புதுடில்லி:ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேயும், பாபா ராம்தேவும், முதல் முறையாக, டில்லியில் இன்று ஒன்றாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ஊழலை எதிர்த்து நாடு தழுவிய அளவில் அறப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதேபோல், கறுப்பு பணத்துக்கு எதிராக, யோகா குரு பாபா ராம்தேவும் போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், ராம்தேவின் பாரத் ஸ்வபிமான் அந்தோலன் அமைப்பு சார்பில், டில்லி ராம்லீலா மைதா னத்தில் இன்று, ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணா விரதத்தில் ராம்தேவுடன், முதல் முறையாக அன்னா ஹசாரேயும் பங்கேற்கவுள்ளார். காலை 8 மணிக்கு தொடங்கும், இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6 மணியளவில் முடிவடையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
எதிர்பார்ப்பு :ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும், இந்த இருவரும் முதல் முறையாக ஒன்றாக இணைந்து உண்ணாவிரதம் இருப்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சமீபத்தில் ராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற, வி.கே.சிங் ஆகியோரும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிரான, நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு குறித்த, மேலும் பல விவரங்களைப் பற்றி, இருவரும் பேசவுள்ளதாக, ராம்தேவ் ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் தடியடி:கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாபா ராம்தேவ், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவரின் ஆதரவாளர்கள் கூடியிருந்த ராம்லீலா மைதானத்தில், நள்ளிரவில் டில்லி போலீசார் நுழைந்து தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். அன்றிரவு நடந்த தள்ளுமுள்ளுவில், ராம்தேவின் நூற்றுக் கணக்கான ஆதரவாளர்களான பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காயம் அடைந்தனர். காயமடைந்த ஒரு பெண் பின்னர் மரணமடைந்தார். ராம்தேவை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஹரித்துவாரில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு "ஹெலிகாப்டர்' மூலம் கொண்டு செல்லப்பட்டார். டில்லி போலீசாரின் இந்த அத்து மீறிய நடவடிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
ஆடிப்போயுள்ள காங்.,:கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து இன்று ராம்தேவ், மீண்டும் டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். அண்ணா ஹசாரே இந்த உண்ணாவிரதப் போராட்டத் தில் பங்கேற்பதால், இவர்களின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, ஆளும் காங்கிரஸ் கட்சி ஆடிப்போய் இருக்கிறது என்று ராம்தேவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கடந்த 10 நாட்களாக டில்லி ஒரு அக்னி குண்டமாக இருந்து வருகிறது.45 டிகிரி சென்டிகிரேட் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment