மாணவிக்கு இந்தியன் வங்கி உதவி
தாயின்றி 3 உடன்பிறந்தோருடன் பிளாட்பாரத்தில் வசித்து 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு இந்தியன் வங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளது. சென்னை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள பள்ளி மாணவி திவ்யா. 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வீடு கிடையாது.
பிளாட்பாரத்தில் தங்கி தெரு விளக்கில் படித்து வந்தார். இதுபற்றி ஆங்கில நாளேட்டில் வந்த செய்தியை பார்த்து இந்தியன் வங்கி தலைவர் பாசின், மாணவிக்கு உதவ முன்வந்தார்.
திவ்யாவை வங்கியின் நிர்வாக அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, இனி அவரது படிப்புக்கு ஆகும் செலவை வங்கி ஏற்கும் என்று தெரிவித்தார். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு வரை கல்வி கட்டணம், புத்தகம், எழுதுபொருட்கள் செலவை இந்தியன் வங்கி ஏற்கிறது. 12ம் வகுப்பில் 75 சதவீதமும், பட்டப் படிப்பில் 60 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று திவ்யாவிடம் பாசின் தெரிவித்தார்.
மேலும், மாணவியின் பெயரில் வங்கி சார்பில் ரூ.1,100 பங்களிப்புடன் சேமிப்பு கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டது. இப்போது பிளாட்பாரத்தில் தங்கியுள்ள அவரது குடும்பத்தினர் தங்க ஒரு அறை வாடகையாக ரூ.1,000, மின் கட்டணம் ரூ.200 வரை வங்கி அளிக்கும் என்றும் பாசின் அறிவித்தார். இவ்வாறு இந்தியன் வங்கி செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment