Pages

Monday 27 August 2012

பூலோக கற்பக விருட்சம்!


பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
“தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்" என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பனையின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். ஆனால் நூறு ஆண்டுகள் வரை பனை உயிருடன் இருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரத்தில் நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும்.
பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும்.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். தினமும் காலை எழுந்தவுடன் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் குணமடையும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். கோடை காலத்தில் பதநீரும் நுங்கும் கலந்து பருக உடலுக்கு குளுமை தரும்.
பனம்பழம்:
பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும். தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது. பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும். பனம்பழம் மலத்தை இறுக்கிவிடும்.
உடலைத் தேற்றும் பனங்கிழங்கு
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும்.
பனை மரத்தின் பாகங்கள்:
பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது.

 இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். பனங்காயில் பிரஷ், கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது.
 
Key word: இளநீர், கற்பகமரம், நுங்கு, பனை,பனம்பழம்,பனங்கிழங்கு.

1 comment:

ADVERTISE HERE.

space for ads