காய்ச்சல், தலைவலி ரேஞ்சுக்கு மக்களுக்கு அறிமுகமான ஒரு உடல்நலப் பிரச்சினை சைனஸ்.
லேசாக ஜலதோஷம் பிடித்து மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருந்தாலே டாக்டர்... எனக்கு சைனஸ் பிரச்சினை...!' என்று தீர்மானமான முடிவோடு வந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு நம் மக்களின் சிந்தனையில் ஐக்கியமாகி விட்ட ஒரு வார்த்தை சைனஸ்.
பெரும்பாலான மக்கள் நினைப்பது போல எல்லா ஜலதோஷமும் சைனஸ் ஆகிவிடாது. சைனசுக்கு ஜலதோஷம் தான் வித்திடுகிறது. ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம் தான் சைனஸ் என்றாலும் கூட இரண்டுக்கும் இடையே தெளிவான ஒரு எல்லைக்கோடு இருக்கிறது.
ஜலதோஷம் என்பது மூன்று நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரத்திலோ குணம் அடைந்து விடக்கூடிய விஷயம். இந்த குறிப்பிட்ட காலம் கடந்தும் அது குணமாகவில்லை என்றால்..சைனசின் எல்லைக்குள் பிரச்சினையை அது தள்ளி விடுகிறது என்று சந்தேகப்படலாம்.
ஜலதோஷத்துக்கு வைரஸ் தாக்குதல் தான் காரணம் என்று சொல்வதைப் போல், சைனசுக்கு என்ன காரணம்? என்றாலும் பெரும்பாலும் ஜலதோஷத்தின் தொடர்ச்சியான அவதாரமாகத் தான் சைனஸ் திகழ்கிறது.
ஜலதோஷத்தின் விளைவாக உருவாகும் சளி, சைனஸ் அறைகளில் போய் தேங்கும். அது சில நாட்களிலேயே வெளியே வந்துவிட வேண்டும். இது தான் ஜலதோஷம் குணமாகிவிட்டதன் அறிகுறி. அப்படி இல்லாமல், உள்ளே போன சளி திரவம், வெளியே வரமுடியாத அளவுக்கு அப்போது அறைக் கதவுகள் சில காரணங்களால் அடைத்துக் கொள்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் சைனசின் ஆரம்பம்.
கிருமிகள் கலந்த சளி அந்த அறைக்குள்ளேயே தொடர்ந்து இருக்கும் போது, நாளடைவில் அது சீழாக உருமாறும். அதன் விளைவுகள் பேச்சு, சுவாசம் என்று பல வகைகளிலும் வெளிப்பட்டு சிரமப்படுத்தும்.
சைனஸ் அறைகள் எப்படி அடைத்துக் கொள்கின்றன? அதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணங்கள் இருக்கின்றனவா?
சைனஸ் அறைகள் பற்றியும் அவற்றின் இருப்பிடம் பற்றியும் விவரித்தால் தான் இந்தப் பிரச்சினை புரியும். வலது, இடது என்று மொத்தம் நான்கு ஜோடி சைனஸ் அறைகள் இருக்கின்றன.
நெற்றிப் பகுதியில் பிரன்டல் சைனஸ் அறைகளும் அதற்குச் சற்று கீழே எத்மாய்டு சைனஸ் அறைகளும், மூக்குக்குப் பின்னால் ஸ்பீனாய்டு சைனஸ் அறைகளும் இருக்கின்றன. முன்பக்கம் பிரதானமாக இருப்பது மேக்சிலரி சைனஸ் அறைகள். எல்லோருக்குமே இந்த எட்டு சைனஸ் அறைகளும் இருந்தாக வேண்டும் என்பது கட்டாயமில்லை. 17 சதவீதம் பேருக்கு பிரன்டல் சைனஸ் அறைகளில் வலதோ அல்லது இடதோ மட்டுமே தான் இருக்கிறது.
மூக்கின் அனைத்துச் செயல்களுக்கும் உறுதுணையாக நிற்கும் இந்த சைனஸ் அறைகளின் முக்கியமான பயன் நாம் எழுப்பும் சத்தத்துக்குச் சரியான ஒலி வடிவம் தருவது. தவிர, கண்களுக்கும் மூளைக்கும் காற்றடைத்த மெத்தை மாதிரி இருந்து இது உதவி செய்கிறது. (எலும்பு மட்டுமே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தால் தலைக்கனம் அதிகமாகிவிடும் என்று அவற்றை காற்றறைகளாக கடவுள் படைத்திருக்கிறான் என்று அதன் இன்னொரு பயன் பற்றி டாக்டர்கள் கிண்டலாகவும் குறிப்பிடுவார்கள் சரி...
மூக்கு வழியாகத் திறந்தவெளி உலகத்தோடு தொடர்பு கொண்டிருக்கும் இந்த சைனஸ் அறைகள் அடைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன.
மூக்கின் நடுவில் இருக்க வேண்டிய தடுப்புச்சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும், அந்தத் தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே வளைந்து இருக்கும் பட்சத்தில் இந்த வளைவு அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை எப்போது வேண்டுமானாலும் அடைத்துவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அடைப்புக்கான அடுத்த காரணம், அந்த அறை வாசலில் நிகழும் சதை வளர்ச்சி. மூன்றாவதாக, தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் தூசுகளும் வேதிப் பொருட்களும் மூக்குக்குள் போய் டர்பினேட்டுகள் என்னும் ஜவ்வுகளைத் தாக்கி பிரச்சினையை உண்டுபண்ணுவது,
குழந்தைகளுக்கு அடினாய்டு சதை வளர்வது இன்னொரு காரணம். சைனஸ் அறைகளில் சளி போய் தங்கிய பிறகு மேற்சொன்ன காரணங்களால் அறைவாசல் அடைத்துக் கொண்டால் தொந்தரவுகள் ஆரம்பமாகிவிடும். என்ன மாதிரியான தொந்தரவுகள் என்றால் தலைபாரமாக இருக்கும். குனிந்தாலும் நிமிர்ந்தாலும் கூட `விண்விண்' என்று தெறிக்கற மாதிரி தலைவலிக்கும்.
லேசாக இருமினாலும் வலி தான் மூக்கடைப்பு என்பது சைனசின் இணைப்பு பிரச்சினை என்பதால், மூக்கும் அடைத்துக் கொண்ட மாதிரி இருக்கும்.
இதனால் சுவாசிக்கவே சிரமமாக இருக்கும். வாசனை தெரியாது. வாசனை அறிய முடியாததால் ருசியையும் உணர முடியாது. பேச்சு தெளிவாக இருக்காது. `மூக்காலேயே பேசறான்யா' என்று அடுத்தவர்கள் காமெண்ட் அடிப்பார்கள்.
காய்ச்சல் வரலாம். இதைத் தொடர்ந்து கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் சந்திக்க வேண்டிய விபரீதங்கள் ரொம்பவும் சீரியசானவை. சைனஸ் என்பது 90 சதவீதம் ஜலதோஷத்தின் விளைவு தான் என்றாலும் அதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன. சாதாரண சொத்தைப் பல்லுக்கும் சைனசுக்கும் தொடர்பு இருக்கிறது.

No comments:
Post a Comment