Pages

Monday, 25 June 2012

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள்:


சிதரால்மலைமீது அமைந்துள்ள திருக்கோயில். சமணமத தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நிறைந்த அழகுக் கோயில். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படும் இக்கோயிலை தரிசிக்க கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. செல்ல வேண்டும்.
காந்தி நினைவாலயம்:
மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவாலயம். முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேசத் தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா பிறந்த அக்டோபர் 2 ஆம் நாள் மட்டும் ஒரு குறுகிய துளையின் வழியாக அஸ்தி கலசத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது. கடலில் கால் நனைக்கும் முன் அகிம்சை அண்ணலை ஞாபகம் கொள்ளுங்கள்.
அரசு அருங்காட்சியகம்:
தென்னிந்திய கோயில்களின் கைவினை கலைபொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள காட்சியகம். கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. குமரிக்குச் செல்லும் பயணிகள் இங்கும் ஒருமுறை சென்று வாருங்கள். புதியதொரு அனுபவத்தை உணர்வீர்கள்.
குகநாதசுவாமி கோயில்:
தென்கோடி முனையிலும் சோழர்கள் கால்தடம் பதித்துள்ளார்கள் என்பதற்கு இக்கோயில் ஒரு சான்றாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் கட்டிய கோயில் என்று கருதப்படுகிறது. சோழர்களின் கட்டடக் கலை பாணியில் மிளிரும் குருநாதசுவாமி கோயிலிலுள்ள பதினாறு கல்வெட்டுகள் அதன் வரலாறைச் சொல்கின்றன. இக்கோயில் குமரி ரயில் நிலையம் அருகே உள்ளது. நேரம் காலை 6-11.15 மாலை 5-8.15 மணி வரை.
காமராசர் நினைவாலயம்:குடும்பத்தில் பிறந்து, முதல்வராக உயர்ந்தவர் பெருந்தலைவர் காமராசர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி விளக்கை ஏற்றியவர் கர்மவீரர். படிக்காத மேதை என்று தமிழக மக்களால் புகழப்பட்ட மக்கள் தலைவர் காமராசரின் நினைவாலயம். இது 2000 அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைக்கபட்டது.
ஜீவா மணி மண்டபம்:
ஜீவா எனப்படும் ப.ஜீவானந்தம் எளிமையான தலைவர். தமிழகத்தில் மார்க்சிய இயக்கம் வளரக் காரணமாக இருந்த மார்க்சிய இயக்க முன்னோடி. தாமரை, ஜனசக்தி போன்ற பத்திரிகைகளின் வாயிலாகப் பொதுவுடமை. கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றவர். தமிழ் இலக்கியத்தில் புலமை மிக்கவர். சென்னை வண்ணாரப்பேட்டையின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். சிறந்த நாடாளுமன்றவாதி. இந்த அரிய தலைவரை பெருமைப்படுத்தும் விதமாக ஏப்ரல் 18, 1998 இல் நாகர்கோயிலில் இந்த நினைவாலயம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது உருவச்சிலை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குமரியம்மன் கோயில்:
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம்போல அமையப் பெற்றிருக்கிறது குமரியம்மன் கோயில். இந்த அம்மனின் பெயருக்குக் காரணம் இருக்கிறது. குமரி அம்மன் சிவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில் காலம் முழுதும் கன்னியாகவே வாழ ஒரு நோன்பை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவே கன்னியாகுமரி என்று பெயர் வரக்காரணம் என்கிறார்கள். குமரியம்மனின் வைர முக்குத்தியின் ஜொலிப்பை கடலில் இருந்தும் கூடப் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். தொலைபேசி - 04652 - 246223.
அரசு பழப்பண்ணை:
பழங்கள் செழிப்பின் அடையாளம். பழங்களை கூடையில் பார்ப்பதைவிட தோட்டத்தில் பார்ப்பது தனியொரு அற்புத அனுபவம். இந்த அரசு பழப்பண்ணையில் பல்வேறு பழ வகைகள், நூற்றுக்கணக்கான செடி வகைகள் மற்றும் பல நறுமண மரங்களைக் காண முடியும். கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் சாலையில் 2 கி.மீ. சென்றால் பழப்பண்ணையை அடையலாம். நேரம் காலை 9-11 மதியம் 1-3 மணி வரை. விடுமுறை சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.
மாத்தூர் தொங்குபாலம்:
ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம். 115 அடி உயரமும் 1 கி.மீ. நீளமும் உடையது. அப்பாடா! நேரில் பார்த்தால் நிச்சயம் அசந்து போவீர்கள். திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் அருவிக்கரை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது தொங்கு பாலம். பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் வழியே பட்டணம்கல் மலையிலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்காவும் நீராடும் துறையும் இருக்கின்றன.
மருத்துவ மலை:
மருத்துவ மலை மருந்து வாழும் மலை என்று அழைக்கப்படுகிறது இது மருத்துவ மூலிகைகள் விளையும் பண்ணையாக இருக்கிறது. ராமனின் தம்பி லட்சுமணன் போரில் அடிபட்டு காயமடைந்தபோது அனுமன் அக்காயத்தை குணப்படுத்துவதற்காக மகேந்திரபுரியிலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்ற சஞ்சீவி மலையின் ஒரு துண்டு இங்கு விழுந்து மருத்துவ மலையாக நிற்கிறது என்று கதை. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன. இம்மலையின் உச்சி 800 அடி. இது நாகர்கோயிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
முக்கூடல்:
முக்கடல் சங்கமித்தால் என்ன? நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீரை முக்கூடல்தான் வழங்குகிறது. இந்த அணையை கட்டியவர் சித்திரை மஹாராஜா. சுசீந்திரம், கன்னியாகுமரி நகராட்சிகளுக்கும் தண்ணீர் தாகத்தை முக்கூடல்தான் தணிக்கிறது. சுற்றிப் பார்த்து மகிழ சிறந்த இடம். கூட்டமாகச் சென்று குதூகலித்து வாருங்கள்.
முருகன் குன்றம்:
மனித சஞ்சாரமற்ற ஓர் அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையா? அப்படியானால் செல்ல வேண்டிய இடம் முருகன் குன்றம். வெயில் பொழுதுகளிலும் நிலாப் பொழுதுகளிலும் ஆளரவமற்ற அமைதி குடியிருக்கும் குன்றம் இது. சித்ரா பௌர்ணமியன்று முருகன் குன்றம் கோடியழகு. இங்கு செல்ல கன்னியாகுமரியிலிருந்து 2 கி.மீ. பயணிக்க வேண்டும். சம்மதம் தானே?
முட்டம்:
கடல் உரசும் கரைகள்; அலை புரளும் கடல், ஒரு தனித்துவமான கடலோர கிராமம் முட்டம். அப்படியே அமைதியாக நேரம் போவது தெரியாமல் மணற்பரப்பில் அமர்ந்துவிடலாம். என்னவொரு அழகு. சொல்லில் சிக்காத காட்சிகள் ஏராளம். நம்மைக் கண்சிமிட்டி அழைக்கும் கலங்கரை விளக்கம் இங்குண்டு. கன்னியாகுமரியிலிருந்து முட்டம் கிராமம் பார்க்க 40 கி.மீ. செல்லமாட்டீர்களா என்ன.?
திருவள்ளுவர் சிலை:
தமிழினம் செழிக்க இரண்டடி குறள் தந்த வள்ளுவருக்கு விவேகானந்தர் பாறையில் எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயரச் சிலை. இந்த உயரம் 133 அதிகாரங்களை நினைவுபடுத்துகிறது. நவீன கட்டடக் கலையின் அழகையும் திராவிடக் கலை நுட்பங்களையும் உள்ளடக்கி 5000க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உளியில் பிறந்த அற்புதம். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட நினைவுச் சின்னம். படகுகள் மூலம் சிலையினைப் பார்வையிடலாம்.
இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது. உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது. பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
சிலை குறிப்புகள்:
மொத்த சிலையின் உயரம் - 133 அடி
சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி
சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் மொத்த எடை - 7,000 டன்
சிலையின் எடை - 2,500 டன்
பீடத்தின் எடை - 1,500 டன்
பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
சிலை அளவுகள்
முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3 அடி
தோள்பட்டை அகலம் -30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
விவேகானந்தபுரம்
விவேகானந்தா கேந்திராவின் தலைமையகம் விவேகானந்தபுரம் என்று அழைக்கப்படுகிறது. இளைஞர்களின் மனங்களில் தன்னம்பிக்கையை விதைத்த விவேகானந்தரின் வாழ்க்கையை விவரிக்கும் படங்களும் அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் தங்கிச் செல்ல வசதிகள் இங்குண்டு மாகடல் நீரிலிருந்து சூரியன் மேலெழும் பரந்து விரிந்த காட்சியை விவேகானந்தபுரம் கடற்கரையிலிருந்து பார்ப்பது அற்புதம்.
உலக்கை அருவி:
கோடையிலும் வற்றாத அருவி இது. தோவாளை வட்டம் அழகிய பாண்டியபுரத்தில் அமைந்துள்ள இயற்கை அற்புதம். இயற்கையின் பேரழகை ரசிக்கவும் அருவியில் நீராடி மகிழவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அரசின் பாதுகாப்பிலுள்ள பாதை வழியாகச் சென்று அருவியை அடைய வேண்டும்.
உதயகிரி கோட்டை:
தமிழகத்தின் பழமையான நினைவுச் சின்னம். மார்த்தாண்டவர்மன் ஆட்சி செய்த கால கட்டத்தில் (கி.பி. 1729 - 1758) கட்டப்பட்ட கோட்டை. இங்கு ஒரு துப்பாக்கி பட்டறையும் டச்சுக்காரரான தளபதி டிலானியின் கல்லறையும் இருக்கிறது. டச்சு தளபதி பற்றி ஒரு சுவாரசியமான கதை உண்டு. குளச்சலில் நடந்த போரில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதியான டச்சு தளபதி டிலானி மன்னன் மார்த்தாண்ட வர்மனின் நம்பிக்கையைப் பெற்று விசுவாசமான தளபதியாக உயர்ந்தான். அதுமட்டுமல்ல மார்த்தாண்ட அரச வீரர்களுக்கு ஐரோப்பிய போர் முறையைக் கற்றும் தந்தானாம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைப் பகல் நேரத்தில் மட்டுமே பயணிகள் பார்த்து களிக்க முடியும்.
வள்ளிமலை:
முந்நூறு படிகள் ஏற சம்மதமா? அப்படியென்றால் குன்றின் மீது அமைந்த வள்ளிமலை கோயிலைத் தரிச்சிக்கலாம். ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று அடுக்குள் கொண்டது. விநாயகப் பெருமானும் காசி விசுவநாதரும் எழுந்தருளியுள்ள இக்கோயில் பல்லவர் மற்றும் நாயக்கர் கால கட்டடக் கலைப் பாணியில் அமைந்தது.
தெக்குறிச்சி கடற்கரை:
ஓர் அமைதியான கடற்கரையைக் கொண்ட கடலோர குட்டி கிராமம் தெக்குறிச்சி. சவுக்கு மரங்களின் வரிசையில் கடலைப் பார்ப்பது கவின்மிகு அனுபவம். சுற்றிப் பார்க்க சிறந்த இடம் என்ற பெயர் சுற்றுலாப் பயணிகளிடம் உண்டு. மேற்குக் கடற்கரை சாலையில் உள்ளது.
திரிவேணி சங்கமம்
முக்கடல் சங்கமம், வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமாக் கடல் என முக்கூடலும் சங்கமிக்கும் புனித நீர்த்தலம். குமரிக்குச் செல்கிறவர்கள் சங்கமத்தை தரிசிக்காமல் திரும்பக் கூடாது.
