Pages

Tuesday, 26 June 2012

எல்லா தோஷமும் நீக்கும் எழில்மிகு தெய்வங்கள்


எல்லா தோஷமும் நீக்கும் எழில்மிகு தெய்வங்கள்:

பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள திருமங்கலத்தில் உள்ளது, சாமவேதீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அருளால் ஜைமினி முனிவர் சாம வேதத்தை 1000 சாகைகளாக இத்தலத்தில் பிரித்தார். எனவே இத்தலத்து இறைவன் சாமவேதீஸ்வரர்
 என்றும் அழைக்கப்படலானார். இறைவியின் பெயர் உலகநாயகி. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகிய ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் விசாலமான பிராகாரம். அங்கே கொடிமர விநாயகர் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்து கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அடுத்துள்ளது சிறப்பு மண்டபம். இந்த மண்டபத்தில் வலதுபுறம் இறைவி உலக நாயகி அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவியின் அர்த்த மண்டப நுழைவாயில் துவார பாலகிகளின் சுதை வடிவ திருமேனிகள் அழகாய் அமைந்துள்ளன.
அடுத்துள்ள மகாமண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் இருக்க, அர்த்தமண்டபத்தின் வலதுபுறம் சண்டிகேஸ்வரரின் திருமேனி தரிசனம் தருகிறது. அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமவேதீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவகோட்டத்தில் தென் திசையில் பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோரும், கீழ் திசையில் சங்கரநாராயணன், வடதிசையில் பிரம்மாவும் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
பிராகாரத்தின் தென் திசையில் பரசுராமர் பூஜை செய்த லிங்கமும் கிழக்கு பிராகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, ஆனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும் அருள்காட்சி நல்குகிறார்கள். வடக்குப் பிராகாரத்தில் அப்பர், சம்பந்தர், ஆனாயநாயனார், பாணலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சந்நதி கொண்டிருக்கிறார்கள். ஆனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த அம்மனின் சந்நதியும் இங்கு உள்ளது.  கிழக்கு பிராகாரத்தில் பைரவர், காலபைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி என்னும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு.
சண்டிகேஸ்வரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க இத்தலத்தில்  இறைவனின் சந்நதியின் இடதுபுறம் இருந்து அவரை வணங்க, அவரது தோஷம் விலகியது.  இறைவனின் அர்த்த மண்டப நுழைவாயிலில் சண்டிகேஸ்வரரின் திருமேனியை நாம் காணலாம். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் ஆகும்.
இங்கு கிழக்கு பிராகாரத்தில் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கும் முருகப் பெருமான் வித்தியாசமாக, ஆறுமுகமும் நான்கு கைகளும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தவிர முருகன் வள்ளியை மணந்தபின் இத்தலம் வந்ததால் முருகனும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க வள்ளி மட்டும் மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதும் ஓர் அற்புத காட்சியாகும்.
இங்கு அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியும் வித்தியாசமானவர்தான். வழக்கம்போல் சின்முத்திரை காட்டாமல் அபய முத்திரை காட்டுகிறார் இவர்! இதனால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தோஷ நிவர்த்தி தருவதுடன் கல்வி செல்வத்தையும் வாரி வழங்குகிறார் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இத்தல விஷ்ணு துர்க்கை வழக்கமான மகிஷ வாகனம் இன்றி, சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத பெண்கள் 11 வெள்ளிக்கிழமைகள் இந்த விஷ்ணு துர்க்கையை வழிபட அவர்கள் திருமணம் தடையின்றி நடைபெறுவது நிஜம் என்பது பலரது அனுபவம். மணமானதும் தங்கள் கணவருடன் வந்து துர்க்கைக்கு மஞ்சள் காப்பு அணிவித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர் அந்தப் பெண்கள்.
இழந்த செல்வத்தை மீண்டும் பெற வழி செய்கிறார்கள் இங்குள்ள மகாலட்சுமியும், பாணலிங்கேஸ்வரரும். மகாலட்சுமிக்கு வெண்ணெய்க் காப்பு அணிவித்து, பாணலிங்கத்துக்கு அர்ச்சனை செய்து இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றிருக்கிறார்கள் பல பக்தர்கள்.
சனிபகவானின் வாகனம் காகம். பொதுவாக காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சனிபகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். சனி பெயர்ச்சியின்போது இங்குள்ள சனிபகவானுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். ஜென்ம சனி, பாத சனி, அஷ்டம சனி ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் இந்த சனிபகவானை வழிபடுவதால் விலகி ஓடுகிறது.
இந்த ஆலயத்தில் பைரவரும்  கால பைரவரும் சேர்ந்து இருப்பது இன்னொரு அற்புதமான அமைப்பாகும். அர்த்தஜாம பூஜையின்போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால் சகல விதமான பில்லி சூன்யம் பாதிப்புகளும் நோய்களும் குணமாகின்றன.
63 நாயன்மார்களில் 14மவர், ஆனாய  நாயனார். அவர் அவதரித்த தலம் இது. இவர் கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அந்த நாளை அவரது குருபூஜை நாளாக இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
ஆலயத்தின் தலவிருட்சம் பலாமரம். மகம் நட்சத்திர தினத்தன்றும் சனிக்கிழமையன்றும் இக்கோயிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானம் செய்தால் ஆரோக்கியம் கூடி ஆயுளும் பெருகுகிறது என்பது ஐதீகம்.
திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் என்ற இந்த தலம்.
Key word:எல்லா தோஷமும் நீக்கும் எழில்மிகு தெய்வங்கள்

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads