வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு
இலவச செல்போன் மத்திய அரசு அதிரடி
நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 கோடி பேருக்கு ரூ.7 ஆயிரம் கோடியில் இலவச செல்போன் வழங்க மத்திய அரசு சூப்பர் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை சுதந்திர தின விழாவின்போது பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொடர்பு துறையில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு செல்போன் என்பது இன்னும் கனவாகவே உள்ளது. இந்த நிலையை மாற்ற, அனைவருக்கும் செல்போன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்துக்கு ‘ஒவ்வொரு குடிமகன் கையிலும் ஒரு செல்போன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த அனைவருக்கும் இலவச செல்போன் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே சுமார் 60 லட்சம் குடும்பங்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 முதல் 5 பேர் வரை இருப்பதாக எடுத்துக் கொண்டால் மொத்தம் 3 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இலவசமாக செல்போன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெறும் போன் மட்டும் வழங்காமல், மாதம் 200 லோக்கல் கால்களையும் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய திட்ட கமிஷன் மற்றும் தொலைதொடர்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 15&ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங், தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றுகிறார். அப்போது இந்த புதிய திட்டம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Key word:இலவச செல்போன்

No comments:
Post a Comment