வட்டக்கோட்டை:
இதுவொரு கம்பீரமான கற்கோட்டை. குமரி முனையின் வடகிழக்கில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இக்கோட்டை தென் திருவிதாங்கூர் வரிசை என்று சொல்லப்படும் எல்லைக் காப்பரண் வரிசையில் வருகிறது. நாஞ்சில் நாட்டு பாதுகாப்பிற்காக மன்னன் மார்த்தாண்டவர்மன் கட்டினான். கோட்டையின் உட்புறத்தில் உறுதி வாய்ந்த உட்புறக் கட்டுக்கள் மன்னனின் டச்சுத் தளபதி டிலானியின் உத்தரவின் கீழ் கட்டப்பட்டவை. செங்கோண வடிவிலான இந்த வட்டக்கோட்டை மூன்று ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இதன் அழகை பிரமாண்டத்தைக் காண ஒருமுறை சென்று வாருங்கள். இனி வார்த்தைகள் போதும்.
திற்பரப்பு அருவி:
ஒரு பரந்து விரிந்த பார்வையைத் தரும் திற்பரப்பு, அழகும் புனிதமும் ஒன்று கூடிய இடம். இங்குள்ள புனித அருவியும் பச்சை மலையும் கோதையாறும் நம்மை வசீகரித்துக் கொள்ளும் அழகின் தொட்டில்கள் பளிச்சென மின்னி தெறித்து விழும் இந்த அருவி பார்வைக்கு விருந்தளிக்கிறது. தரையில் கொட்டும் அருவி தலையில் முட்டும்போது புத்துணர்ச்சி கிடைக்கும். நீராடி மகிழ திற்பரப்பு திகைப்பூட்டும் அனுபவம் தரும்.
தேங்காய்ப்பட்டினம் கடற்கரை:
தென்னந்தோப்புகள் நிறைந்த கடற்கரை கிராமம். இது பழங்காலத்தில் வெளிநாடுகளுடன் குறிப்பாக அரேபியாவோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆற்றின் கழிமுகக் கரைகளில் தென்னந்தோப்புகள் சூழ அழகிய தாமிரபரணி இங்கு கடலில் சங்கமிக்கிறது. தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இந்தக் காயலில் படகு சவாரி செய்யும் அனுபவம் தனிப்பரவசம். விளவங்கோடு வட்டம் பேயன்குளம் கிராம் அருகே மேற்குக் கடற்கரை சாலையில் தேங்காய்ப்பட்டினம் அமைந்துள்ளது. இந்தக் கடலோர கிராமத்தை கண்டுகளிக்க நாகர்கோவிலிருந்து 35 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்
சகோதர, சகோதரிகளே என்ற சொல்லில் உலகைக் கட்டிப் போட்டவர். எழுமின்!விழுமின்! என்ற வார்த்தைகளின் மூலம் இளைய மனங்களில் எழுச்சி தீபம் ஏற்றியவர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர். குமரிப் பாறையில் விவேகானந்தரின் சிலையும் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு அமைதி தவழும் தியான மண்டபம் இருக்கிறது. படகுகள் மூலம் பாறையை அடைவது ஒரு பரவச அனுபவம்.
வேலுத்தம்பி தளவாய் நினைவாலயம்
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர்புரிந்த மாவீரன் தளவாய் வேலுத்தம்பியின் நினைவாயலம் கல்குளம் வட்டத்திலுள்ள குக்கிராமமான தல்லாகுளம்தான். இந்த மாவீரன் பிறந்த தொட்டில்பூமி. இவரது வீட்டை ஆங்கிலேயர்கள் இடித்து விட்டார்கள். ஆனால் அவரது உடன் பிறந்தவர்கள் அந்த வீட்டைக் கட்டினர். இப்போது இவ்வீட்டில் தளவாய் வேலுத்தம்பி நினைவாக அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலிருந்து 30 கி.மீ. பயணித்தால் தல்லாகுளத்தை அடையலாம்.
Key word:கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads