமா என்பதை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த வளைவை ஒட்டி பலப்படுத்தும் வரை கிரேன் உதவி கட்டாயம் தேவை. எனவே அதுவரை வளைவை தாங்கி பிடித்தபடி கிரேனை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment