10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு விரைவில் அறிமுகமாகிறது
கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு கொண்டு வரப்படுகிறது. முதல் கட்டமாக, 5 முக்கிய நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எச்.ஆர்.கான் நேற்று தெரிவித்தார். நாட்டில் சமீப காலமாக கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட கள்ள நோட்டுகள் தீவிரவாதிகள் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கள்ள நோட்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ள நோட்டுகளை கண்டறிய உதவும் வகையில் தனி வெப்சைட் உள்பட பல நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும் எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இது பற்றி, இந்த வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர்.கான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தால், அதை போல கள்ள நோட்டு உருவாக்குவது மிக கடினம். எனவே, ரிசர்வ் வங்கி முதல் கட்டமாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளது. இது முன்னோடி திட்டமாக, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் உள்பட 5 நகரங்களில் செயல்படுத்தப்படும். ரிசர்வ் வங்கியின் 5 மண்டல அலுவலகங்கள் மூலம் புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளில் வங்கி இறங்கியுள்ளது. இவ்வாறு எச்.ஆர்.கான் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் நோட்டுகள் 5 ஆண்டு காலத்திற்கு நீடித்திருக்கும். அதே சமயம், தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அதிகபட்சம் ஓராண்டுக்குத்தான் சேதம் அடையாமல் இருக்கின்றன. இதனால், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு கொண்டு வருவதில் செலவும் மிச்சமாகும். தற்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, ருமேனியா, பெர்முடா, புருணை, வியட்நாம் ஆகிய நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன
No comments:
Post a Comment